196

       196. உலகு, பொருள், உடல், கருவி, கரணங்கள் ஆகிய அனைத்தும் மாயையின் காரியம்; அவையனைத்தும் நிலையில்லாதன. மாயையினின்றும் தோன்றி அதன்கண்ணே ஒடுங்குவது அவற்றின் இயல்பு. தோற்ற வொடுக்கமும் நிலையின்மையும் உடைமைபற்றி, உயிர்கட்கு அவை ஒத்தனவல்ல; உயிர்க்ள தம்மைப் பயன்கொள்ளாது துறந்தொழியாமைப் பொருட்டு மாயை உயிர்களை மயக்குவதும் செய்யும்; உலகுடல் பொருள்களின் வாயிலாக இன்பம் தந்து உயிர்கள் தம்மைவிட்டு நீங்காதபடி பிணிப்பது மாயா காரியங்கள்பால் உள்ள தன்மை. இதனால், யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, வாழ்க்கை நிலையாமை முதலிய பல குறைகளைக் காணினும் உயிர்கள் அவற்றை விடாமல் பற்றுச் செய்து ஒழுகுதற்குக் காரணம் மாயையின் இத்தன்மையாகும்; யாக்கையுத் செல்வமும் வாழ்க்கையும் யாவும் உயிர்கட்கு நோயும் வருத்தமும் பயதல் கண்டு, அதன் தொடர்பை விலக்குதற்கு அறிவுடையோர் முயல்வர் பிறரையும் அது செய்யுமாறு உரைப்பர். மாயை வயம் நின்று செய்யும் உலக வாழ்வு மாயவாழ்க்கை எனப்படுதற்கும் இதுவே காரணமாகும். மாயா வாழ்க்கையின் தொடர்பு விலகுதற்கு இறைவன் திருவருள் தொடர்பு பெறவேண்டும். அத் தொடர்பு சிவனது திருமேனியைக் காணும் சிறப்பை நல்கும். அக்காட்சி, மாயையை நம்மைப் பற்றித் தொடர்புறாதவாறு காக்கும் எனச் சைவ நூல்கள் கூறுகின்றன. “சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” எனச் சேக்கி.ழார் பெருமான் தெரிவிக்கின்றார். பவம் என்பது பிறப்பு; அதாவது மாயா காரியமான உலகுடல் வாழ்க்கையோடு கூடுவதாம். அதலாற்றான், சிவக்காட்சி இன்றியமையாதது என வள்ளலார் அறிவிக்கின்றார்.

2366.

     கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின்
          னோர்பசுங் கோமளப்பெண்
     பங்கிட்ட வெண்திரு நீற்றொளி
          மேனியும் பார்த்திடில்பின்
     இங்கிட்ட மாயையை எங்கிட்ட
          வாஎன் றிசைப்பினும்போய்ச்
     சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட
          வாய்கொடு தாண்டிடுமே.

உரை:

     சிவபெருமானது கொன்றையணிந்த சடையையும், அழகிய பெண்ணாகிய உமாதேவியின் கூறுகொண்டதும் வெண்மையான திருநீறணிந்ததுமாகிய திருமேனியையும் காணும்பேறு எய்துமாயின், பின்பு, இல்வாழ்க்கைக்கு முதற் காரணமாக விளங்கும் மாயையை எம் அருகே வா என்று அன்போடழைப்பினும், சங்கு முழக்கம்போல வாயிலறைந்து கொண்டு எம்மைத் தாண்டி நீங்கிவிடும் எ.று.

     சிவபெருமான் திருமுடியிற் சூடப்படும் கொன்றை தேன் மிக்கொழுகும் சிறப்புடையது; அது பற்றியே, “கொங்கிட்ட கொன்றை” எனக் குறிக்கின்றார். கொங்கு - தேன். உமாதேவி பசுமை நிறங்கொண்ட திருமேனியுடையளாதலின், “பசுங்கோமளப் பெண்” எனப் புகழ்கின்றார். கோமளம் - இளமை. மணிவாசகப் பெருமான் “குணக்கடல் கோமளத்தொடுங்கூடி அணைந்து வந்தெனை ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே” (திருவா அற்பு. 6) என உரைப்பது காண்க. உமையொரு கூறுபட்ட மேனியனாயினும், வெள்ளிய திருநீறணிந்து சிறப்பது காட்டற்கு “பெண் கூறிட்ட வெண் திருநீற்றொளி மேனி” என்று வியக்கின்றார். இந்த அழகிய திருமேனியைக் காணக்கூடிய பேறு எய்துமாயின் என்பார், “பார்த்திடில்” எனப் பரிந்துரைக்கின்றார். வாழ்கின்ற மண்ணுலகும், அது நல்கும் வாழ்க்கையும் மாயை யாதலின், அதனை “இங்கிட்ட மாயை” எனச் சுட்டியுரைகின்றார். கிட்டுதல் - நெருங்குதல்; கிட்டவா என அழைப்பது, இங்கே இசைப்பதாக உரைக்கப்படுகிறது. சங்கின் முழக்கம்போல் வாயாற் பேராசை செய்து கொண்டு ஓடும் என்பதை, “சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே” என உரைக்கின்றார். தாண்டுதல், அகலக் கால் வைத்து விரைந்து ஓடும் திறத்தைத் தாண்டுதல் என்பவாகலின், “தாண்டிடுமே” எனச்சாற்றுகின்றார். சிவரூபமும் சிவதரிசனமும் எய்தியவழிச் சிவயோகமும் சிவபோகமும் பயனாம் என்று மெய்கண்ட நூல்கள் பன்முறையும் விளக்கிக் கூறுவது பற்றி, “பார்த்திடில்” பிறப்புக்கு இடமும் எதுவுமாகிய மாயா காரிய உலக வாழ்க்கைகள் வந்து பொருந்துதற்குரிய சார்புகள் இல்லையாய், சிவயோக போகங்கள் பொருந்தும் நிலை எய்துவது தெளியுமாறு, “இங்கு இட்டமாயையை வா என்று இசைப்பினும் வாராது” எனப் புகல்கின்றார். சங்கர வேதாந்திகள் குறிக்கும் மாயை, இருளாய் இன்னதென்று சொல்லவொண்ணாத அநிர்வசனீயம் என்பதாம். இங்கே குறிக்கப்படும் மாயை ஒளிப் பொருளாய் உலகுடல் கருவி கரணங்கட்கு முதற்காரணமாய அனாதி நித்தமாய் உள்ளது என்பர்.

     இதனால், சிவதரிசனம் பெற்ற செல்வர்கள் மாயையை வருக என அழைப்பினும், அதற்கு அவர் பற்றுக் கோடாமையால் அழுது அலறிக் கொண்டு நீங்கும் எனக் கூறுவது தெளியலாம்.

     (196)