195
195. சிவஞான போத முதலிய சைவநூல்கள், சிவனுக்குத் தொண்டு செய்யும் தொண்டர்கட்குச் சிவபரம்
பொருளே அடித் தொண்டனாய் அன்பு செய்து நலம் விளைப்பான் எனவுரைக்கின்றன. தொண்டர் வரலாறுகள்
பல அச்செய்திக்குச் சான்று காட்டி மெய்ப்பிக்கின்றன. அது கண்டு சிவத்தொண்டரைச் சிவனெனவே
கருதி வழிபடுவது சைவர்க்கும் சன்மார்க்கருக்கும் அறமாகிவிட்டது. சிவத் தொண்டர்களின் நினைவு
சொல் செயல்கள் யாவும் சிவநினைவும் மொழியும் செயலுமாய் நிற்றலின், அவருடைய கருவி கரணங்கள்
சிவகரணங்களாய்த் திகழ்கின்றன; வாழ்வே சிவவாழ்வாக மாறித் தெய்வத்தன்மை பெறுகிறது.
அவரைக் காண்பவர், அவரோடு பேசுபவர், இணங்கி யுறைபவர் அனைவரும் சிவகரணச் சீலர்களாய்ச் சிவனது
திருவருளுக்கு இலக்காகின்றார்கள். இத்தகைய வாழ்வு. நிலையில்லாத பொருள்களோடு கலந்து நிலையாத
இன்பத்தை விழைந்து துன்புறும் அவலநிலை எய்தாது, இன்பநெறியே நோக்கிச் செல்லுதலால், அதுவே
பலராலும் வேண்டப்படுகிறது. அவர்களது உலகியல் வாழ்வுக்குரிய நினைவு செயல் வகைகளும் திருவருள்
வாழ்வு நெறியிலேயே இயங்குகின்றன. வாழச் செய்த நல்வினையாகிய திருவருளல்லது, ஆழுங்காலைப்
புணைபிறிதில்லை என்ற உண்மை இனிது விளங்குகிறது. இவ்வகையில் தொண்டர் வாழ்வும் உலகியல்
அருள் வாழ்வும் தவநெறி வாழ்வாகவே உருக்கொள்வதால், அதனினும் இன்பமும் அமைதியும் நிறையும்
வாழ்வு வேறு சிறப்புடையதாகப் புலப்படாமை கண்ட அடிகளார், அந்த இனிய வாழ்வு வேண்டித் திருவருட்கு
முறையிடுகின்றார்.
2365. காவிக்கு நேர்மணி கண்டாவண்
டார்குழல் கற்பருளும்
தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின்
மாமலர்ச் சேவடிப்பால்
சேவிக்கும் சேவகஞ் செய்வோரை
ஆயினுஞ் சேவிக்கஇப்
பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு
நீண்ட பயனதுவே.
உரை: நீலமலரை யொத்த மணிகண்டமுடைய சிவபெருமானே, வண்டு மொய்க்கும் தேமலரணிந்த உமாதேவிக்கு இடப்பாகம் தந்தருளிய பெருமானே, நின் திருவடிக்கண் அன்புற்று, அதற்குரிய தொண்டுகளைச் செய்யும் தொண்டரையேனும் கண்டு, நாளும் அவர்கட்கு வேண்டிய தொண்டுகளைச் செய்தற்குரிய வாய்ப்புக்கள் அடியேனுக்குக்
கிடைக்குமாயின், இவ்வுடலொடு கூடி உலகில் வாழும் என் உயிர்க்கு நீண்ட பயன் விளைக்கும் நற்செயலாகும். எ.று.
