188

       188. உலகியற் பொருள்களை அறிதற்கும் ஒன்றைச் செய்தற்கும் இவற்றைச் சிந்திப்பதற்கும் மனம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதனை மின்சத்தியைப்போலப் பயன்படுத்துகிறோமேயன்றி, அஃது அம் மின்சத்திபோல இன்ன தன்மையது என்று நம் அறிவுக்கு அகப்படக் கூடியதாக இல்லை. ஒரு கால் நம் வயப்பட்டு நின்று இயங்குவதும் பலகாலும் நம்மைத் தன் வயப்படுத்தித் தன்போக்கில் ஈர்த்துக் கொண்டு ஓடுவதும் செய்கிறது. அது மாத்திரம் நம் வயமே நின்று, நாம் விரும்புகிற நெறியிலேயே இயலுமாயின், எல்லா நலங்களையும் எட்டுணையும் தட்டின்றிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற உண்மையை அடிகளார் திருவுள்ளம் நன்கு தெளிந்திருக்கிறது. இந்த மனம் நம் அறிவை விடப் பெரியதா, சிறியதா என்று நோக்கிப் பெரியதாயின் பெருமைக்கெல்லாம் எல்லையாயுள்ள பெருமானிடம் முறையிட்டு “மின் பெரிய பொருள் எமக்குக் கருவியாவது பொருந்தாது” என முறையிடலாம்; சிறியதாயின் நம்முடைய அறிவாற்றலால் அடக்கி நமது வழிக்குக் கொண்டு செல்லலாம்; அதுதான் முறை. அதற்காக இறைவனை வேண்டுவது செய்தற்குரிய கடனைச் செய்யாதான் செயலாய்க் குற்றமாகும். இன்னோரன்ன எண்ணங்களால் நிறைந்த வடலூர் வள்ளல் மனத்தை நோக்குகிறார். அது அறிவின் ஆற்றலுக்கு அடங்கி ஒடுங்கி நிற்பது பெரியோர்களின் பெருவாழ்வில் பிறங்கித் தோன்றுகிறது; இதனால் மனமாவது அடக்கியாளுதற்குரிய சிறுபொருளாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அது கருவியாக “சிறிய ஆடியில் பெரிய பொருளைக் காண்பதுபோல” இறைவன் திருவடியைக் காணலாம். இறைவனும் அதன்கண் நாம் காணத்தோன்றுவன் எனச் சான்றோர் பன்முறையும் உரைத்துள்ளனர். திருஞானசம்பந்தர், “நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து” (பாச்சில் வெஞ்சுடர்) என்பர். “என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே” எனத் திருநாவுக்கரசர் செப்புகின்றார். மெய்கண்ட தேவர் “உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடுக” என நவில்கின்றார். இத்துணை அருமையும் நயப்பாடும் அமைந்துள்ள மனம், திருவருள் நெறியில் கனியவில்லை; அருட் செல்வத்தைப் பெருக வழங்கும் பெருமானாகிய நின் பேரும் புகழும் இனிது சொல்லியவழியும் கேட்டு உருகுகிறதில்லை; காலம் கழிந்த வழியுமேற்கூறிய செயல்களில் குழைவும் கனிவும் நிறைந்து அன்பு பெருகி நிற்கிறது. “காமஞ்சாலா இளமையில்” ஒரு பெண் அதுபற்றிய நினைவு சொல் செயல்களில் விருப்புறாமல், சிற்றில் இழைத்தும் சிறுசோறு அட்டியும் பாவை நிறுத்தும் பந்து விளையாடியும் இன்புறுவதுபோல இம் மனம் இயலுகிறது. பக்குவமுற்றபோது காதற் காமவின்பத்தை விழையும் இளமகள்போல, மனமும் பக்குவம் எய்தும் போது பத்தி நெறி பற்றி முத்திநெறிக் குரியதாகலாம். இப்போதைய என் விழைவுக்கும் முயற்சிக்கும் துணையும் கருவியுமாகவில்லையே; இதற்கு நான் செய்வதொன்றும் தெரியவில்லையே என முறையிடுகின்றார்.

2358.

     களங்கனி போல்மணி கண்டாநின்
          பொற்கழல் காணற்கென்சிற்
     றுளங்கனி யாதுநின் சீர்கேட்
          கினும்அன் புறஉருகா
     வளங்கனியா காமஞ் சிறவாமல்
          சிற்றில் வகுத்துழலும்
     இளங்கனி போல்நின்ற தென்செய்கு
          வேன்எம் இறையவனே.

உரை:

     இறைவனே, என் சிறிய மனம் நின் பொற்கழல் காண்பதற்குக் கனிவதில்லை; நின் சீர் கேட்பினும் அன்பு மிக்கு உருகுகிறதில்லை; இந்தச் சிறுமையுற்ற மனத்தின் செய்கை காமவுணர்வு சாலாத இளங்கன்னி அதனை நாடாது சிற்றில் இழைத்து விளையாடும் அதன் கண்ணே தோய்ந்திருப்பது போல்கிறது; இதறகு யான் செய்ய வல்லது யாது? ஒன்றும் தெரிகிலேன் எ.று.

