189

      189. இவ்வுலகில் உடம்பொடு தோன்றி வாழ்வாங்கு வாழ்ந்து திருவருள் ஞானத்தால் இறவாப் பேரின்பம் எய்துதற்கு எத்துணையுரிமை ஓர் உயிர்க்கு உண்டோ, அத்துணை யுரிமை ஏனை எல்லாவுயிர்க்கும் உண்டு. உயிர்கள் பலவேறு தன்மையவாய் எண்ணிறந்தனவாதலின், அவற்றின் தன்மைக்கேற்ப உடம்புகளை ஆக்கித் தரல்வேண்டும் என்பது வளரும் உடம்புகட்கு இறைவன் பணித்த இனிய பணியாகும். ஆதலாற்றான் கண்ணுக்குத் தெரியாத சிறிய புழு பூச்சி புல்பூடு செடி கொடி; மரங்கள் முதல் மனித இனம் ஈறாகவுள்ள யாவும் ஆணும் பெண்ணுமாய்க் கூடித் தம் இனத்தைப் பெருக விளைவிக்கின்றன. விளைதற்கேற்ற செவ்வி எய்தியதும், பூத்துப் பொலிவுற்று ஒன்றை ஈர்த்தும் காதலித்தும் கருவுற்று உயிர்கள் புகுந்து வாழ்தற்கேற்ற உடம்புகளைப் படைத்து உலகில் தோற்றுவிக்கின்றன. ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் தன்பால் ஈர்த்துக்கூடிக் கருக்கோடற்கு ஏதுவாகும் உணர்ச்சி காமம் என உரைக்கப்பகிறது. கருக்கோடற்கு ஏற்ற தகுதி நிறைந்தபோது வெளிப்படுவது பற்றிக் கமம் என்ற தமிழ்ச் சொல் காமம் என வழங்குகிறது என முன்பே பிறிதோரிடத்தில் கூறினோம்.
 

      உடல் வளர்ச்சி நிரம்பி வேறு உடம்புகளை விளைவிக்கும் செவ்வி தோன்றி ஓரளவு அதன் பணி அமையும் வரையில், உடம்பொடு தோன்றிய நெஞ்சம் அவ்வுடம்பு வழிநின்று பெரும்பணி புரிகிறது. அதனால் உடம்பும் வளமை பெறுகிறது; உயிரறிவும் வன்மைமிக்க அடிப்படை அமைத்துக் கொள்கிறது. வேறு உடம்பு விளைவிக்கும் காமச் செவ்வி மலர்ந்து மேனியிற் கதிர்த்துத் திகழுங்கால் நெஞ்சம், காமத்தின் உண்மைப் பணிமகனாய் உயிரறிவையும் தன்னடிப்படுத்தித் தன் தொழிலைச் செய்கிறது. அந்நிலையில் அதனைக் காமநெஞ்சம் என்பர். காமத்தீ ஓரளவு எரிந்து தணிந்த பின்பே அறிவுப் பேற்றிலும் பொருள் புகழ்களைப் பெறுவதிலும் உயிரறிவு வென்றி காணவல்லது என்பது உணர்ந்தே, தமிழ் சான்றோர், கடிமணத்துக்குப் பின்னதாகிய கற்பு வாழ்வில் ஓதல் காவல் பொருள் முதலியனபற்றித் தலைமகற்குப் பிரிவுண்டெனப் பேசுகின்றனர். காதலுறவுபேற்றுக்குரிய களவின்கண் அவைபற்றிய பேச்சே இடம்பெறுவதில்லை.  

      இவற்றை எண்ணிய அடிகளார் காம நெஞ்சமும் பிறவுயிர்களின் உய்திப் பொருளாக அமைதலை நினைக்கின்றார்; இறைவனும் அதனை நயப்பவன்போலப் பெண்ணும் ஆணுமாய் உருவினனாய்க் காட்சி தருவதையும் அதனைச் சான்றோர் பரவிப் பாராட்டிப் பாடிப் புகழ்வதையும் காண்கின்றார். காம நெஞ்சமும் இறைவன் விரும்பும் பொருள் போலும் என எண்ணுகின்றார். உலகியற் போக வாழ்வை நாடாது திருவருள் நிலையாகிய இறைவன் திருவடியைப் பற்றிக் கிடக்கும் நெஞ்சினனை, கைதுறவாக் காதலன்பன் என்பது கற்றவர் கல்லாதவர் எல்லாரும் அறிந்தது. எனினும் இவ்விரண்டின் இயல்புபற்றி இறைவன் திருவுள்ளம் யாது கருதுகிறது என வினவுவது பொருளாகப் பாடுகின்றார்.

2359.

     மாமத்தி னால்சுழல் வெண்தயிர்
          போன்று மடந்தையர்தம்
     காமத்தி னால்சுழல் என்றன்நெஞ்
          சோஉன்றன் காலைஅன்பாம்
     தாமத்தி னால்தளை யிட்டநெஞ்
          சோஇத் தகைஇரண்டின்
     நாமத்தினால் பித்தன் என்போய்
          நினக்கெது நல்லநெஞ்சே.

உரை:

     பெயரளவில் பித்தன் என்று கூறப்படும் பெருமானே, மகளிர்மேற் செல்லும் காமவிச்சையாற் கலக்குண்ணும் நெஞ்சமோ, நின் திருவடியையே நினைந்து பிணிப்புண்ணும் நெஞ்சமோ, நினக்குப் பிடித்தமான நல்ல நெஞ்சம் யாது எ.று.

     மத்து - தயிர்கடையும் கருவி; கலக்கும் நெஞ்சுக்கு மத்தால் கடையுண்டு சுழலும் தயிரை எடுத்துக் காட்டுதல் பண்டுதொட்டு வரும் உவம மரபு. “மத்துற தயிரே போல் மறுகுமென் நெஞ்சன்றே” என்பது சிலப்பதிகாரம். தயிர் சிறிதாய வழிக் கைமத்தும், மிகுதியாய விடத்துக் கயிற்று மத்தும் கையாளுவ வாதலின், கைமத்து என்னாது “மாமத்து” எனக் குறிக்கின்றார். இளமகளிர் முகத்தினும் மேனியினும் தோன்றி ஆடவன் உள்ளத்தைப் பற்றிக் கவற்றும் உணர்ச்சியாதல் தோன்ற, “மடந்தையர் தம் காமத்தினால்” எனக் கூறுகின்றார். தாமம் - கயிறு; அன்பால் பிணிப்புறும் செயலை அன்புக் கயிற்றினால் பிணிக்கப்படுவதாக வுரைப்பதும் மரபு. “உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்க” என்பதும் காண்க. இறைவன், மக்கள்போல வாத பித்த சிலேத்துமங்களால் நிறைந்த உடம்பினனல்லன்; தன்பால் அன்பு கொண்டாரைப் பெரும் பித்தராக்கி இன்புறுத்துவது பற்றி அவனைப் பித்தன் எனச் சிறப்பிப்பார்; அதனால் “நாமத்தினால் பித்தன் என்போய்” எனச் சொல்லுகின்றார்.

     இறைவன் திருவடிக்கண் பிணிப்புண்ட நெஞ்சம் நன்னெஞ்சம் என்பது கருத்து.

     (189)