190

      190. குடும்ப வாழ்க்கை அறஞ்செய்தற்கு இடமாகக் கொண்டு விரும்தோம்பியும், பிறர்க்கு வேண்டுவன வுதவியும், வேண்டுவனவற்றிற்குப் பிறர் உதவி பெற்றும், இவ்வாறு பல்வகை ஒப்பரவு செய்தும், ஒழுக்கம் கடைப்பிடித்தும் வாழ்வாங்கு வாழலாம்; ஆனால் அவ்வாழ்வில் மனமும் உடம்பும் உறையும் இடமும் பொருளும் பிறவும் இயங்குவது ஒருபுறம் இருக்க, உயிரை யொட்டி யிருக்கும் உள்ளுறு கருவிகளான வித்தையும் அராகமும் புருடனும் மேலே நின்று அருட்கு வாயிலாய் அறிவு தொழில் என்ற உயிராற்றல் இரண்டினையும் இயக்கும் சிவதத்துவத்தை நோக்காமல் கீழ்ப்பட்ட ஆன்ம தத்துவக் கூறுகளை நோக்கி அவற்றிடையே மடங்கிக் கிடக்கச் செய்கின்றன. அவை ஒன்றிரண்டன்றி இருபத்து நான்காய்ச் சத்துவம், இரதம், தாமதம் என்ற மூன்றடுக்காய், நொய்ம்மணல் செறிந்த சேறு போல் வீழ்ந்தாரை மீளாவாறு வீழ்த்தும் இயல்பினவாய் உள்ளன. அவை உறைந்து வன்மையுறாதபடி முக்குணங்களும் கணந்தோறும் மேலும் கீழுமாய்ச் சுழன்றுகொண்டே யிருப்பதால் வீழ்ந்தார் மீளுதற்கு வாய்ப்பு இல்லை. குணங் காரணமாக நிகழும் செயல்வகைகள், வினைக் கூறுகள் இடும்பையும் இன்பமும் பயக்கக் காலமும் நியதியும் வினைப்பயன் நுகர்ச்சியைப் பாகம் செய்து வரையறுத்துக் கொடுத்தவண்ணம் இருக்கின்றன; புருடன் அவற்றை நுகர்வதே செய்கிறது. இவ்வாற்றால் குடும்ப வாழ்க்கையில் அகப்பட்ட உயிர் கரையேற மாட்டாது கையறவுபடுகிறது. ஓரொருகால் உயிர், அகமும் புறமுமாகிய பொருள்களின் நீங்கி ஆன்மத் தத்துவங்களின் நீங்கி மேலுள்ள அருட்பகுதியாகிய சிவத்துவத்தை நோக்க முயலும்; அந்நிலையில் அதன் சிந்தை விட்ட தத்துவக் கூறுகளின் நினைவுகளால் மொய்க்கப்படுகிறது; இதனால் மீளுவது அரிதாகிறது, இதனை நினைக்கின்றார் வடலூரடிகள்.

2360.

     ஏற்றலிட் டார்கொடி கொண்டோய்
          விளக்கினை ஏற்றபெருங்
     காற்றிலிட்ட டாலும் இடலாம்நெல்
          மாவைக் கலித்திடுநீர்
     ஆற்றலிட் டாலும் பெறலாம்உட்
          காலை அடுங்குடும்பச்
     சேற்றிலிட் டால்பின் பரிதாம்
          எவர்க்கும் திருப்புவதே.

உரை:

     எருதெழுதிய கொடியுடையவனே, பெருங்காற்றிடையே நிறுத்தி விளக்கை ஏற்றென்றாலும் ஏற்றலாம்; அரிசிமாவை ஆற்றிலிட்டாலும் பெறலாம்; குடும்பமாகிய சேற்றில் உள்ளமாகிய காலையிட்டால் பின் திரும்புவது எவர்க்கும் அரிது. எ.று.