காவி - நீலமலர்; அம்மலரின் நிறமும் மணியின் ஒளியும் இறைவன் கண்டத்துக்கு இருத்தலால், “காவிக்கு நேர் மணிகண்டா” என்று புனைந்து காட்டுகின்றார். மணி - நீலமணி; கண்டன் - கழுத்தையுடையவன். பூச்சூடிய கூந்தலள் என்றற்கு, உமாதேவியை “வண்டார் குழல்” என்று சிறப்பித்து, அவள் ஏனைப் பெண்ணுலகுக்குக் கற்பறம் கற்பிக்கும் தேவி என்பதை விளக்குதற்குக் “கற்பருளும் தேவி” என்று நயந்துரைக்கின்றார். இத்தகைய நல்லறம் புரியும் தேவிக்கு அப்பெருமான் செய்யும் சிறப்பு இது என்பாராய், “தேவிக்கு வாமம் கொடுத்தோய்” எனப் புகன்றுரைக்கின்றார். மனைவியாயினும் மக்களாயினும் யாவராயினும், நல்லது செய்தோரின் நலம் அறிந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்ற உண்மை இதனால் புலப்படுத்தப்படுகிறது. இவ்வகையில் அப்பெருமானையே நினைதலும், அவன் புகழையே விரும்பி மொழிவதும், அவன் உவப்பனவாகிய செயல்களைச் செய்வதுமாகிய செயல்மேற்கொண்ட தொண்டர்கட்குச் சிவபெருமான் வேண்டும் நலங்களை அருளுவது ஒரு தலையாதல் உறுதியாகிறது. பெண்மைக்குத் தனக்குரிய ஆண்மையினின்றும் பிரியாமை உறைவதினும் பேறு வேறின்மையறிந்து உய்தற் பொருட்டு, “வாமம் தேவிக்குக்” கொடுக்கப்பட்டது எனவுணர்தல் வேண்டும்.
வடலூர் வள்ளலார்க்கு நேரே சிவபரம்பொருளின் திருவடிக்குத் தொண்டு செய்வதிலே அளவிறந்த அன்பும் ஆர்வமும் உண்டு. மண்ணுலகில் உடலோடு கூடி யுறையுங்காறும் பரமனது பரமாய நிலையை நேரிற் கண்ணாற் காண்பது அரிதென்பது நன்குணர்ந்தவர். ஞானமே வடிவாகிய பெருமானை ஞானப் பார்வை கொண்டு மனத்தின்கண்ணே தான் அறிஞர் காண்பர். அவ்வாறே பரமனை ஞானப் பொருள்கொண்டு மனத்திற் பரவும் பெருமக்களை, . . . சிவத்தொண்டர்களை . . . அவர்களுடைய கருவி கரணச் செயல்கொண்டு தெளிந்துகொள்வது அரிதன்று; அறிந்தபின் அவர்கட்குத் தொண்டு புரிவது சிவத்துக்குச் செய்யும் திருத்தொண்டாதல் தெளியப்படுகிறது. அத் தெளிவால் திருத் தொண்டரைத் தேடி அரிதின் அறிகின்றார்கள். அச் செல்வத் திருத்தொண்டர்களைக் காண்பதும் மிக அருமையாதல் பற்றியே, “சேவகம் செய்வோரை ஆயினும் சேவிக்க” எனவுரைக்கின்றார். சேவகம் யாது என்பதை விளக்குதற்கே, “நின் மாமலர்ச் சேவடிப்பால் சேவிக்கும் சேவகம்” எனத் தெரிவிக்கின்றார். திருவடி எப்போதும் அன்பரது மனத்தாமரையில், பூவின் மேல் பூத் தங்குவது போல ஞானமணம் கமழும் நறுமலராய் உணரப்படுவது பற்றி, “மாமலர்ச் சேவடி” என மாண்புறுத்துகின்றார்.
இந்தச் சிவ சேவகம் புரியும் திருத் தொண்டர்களை அறிந்து கோடலின் அருமை நினைந்து, அப்பெருமக்களைக் கண்டு சேவிக்கும் வாய்ப்பு உண்டாகுமாயின், அது பிறவிப்பேறுகளில் தலைசிறந்ததாம் என்றற்குச் “சேவிக்க வாய்க்கின்” எனத் தெரிவிக்கின்றார். அத்தகைய கடவுட்டொண்டரைக் கண்டு பணிந்து வழிபடும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்திலது என்றும், அதற்குக் காரணம் தமது பாவம் என்பாராய், தம்மை “இப்பாவி” என்றும், “வாய்க்கின்” என்றும் வருந்தி மொழிகின்றார். உயிர்க்கென்று உடல் வந்தது; உயிர் உய்தி பெறுதற்கென்று இவ்வுடலின் உறவு உண்டாயிற்று; அதனால் விளையும் பயன் சிவஞானப் பேறும். இறவாப் பிறவா இன்ப வாழ்வுமாதலின், அதனை “ஆவிக்கு நீண்ட பயன்” என இனிது விளங்க உரைக்கின்றார்.
இதனால், சிவத் தொண்டர்க்குத் தொண்டு செய்யும் வாய்ப்புக் கிடைக்குமாயின், அது பிறவாப் பெரும் பேறு எய்துதற்கு வாயிலாம் என்பது பயனாம் எனவுணர்க. (195)
|