194
194. சிவத்தொண்டர்களின் சிந்தனையும் பேச்சும் சிவபெருமானுடைய திருவுருவிலேயே ஈடுபட்டிருப்பதைக்
காண்கின்றார் வடலூர் வள்ளல். அவருடைய பாட்டுக்கள் பலவும். அவனுடைய திருமேனி நலத்தையே புகழ்ந்தவண்ணம்
இருக்கின்றன. வள்ளலார்க்கு அப்பெருமக்கள் உரையில் உறைந்து கிடக்கும் நலங்கள் செய்யும் இன்பத்தினும்,
அப் பெரியோர்களின் உள்ளத்தின்மாட்சி மிக்க இன்பம் தருகிறது. சிவனைக் காட்டிலும் அத்தொண்டர்களிடத்தே
அன்பும் பரிவும் மிகுகின்றன. அவர்களுடைய ஆணைவழி நிற்பதில்லது தமக்கு வாழ்வு பிறிதில்லை எனக்
கருதுகின்றார். அவர்களைத் தவிரத் தமக்குத் தலைவராய் நெறிசெலுத்தும் தக்கோர் வேறு இல்லையென்று
நினைக்கின்றார்; மொழிகின்றார்.
2364. களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும்
முச்சுடர்க் கண்அருளும்
வளங்கொண்ட தெய்வத் திருமுக
மாட்சியும் வாய்ந்தபரி
மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற்
சேவடி மாண்பும்ஒன்ற
உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன்
தன்னை உடையவரே.
உரை: கழுத்திடைத் தோன்றும் நீலமணி போன்ற காட்சியும், மூன்றாகிய கண்களினின் றொழுகும் அருளும், திருமுகமாட்சியும், கொன்றைச் சடையும், சேவடி மாண்பும் ஒருசேரத் திருவுள்ளத்தே நிலைபெறக் கொண்ட சிவ புண்ணியச் செல்வர்களே எனக்குத் தலைவர்; அவர்களே என் உடல் பொருள் உயிர் அனைத்தும் உடைய முதல்வராவர் எ.று.
களம் - கழுத்து. கடல் நஞ்சு படிந்து நீலமணியின் நிறம் பெற்று ஒளி திகழ்வதுபற்றிக் “களங்கொண்ட ஓர் மணிக் காட்சி” என உரைக்கின்றார். ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றும் இறைவற்கு 'முக்கண்' என்பர். இயல்பால் மூன்றாயினும் அவற்றின்கண் வெளிப்படுவன ஞாயிற்றின் வெம்மையும் திங்களின் தன்மையும் தீயின் சுடருமன்று; மூன்றின் நற்செயல்களாகிய திருவருள் என்பது வற்புறுத்தற்கு, “முச்சுடர்க் கண் அருளும்” என மொழிகின்றார். திருமுகத்தின்கண் ஞானப் பெருக்கமே மிக்குத் தோன்றுவது பற்றி, “திருமுக மாட்சி” என்கிறார். தெய்வத் திருமுகம் என்றது, பிற எத்தெய்வங்களின்பாலும் கிடைக்காத அருள்ஞானச் சிறப்புப் புலப்படுத்தற்காகும். ஒருகாலைக் கொருகாலைச் சிறுகலும் பெருகலுமின்றிக் கொளக் குறைபடாத ஞானநலத்தை வியக்கின்றாராகலின், “வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சி” என வனைந்துரைக்கின்றார். வானிடத் தெழும் மின்னல் போலும் நிறமும் ஒளியும் கொண்டு விளங்குவது சடை எனினும், பொன்னிறம் கொண்ட கொன்றை சூடியபோது அழகு மிகுகிறது என்பது காட்டுதற்குப் “பரிமளம் கொண்ட கொன்றை” என்று பகர்கின்றார். பரிமளம் - மிக்க மணம்; இயற்கை மணத்துடன் சிவபெருமான் திருமுடி சேர்ந்து ஞான மணம் கூடப்பெறுதல் பற்றிப் “பரிமளம் கொண்ட கொன்றைச் சடை” எனக் கூறுகின்றார். இறைவன் திருமேனி “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் பொலிந்து இலங்கும்” எனச் சான்றோர் கூறுதலான், திருவடியைப் “பொற்சேவடி” எனப் புகல்கின்றார். திருவடி சிவந்த நிறத்ததாதல் தோன்றச் “சேவடி” எனல் இயல்பாயிற்று. சிவஞானத்தால் செம்மை சேர்ந்த திருவுள்ளங்களில் நின்று திகழும் சிறப்புடைமை பற்றிச் சேவடியின் மாண்பினை வேறாகப் பிரித்துப் பேசுகின்றார்.
இங்கே சொல்லோவியம் செய்து காட்டப்பெற்ற சிவத்தின் திருவுருவை நெஞ்சிற் கொண்டு சிந்தித்து வழிபடும் திறம் சிவபுண்ணியம் படைத்த செல்வர்க்கே உரியது என்பதுபற்றி, “உளங்கொண்ட புண்ணியர்” என உவந்துரைக்கின்றார். அவர் வழி நிற்பது தவிர வேறு உய்திதரும் நெறி இல்லை என்ற தமது கருத்துப் புலப்படுமாறு “என் தன்னை உடையவர்” என்று உரைக்கின்றார்.
இதனால்,. சிவனது திருவுருவத் திருமேனியை நெஞ்சிற் கொண்டுறையும் புண்ணியரைத் தமக்குத் தலைமையும் வழிகாட்டியுமாகக் கொள்வது வேண்டற்பாலது எனத் திருவருளை வேண்டுவது இப்பாட்டின் பயனாதல் கொள்க. (194)
|