     நிறம் கரிதாய் ஒளி சிறந்து விளங்குமாறு தோன்றச் சிவபெருமான் திருக்கழுத்தைக் “களங்கனி போல் மணிகண்டம்” எனப் புகழ்கின்றார். மணிகண்டம் என்றலே அமையும்; “களங்கனி போல்” என்றல் மிகையன்றோ எனின், களங்கனி நஞ்சால் கறுத்தமைக்கு உவமை; மணி கூறியது மிக்க ஒளியுடைமை புலப்படுத்தற்காகும். களங்கனி - களாப் பழம். அக்கனியிடத்தும் ஒளியுளதேனும் அதனினும் மாண்புமிக்க ஒளி இறைவன் கழுத்தில் திகழ்வதனால் மணியை யுவமமாக்கி, “மணி கண்டா” என்று வள்ளலார் உரைக்கின்றார். பொற்கழல் - பொன்னாலாகிய வீரகண்டை. இளையர் காலில் அணிவது பொன்தண்டை; வீரர் அணிவது பொன்னாலாகிய கண்டை. துண்டு துண்டாக நல்ல வேலைப்பாடு அமையச் செய்து பின்பு கோத்து இணைக்கப்படுவதால் கண்டையெனப்படுகிறது. இது பழங்காலத்தில் கழல் என வழங்கிற்று. வீரர் அணியும் இதனை இறைவற்கு அணிவதில் இரண்டு குறிப்புண்டு. இறைவனது தலையாய வீராட்டகாசம் உணர்த்துவது; மற்றொன்று விலங்கிட்டது; உயிர்களைப் பற்றிய வினைகளைப்போக்குவது. இதனை, “கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என நாவுக்கரசர் நவின்று உரைப்பது காண்க. உலகியல் வேட்கை வெம்மையால் உறைத்து இறுகும் மனம் கனிந்தாலன்றி இறையுணர்வும் அதன் திருவடி காண்டற்கண் விழைவும் எய்தாது; அதனால் முதற்கண் வேண்டப்படுவது கனிவு; எனது உள்ளம் தன் சிறுமையால் கனிவு பெறவில்லை என்றற்கு, “பொற்கழல் காணற்கு என் சிற்றுள்ளம் கனியாது” என மொழிகின்றார். பொற்கழல் காண்பது, வினை வளையம் கழன்று அதனால் உண்டாகும் அகத்துணர்வு கெடுதற்பொருட்டு. “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி வினையாவாம்” என சிவஞானபோதம் கூறுவது காண்க. பொற்கழல் காண்டற்கு உள்ளத்தில் கனிவு வேண்டும் என்ற அடிகளார், கனிவு தோன்றின், இறைவன் பொருள்சேர் புகழ்களைக் கேட்பதில் அன்பும் அதனால் உருக்கமும் உண்டாகும்; என் மனம் மலவிருள் நெருக்குதலால் விரிவு இழந்து சுருங்கிச் சிறுமையுற்றுக் கனிவதில்லை யாதலோடு “நின சீர் கேட்கினும் அன்புற உருகா” தாயிற்று எனவுரைக்கின்றார். இவ்வியல்புகள் இல்வாழ்வுக்கு இன்றியமையாத காமநிலை எய்தாத கன்னிப் பெண்ணின் மனமும் செய்கையுமாகிய நிலையோடொப்பது கண்டு அதனை எடுத்து உரைக்கின்றார். காமச் செவ்வி எய்தாமுன் ஒரு சிறு பெண்ணின் மனம், கூம்பிய முகைபோல் விரிவின்றி உடல் வளர்ச்சிக்கும் எதிர்கால வாழ்வுக்குரிய செயற்கும் ஆக்கமாகும் விளையாட்டில் ஒன்றியிருக்கும்; மகப்பேற்றுக்குரிய வன்மையும் உரமும் எய்துங்கால் அவளது “மனதில் முதிழ்ந்த சுருள் நீங்கி” மலரும்; காமவுணர்வு மலரின் மணம் போல் எழுந்து உணர்விலும் ஒழுக்கத்திலும் படரும். அதன்பின்பு ஊழ் கூட்டத் தோன்றும் ஒருவன்பால் ஒன்றிக் கனிந்து அன்பு பெருகி உருகுதலை எய்தும்; அவன் உருக்காண்டலில் உவகையும், சீர் கேட்பதில் விருப்பும், உறவு கொள்வதில் உருக்கமும் கொள்வள். இதனைக் காணும் வள்ளலார், “வளம் கனி காமம், சிறவாமல் சிற்றில் வகுத்துழலும் இளங்கனி போல்கின்றது என சிற்றுளம்” என வுரைக்கின்றார். காமம் கனியுமிடத்து உடலில் தளிர்ப்பும், மேனியில் ஒளியும், உள்ளுறுப்புக்களில் மகப்பெறுதற்குரிய வன்மையும் உண்டாதலால், அதனை “வளம் கனி காமம்” எனக் கூறுகின்றார். எதிர்காலத்தில் மனையமைத்து சோறு சமைத்து விருந்தோம்புவது அவட்கு அமைந்த அறமும் தொழிலும் ஆதல் பற்றி, “சிற்றில் வகுத்துழலும் இளங்கன்னி” எனக் குறிக்கின்றார். கன்னி யென்பது கனியென இடை குறைந்தது. மங்கைபோல மனமும் திருவருளால் தானே கனிய வேண்டியதாதலால், யான் செயற்பாலது யாதும் இல்லை என்றற்கு “என் செய்குவேன் எம் இறையவனே” என இசைக்கின்றார். இவ்வாறே தாயுமானாரும், “கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பு எனினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள்பெறின் முனே சொன்னவாறு என்னெனக் கருதி நகையாவள்” என வுரைப்பது காண்க.

     இதனால் பக்குவமுறாத சிறுமையுளம் இறைவன்பால் அன்புறவு கொள்ளாது; அப்பெருமான் அருள் எய்தின் அன்புறவு கைக்கூடும் என்பது பயனாம்.

     (188)