197
197. சிவபெருமானுக்குப் புதல்வர்கள் எனக் கணபதியும் முருகப் பெருமானும் விளங்குகின்றார்கள்.
பிறப்பிறப்பில்லாத சிவபெருமானுக்கு மக்கள் என்றால், இவர்கட்குப் பிறப்பும் இறப்பும் இல்லையாம்.
எனவே, இவர்களையும் பிறப்பிறப்பும் இரண்டும் வேண்டாதவர் வணங்கி வழிபடுவது முறையாகும். இவ்விருவரையும்
மக்கள் கடவுளாகவே வழிபட்டுப் பிறப்பும் இறப்பும் இல்லாத் பெருவாழ்வு பெறுதற்கு வாய்ப்புண்டு
எனக் கருதலாம். ஆயினும், இவ்விருவரும் சிவபெருமான் திருவருளால் தோன்றியவராதலால், இவர்களது
திருவருளும் சிவன் திருவருள் வழியாகப் பெறத்தக்கன என உணர்தல் வேண்டும். இவ்விருவர் வாயிலாகத்
திருவருள்பெற விழையும் அன்பர்கள் சிவனை வணங்கி அப்பெருமானது அருளாணையைப் பெறுவது முறையாகும்.
மேலும், கணபதியும் முருகனும் சிவசத்தியாகிய உமாதேவி உருக்கொடுக்கத் தோன்றிய உயர்தனிப்
பெருந்தெய்வங்கள். உமாதேவியோ இவர்கட்குப் பெறலரும் தாயும், சிவபெருமானுக்குத் திருவருள் துணைவியும்
ஆவள். அவ்வகையில் உமையம்மையும் தனிநிலையில் வைத்துச் சான்றோர்களால் வழிபடப் படுகின்றாள்,
அவளுக்குத் தனிக்கோயில் எடுத்துப் பூசையும், திருப்பணியும் செய்கின்றார்கள். கணபதி, முருகன்,
உமை என்ற மூவரும் வணங்கி வழிபடத்தக்கவர் என மக்களுலகு எண்ணிக் கோயிலெடுத்தும் விழாக்கள்
அயர்ந்தும் பூசைப்பணி புரிந்தும் வழிபாடு செய்வது முறையும் மரபுமாக இருப்பதை எண்ணுகின்றார்
வடலூர் அடிகள். இவர்களின் தோற்றமும் அருள்செய் வகையும் சிவபெருமான் திருவருளாலே அமைந்திருத்தலால்,
இவர்களை வழிபடும் முறையும் நெறியும் சிவனருளாலே கைவரப் பெறவேண்டும் என்ற கருத்தால், கணபதி
முருகன் உமையாகிய மூவரையும் வணங்கி வழிபட்டு வரம்பெறத்தக்க வாய்மையை அருள வேண்டுமென
வள்ளலார் சிவபெருமானை வேண்டுகிறார்.
2367. வெம்பெரு மானுக்குக் கைகொடுத்
தாண்ட மிகுங்கருணை
எம்பெரு மானுக்கு விண்ணப்பம்
தேவர் இளம்பிடியார்
தம்பெரு மானுக்கும் சார்மலைமானுக்கும்
சாற்றும் ஐங்கைச்
செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும்
நான்பணி செய்யச்செய்யே.
உரை: வெவ்விய பெருமானாகிய அக்கினிக்குக் கைகொடுத்து அருள்புரிந்த மிக்க கருணையுருவினனாகிய எம்பெருமானே! நினக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றேன்: தேவயானையின் மணவாளனாகிய முருகப் பெருமானுக்கும், மலயரசன் மகளாகிய உமாதேவியார்க்கும், ஐந்து கைகளையுடைய செவ்விய பெருமானாகிய கணபதிக்கும், எந்தையாகிய நினக்கும் ஒத்த நிலையில் யான் வழிபட்டு வணங்கும் திருப்பணி புரிதற்கு அருள்வாயாக எ.று.
வெம்பெருமான் - வெம்மையும் ஒளியும் நல்கும் பெரியவனாகிய நெருப்புக் கடவுள். “வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற” (திருவா. திருவுந்தி. 7) என மணிவாசகர் எடுத்து மொழிவது காண்க. தக்கன் வேள்வியில் செய்த குற்றத்துக்காகத் தீக்கடவுளின் கையைத் தறித்து ஒறுத்தானாயினும், பின்பு தன் குற்றமுணர்ந்து பொறுத்தருளுமாறு வேண்டித் தீக்கடவுள் வழிபட்டமைக்கு இரங்கிக் கைதந்து அருளிய கருணையை நினைவிற் கொண்டே “வெம்பெருமானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங் கருணை எம்பெருமான்” என வள்ளலார் உள்ளங் குளிர்ந்து ஓதுகின்றார். வெம்பெருமான் - வெம்மைப் பண்புடைய பெருமான் எனப் பொருள் தருவது. தேவர் இளம்பிடி - தெய்வயானை அம்மையார். இந்திரனது கற்பகச் சோலையில் வெள்ளை யானையால் வளர்க்கப்பட்டாள் என்பதுபற்றித் தெய்வயானையை “இளம்பிடியார்” என ஏத்துகின்றார். மலைமான் - உமாதேவி. ஐங்கைச்
செம்பெருமான் - ஐந்து கைகளையுடைய கணபதி. செம்பொருளாகிய பிரணவமே வடிவமாக அமைந்த பெருமானாதலால், கணபதியை “ஐங்கைச் செம்பெருமான்” எனப் புகழ்கின்றார். உமையொரு கூறனாய்ப் பிரிப்பற நிற்கும் பெருந்தகைமை யுடையனாதலின், சிவபெருமானை, “எந்தாய்” என வேண்டுகின்றார்.
பணிபுரிதற்குரிய கருவி கரணங்கள் யாவும் நீ அருள வந்தவையாதலின், அவற்றால் நின்னையன்றிப் பிற தெய்வங்கட்கு வழிபாடு செய்வதுபற்றி அருளாணை தருக என்பார், “நான் பணிசெய்யச் செய்” என உரைக்கின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்குதல் இயற்கையாதலால், இவ்வாறு அவன் அருளை வேண்டுகின்றார். எனினும் பொருந்தும்.
சிவபரம்பொருட்கு அடிமைப் பட்டார் அவன் மக்களாயினும் அவர்கட்கு அடிப்பணி செய்ய விழைகுவராயின், தலைவனது ஆணை பெறாது செய்தல் அறமாகாது என்ற கருத்து இப்பாட்டின் உள்ளுறையாக இருந்து விளங்குவது உணரத்தக்கது. (197)
|