187
187. மக்களுலகில் பெண் வழி நின்று அவர் ஏவின செய்து அவரை மகிழ்விப்பதே தமது வாழ்வின்
குறிக்கோளாகக் கொண்டு சிலர் வாழ்கின்றனர். அவர் மகிழ்ந்தால் தாம் மகிழ்வதும், வருந்தினால்
தாம் வருந்துவதும் சிலர் செய்கின்றார்கள். இவருட் பின்னையோர் மகளிர்பாற் கொண்ட உண்மையன்பினால்
இவ்வாறு ஒழுகுகின்றார்கள். முன்னையோர் மகளிர்பாற் பெறலாகும் இன்பத்துக்கு அடிமையாகித் தமது
தனித்தன்மையை இழந்த மெல்லியராவர். தனித் தன்மையாவது ஆண் மகற்குரிய ஆண்மைத் தன்மை. தனது
ஆண்மையைப் பேணாமல் பெண்மகளின் பெண்மையைப் பேணி ஏற்றமும் தலைமையும் தருபவனைப் “பேணாது பெண்
விழையும் நாணிலி” எனத் திருவள்ளுவர் இகழ்கின்றார். அச் செயல் அவற்கு இயல்பன்று என எடுத்துரைக்கின்றார்.
மனை வாழ்வில் பெண்ணுக்குத் தலைமை தந்து அவள் அருவருடிப் பணிந்து வாழ்பவன் இம்மை யின்பமேயன்றி
மறுமையின்பத்தையும் ஒருபோதும் பெறான் என அறிஞர் அறிவிக்கின்றார். “நாட்டவர் குறைமுடியார்
நன்றற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகுமவர்” (குறள். 908) என வுரைக்கிறது திருக்குறள். இங்ஙனம்
பெண்ணின்பத்துக்கு மனத்தையிழந்து, அவட்கு அடிமைப்படுத்தினவன் வீறுதரும் வினையாதும் செய்ய மாட்டான்;
ஒருகாற் செய்வானாயினும், அவனது வினை வீறு பெறாது என மேலோர் விளம்புகின்றார்கள். அவனுடைய நிலைமையைக்
காண்கின்ற வடலூர் வள்ளல் அவன் மனைவியை நோக்குகின்றார். அவளோ வளையணிந்த தன் கையை காட்டுகிறாள்;
கை நீளும் திசையிலே அவன் தலை திரும்புகிறது; மனம் பாய்கிறது. மையணிந்த தன் கண் விழியைச்
சுழலுவதுபோல அவன்மனமும் சுழன்று திரிகிறது. அவன் மனமோ கணப்போதும் நிலையின்றி அலைகிறது. குரங்காட்டிபோல
அவள் ஆட்டுவதும், அவ்வாடவனது நெஞ்சம் ஆடுவதும் கண்ட அடிகளார் அவளுடைய மனத்தை நோக்குகிறார்.
அவள் மனத்தின்கண் அவன் மார்பின் அன்புமாலை யில்லை; குரங்காட்டும் கோல்போல வன்மை காணப்படுகிறது.
அவனுக்கும் அவள் மனத்துக்கும் நெருக்கமில்லை, அவள் மனம் அவனுக்குச் சேய்மையில் நின்று அவனை
ஏவியவண்ணம் இருக்கிறது. மற்றொருபால் அன்பும் அறமும் கல்லாத கல்மனவன் ஒருவனைக் காண்கிறார்.
அவன் மனத்தில் உரம் விஞ்சி நிற்கிறது; கொடுமை கோலாகக் காட்சி தருகிறது; அவன் வாயில்
இடிக்குரல் உரறுகிறது. மரக்கிளையை நிறுத்தி அதன்மேல் ஏறுக எனக் கைக்கோலைக் காட்டித் தன் குரங்கை
ஆட்டும் குரங்காட்டிபோல மனைவியை ஆட்டி அலைக்கின்றான். வள்ளலார் இருபாலரிடத்தும் வன்கண்மை
மிக்க நெஞ்சம் செய்யும் கொடுமையைக் கண்டு வருந்துகின்றார்.
இறைவனை நோக்கி, ஆண்டவனே, இந்நிலைமை ஏன்? என்று முறையிடுகின்றார்.
2357. கரங்காட்டி மையிட்ட கண்காட்டி
என்பெருங் கன்மநெஞ்சக்
குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற
மாதரைக் கொண்டுகல்லார்
உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக்
காட்டி உரப்பிஒரு
மரங்காட் டியகுரங் காட்டுகின்
றோரென் மணிகண்டனே.
உரை: நீலமணி போலும் கண்டத்தையுடைய பெருமானே, கல்லாத மகளிருள் கைகாட்டியும் கண்காட்டியும் ஆடவனது பெருங்கன்ம நெஞ்சமாகிய குரங்கை ஆட்டி, அன்பெல்லைக்குச் சேய்மையில் நிற்கின்ற மனைவியைக் கொண்டு பெறுவது என்? ஆடவருள் உரம்மிக்க நெஞ்சினராய் மனையவள்பால் கொடுங்கோலராய் இடிக்குரலால் அச்சுறுத்தி மரமேற்றிக் குதிப்பித் தாட்டும் குரங்காட்டி போல்பவரும் உள்ளனரே. இஃது என்? எ.று.
கண்ணுக்கு மையும் கைக்கு வளையும் சிறந்தவையாதலால், கரங்காட்டி என்பதற்கு வளையணிந்த கைகாட்டி எனப் பொருள் கூறுக. அன்பில்லாத ஒருத்தியை மனையாட்டியாகக் கொண்டு அவள் விருப்பின் வழி ஓடித் துன்புறும் நெஞ்சினும் பெருந் தீவினையுடையது வேறு இல்லாமை தோன்றப் “பெருங்கன்ம நெஞ்சம்” என்று பேசுகின்றார். ஏழைக் குரங்காட்டிக்கு அக் குரங்கின்பால் உள்ள அன்பளவு அவட்குக் கொண்டவனான ஆடவன்பால் இல்லை என்றற்குக் “குரங்காட்டிச் சேய்மையில் நிற்கும் மாதரைக் கொண்டு என்?” எனக் கூறுகின்றார். உரம் - இங்கே வன்கண்மை. கோல் - கொடுமை சுட்டி நிற்கிறது. “கொடியவன் பெண்டாட்டிக்குக் குனிந்தால் அடி நிமிர்ந்தால் அடி” என்பது உலகுரை. “ஆகாத பெண்டாட்டி கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்பதும் உண்டு.
இதனால் அன்பில்லாத நெஞ்சின் கொடுமை ஆண் பெண் இரு பாலரிடத்தும் செய்யும் தீமை கூறி முறையிடுவது பயன். (187)
|