     ஏறு - எருது; எருது எழுதிய கொடி 'ஏற்றில் இட்டு ஆர் கொடி' எனப்படுகிறது. “ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப” என்று பெரியோர் கூறுவது காண்க. எருதினை ஊர்தியாகவும் கொடியாகவும் கோடற்குரிய காரணம் கூறலாகாமை தோன்ற, “என்ப” எனச் சான்றோர்மேல் வைத்துக் கூறுவதை நோக்குக. பெருங்காற்றில் விளக்கை ஏற்ற ஒருவரும் நினையார்; பிறர் வற்புறுத்தினாலன்றி ஒருவரும் விளக்கேற்றுமதனையும் அதுபோலும் வேறு செயல்களையும் செய்யாராகலின், “விளக்கை ஏற்றென்றாலும் ஏற்றலாம்” என்று உரை கூறப்பட்டது. பெருங்காற்றென்பது ஏற்ற முடியாமை உணர்த்தற்காகும். ஏற்றுதல் - தீப்பற்ற வைத்தல். ஏற்றினும் இடமுடியாது என்பது பற்றி, “பெருங்காற்றில் இட்டாலும் இடலாம்” என்று இயம்புகிறார். நெல்மா - நெல்லரிசிமா; ஆற்றிற் கரைத்துவிட்டமா என்னாமல் பொதுப்பட “இட்டாலும்” என்றதனால், கரைத்தோ கரைக்காமல் தூவியோ இட்டாலும் எனப் பொருள்கோடல் வேண்டும். இரண்டும் மீண்டும் பெறலாகாத செயலே என்னும் அருமை தோன்ற, “கலித்திடும் நீர் ஆறு” எனவுரைக்கின்றார். கலித்தல் - மேன்மேலும் பெருகுதல்; நீர் ஆழம் காண்டற்கு முற்படுவது கால்; அதுபோல் நுகர் பொருளின் நுகர்ச்சியாழத்தை நினைந்து காண்பது உள்ளமாதலால், உள்ளமாகிய கால் என்கிறார். உள்ளமாகிய கால் “உட்கால்” என வருகிறது. மாறுபட்ட உள்ளத்தைப் பகையாக்கினார். “உட்பகை கொடிது” என்றாற்போல, “உட்காலைத் திருப்புவது எவர்க்கும் அரிது” என இயையும். உட்புகுந்த காலை மேலும் ஈர்க்குமேயன்றிச் சேறுநோய் செய்யாது; குடும்பச்சேறு தன்கண் அழுந்திய உள்ளத்தை மேன்மேலும் ஆழ்த்துவதேயன்றிப் பல்வேறு ஆசைகளை எழுப்பி அரித்து நோய் செய்வதில்லை என்ற கருத்துத் தோன்ற, “ஆடும் குடும்பச்சேறு” என்ற குறை கூறுகின்றார்.

     குடும்ப வாழ்க்கைக்கு நிலமுதலிய பூதங்களும், அவற்றின் தன்மாத்திரைகளும் கண் முதலிய அறிகருவிகளும், கை முதலிய செயற் கருவிகளும், மனமுதலிய உட்கருவிகளும் இன்றியமையாமையின், அவற்றொடு கூடி அவற்றின் இடையே நிகழும் வாழ்வை இவ்வாறு குறிப்பின் உணர வைக்கின்றார். இவற்றை இவ்வகையில் பிரித்துணர்ந்து நீங்கினாலன்றி மெய்யுணர்வு தலைப்படுவதில்லையாதலால் “உட்காலை எவர்க்கும் திருப்புதலரிது” என வுரைக்கின்றார். மெய்யுணர்வுடையோரை ஓரொருகால் இவை தாக்கி அலைப்பதுண்மையின் “எவர்க்கும்” எனல் வேண்டிற்று.

     இதனால், குடும்பவாழ்வு அகப்பட்டாரை மீளவிடாத கொடுமையுடையதாதல் காட்டுவது பயனாம் என அறிக.

     (190)