193
193. வள்ளலார் தமது வாழ்வை உலகியற் கண்கொண்டு நோக்குகின்றார். பொருளிலார்க்கு உலகியலில்
வாழ்வில்லை. ஆயினும் அப்பொருள்பால் தமக்குப் பற்றில்லாமையை உணர்கின்றார். பொருளால்
வரும் சுகதுக்கங்களை நுகர்தற்குக் கருவியாவது உடல்; அவற்றை நுகர்ந்தாலன்றி உயிரறிவு வளம்படாது;
அதனால், உடலின் தொடர்பு இன்றியமையாதாகிறது. ஆயினும், உடலின்பாலும் வள்ளலார்க்குப் பற்றில்லை.
அதுபோல உயிரின்பாலும் ஈதொருபாலாக, தாய் தந்தை உற்றார் உறவினர், நண்பர், சுற்றத்தார்
என ஏனையோரிடத்தும் மனத்தே பற்றுச் சிறிதுமில்லாமை தெளிகின்றார். எப்பொருளிடத்தும் யாவரிடத்தும்
ஒருபற்றும் இல்லாமை நேர்மையன்று; பற்றற்றாரை நல்லோர் தெளிவதில்லை. அவர்களைத் தெளியலாகாது
எனத் திருவள்ளுவரும் செப்புகின்றார். அவ்வியல்பே பற்றி, இறைவன், இவன் அன்பற்றவன், பாவி
என்று கைவிட்டால் நம் நிலை யாதாகும் என நினைக்கின்றார்; அச்சம் மிகுந்து துயர்ப்படுகின்றார்.
பற்றின்மை தமக்கு உண்டானதற்குக் காரணம், பற்று வைக்கப்படும் பொருள்கள் யாவும் இன்பம்
சிறிதே தருகின்றன; சிறிது போதில் மறைந்தொழியும் இன்பத்தால் எய்துவது துன்பமே. இன்பம்
தரும் பொருளும் சிறிது போதில் இன்பச் சுரப்புக்குன்றி வெறுப்பாய் மாறுகிறது. இந்நிலையில்
வாழ்வும் சின்னாட்களில் மறைந்து போகிறது. என்றும் வாழலாம் என நினைப்பவர் மறுகணமே மண்ணக
வாழ்வைவிட்டு மறைகின்றார்கள். இதனால் அறிவு கலங்கி தளர்கின்றேன். இத்தளர்ச்சியுடன் நீ
கைவிட்டாயாயின் என் நிலை யாதாகும்? வேறு பற்றுக்கோடு ஒன்றும் இல்லாத யான் எதனைப் பற்றுவேன்,
எதனைச் சார்வேன் என்று முறையிடுகின்றார்.
2363. இன்பற்ற இச்சிறு வாழைகையி
லேவெயி லேறவெம்பும்
என்பற்ற புன்புழுப் போல்தளர்
ஏழை எனினுமிவன்
அன்பற்ற பாவிஎன் றந்தோ
எனைவிடில் ஐயவையத்
தென்பற்ற தாகமற் றில்லைகண்
டாய்எனை ஏன்றுகொள்ளே.
உரை: ஐயனே, இன்பமில்லாத புல்லிய இவ்வுலக வாழ்க்கையில் வெயில் மிகத் துடித்து வருந்தும் என்பில்லாப் புழுப்போலத் தளர்கின்ற ஏழை என்றாலும், சிவன் எப்பொருளிடத்தும் அன்பில்லாப் பாவி என்று எண்ணி, அருளாது கைவிடுவாயேல் இவ்வையகத்தில் எனக்குப் பற்றாக ஒன்றுமில்லை; ஆதலால் அடியேனை ஏற்றருள்க எ.று.
உலகியல் வாழ்வில் எப்பொருளும் நிலைத்து நிற்கும் இயல்பினதாக இல்லாமையால், அவற்றாள் பெறப்படும் இன்பமும் நிலையின்றிக் கழிகிறது. அவ்வின்பத்தை நுகருபவரும் சின்னாளில் இறந்துபடுவதால் உலக வாழ்வில் இன்பமேயில்லை என்னக்கூடிய நிலைகண்டே “இன்பற்ற இச்சிறு வாழ்க்கை” என்று கூறுகின்றார். சிற்றின்பமும் சில்வாழ்நாளும் உடைமை வாழ்க்கையின் பால் அமைந்த சிறுமை; அது பற்றியே “இச்சிறு வாழ்க்கை” எனப்பட்டது. சிறுமை வாழ்க்கையில் விருப்பம் கொள்ளாது வெறுத்துத் துறத்தலையே உண்டு பண்ணுவது கொண்டு தளர்கின்றேன் என்பாராய்த் “தளர் ஏழை” எனத் தம்மைக் கூறுகின்றார். துறவுள்ளம் உலகியற் பொருள், அதனையுண்டு வளரும் உடல், அதன் கண்ணிருந்து வாழ்வு நடத்தும் உயிர், துணைபுரியும் பிற சுற்றம் முதலிய அனைத்தின் பாலும் அன்பு செய்யவிடாமையால் பற்றின்றி வெயிலிடைப்பட்ட புழுப்போல் வருந்துகின்றேன் என்பது விளங்க “வெயில் ஏற வெம்பும் என்பற்ற புன்புழுப்போல் தளர் ஏழை” எனவுரைக்கின்றார். இப்புழுவைத் திருவள்ளுவரும் “என்பிலது” எனப் பெயரிட்டு, அன்பில்லாத உயிர்க்கு உவமமாக வுரைப்பர். ஒரு பற்றுமற்றாரை உலக வாழ்விற்குத் தகாதவர் என்றே உலகப் பொருணூலறிஞர் விலக்குவர். பழிபாவங்கட்கு நாணாமையும் அவர்பால் காணப்படுவது காரணமாகத் தகாதவர் என உலகர் வெறுத்தொதுக்குகின்றனர்; அதபோல் என்னையும் அன்பற்ற பாவி எனக் கைவிடலாகாது என்றற்கு “அன்பற்ற பாவி என்று அந்தோ எனைவிடில்” என்றும், ஊசல் கயிறற்றால் பற்றுக் கோடாகிய தரையை அடைவது போல், எனக்குப் பற்றாகிய நீ கைவிட்டால் எனக்கு வேறு ஆதாரம் இல்லை; என்பதற்காக “மற்று இல்லை கண்டாய்” என்றும் இயம்புகின்றார். இவ்வாறே திருநாவுக்கரசரும் “ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சியே கம்பனே” என வேண்டுகின்றார். இந்நிலையில் என்னை ஈ ஏன்று கொள்வதின்றி வேறு செய்யக் கடவதில்லை. “ஏன்று கொள்” என முறையிடுகின்றார்.
இதனால், தமது முற்றத்துறந்து பற்றற்றிருக்கும் மனநிலைத் தெரிவித்து ஏன்று கொள்ளுமாறு வேண்டுவது பயனாம் என அறிக. (193)
|