198
198. இறைவனையே நினைப்பதும் பாடுவதுமாக இருக்கின்ற தம்மையே நோக்குகின்றார் வடலூர் வள்ளல்.
தன்னைப் போன்ற மக்கள் எத்தனையோ பொருள்களை எண்ணுகின்றார்கள். அவற்றின் நலங்களை வியக்கின்றார்கள்.
அவை தமக்கே உரியவாக வேண்டி நயக்கின்றார்கள். தமக்கு வேண்டுவது யாது என்று வள்ளலார் ஆராய்கின்றார்.
பன்முறையும் எண்ணிப் பார்க்கின்றார். சிவபரம்பொருளின் திருவருள் ஒன்றிலேயே தமது நினைவெல்லாம்
ஒன்றியிருப்பதை அறிகின்றார். அதனையே தரல் வேண்டுமெனப் பரவுகின்றார்.
2368. சாற்றவ னேகநன் னாவுள்ள
தாயினும் சாற்றரிதாம்
வீற்றவ னேவெள்ளி வெற்பவ
னேஅருள் மேவியவெண்
நீற்றவ னேநின் னருள்தர
வேண்டும் நெடுமுடிவெள்
ஏற்றவ னேபலி ஏற்றவ
னேஅன்பர்க் கேற்றவனே.
உரை: சாற்றரிதாகிய வீற்றவனே, வெள்ளிமலையை யுடையவனே, அருளே உருவாகவுள்ள வெண்ணீற்றை அணிந்தவனே, நெடிய முடியையுடைய வெண்மையான எருதையுடையவனே, அடியார் அகம் தோறும் சென்று பலியேற்றவனே, அன்பர்கட்கு ஏற்ற உறவானவனே, நினது திருவருளையே நல்க வேண்டும். எ.று.
“ஆயிரம் நாவுடைய ஆதிசேடனாலும் புகழமுடியாது” என ஒருவரது உயர்ந்து பரந்த புகழைப்பற்றி உரைக்க முடியாமை தோன்ற உரைப்பது வழக்கம். அந்த ஆதிசேடன் நாவாயினும் பிளவுபட்டு உரையாடற்கேற்ற வாய்ப்பில்லாமல் இருப்பது. வாய்விட்டுரைப்பதற்கேற்ற நல்ல நா மக்களுக்கு உள்ளது; தேவர்கட்கும் உளதென்னலாம். தேவருள்ளும் சிலர்க்குப் பல தலைகள் உண்டெனினும், ஆயிரம் தலையுடையார் இல்லை; நன்னாக்கு ஆயிரம் இருந்தாலும் சிவன் புகழ் முற்றவும் உரைத்தற்கடங்காமல் தனிச்சிறப்புற்று விளங்குகிறது என்றற்குச் “சாற்ற அநேகம் நன்னா உள்ளதாயினும் சாற்றரிதம் வீற்றவனே” என உரைக்கின்றார். சுவையறிந் துண்டற்கு ஒரு நா அமையும்; புகழ் பரவிப் போற்றுதற்குப் பல நா வேண்டப்படுமாறு புலப்படச் “சாற்ற அநேக நா” என்றும், குழறலின்றிக் கேட்டோர் இனிதறிந்து கோடற்கு அமைந்த நா என்றற்கு 'நன்னா' என்றும் சிறப்பிக்கின்றார். ஆயிரம் நாவுடையராதல் எவர்க்கும் அரிது; ஆயினும் அந்நாக்களால் சிவன் திருப்புகழை யோதுவது இயலாத அருமையுடைத்து; அதுதான் அவர் புகழ்க்குரிய வீறு என்பது விளங்கச் “சாற்றரிதாம் வீற்றவனே” என விளம்புகிறார். வீறு - பிறது எதற்குமில்லாத சிறப்பு. பனி படர்ந்து வெள்ளிய நிறம் பெற்று விளங்கும் மலையாதலின் இமயமலையாதலின் இமயமலையை வெள்ளிமலையென்றும், அதன்கண் கோயில் கொண்டமைபற்றி “வெள்ளி வெற்பவனே” என்றும் கூறுகின்றார். வெற்பு - மலை. சிவன் திருமேனியில் வெண்ணீறு கிடந்து, அப் பெருமான் உள்ளத்து நிறைந்திருக்கும் நல்லருளைப் புலப்படுத்தல் தோன்ற, “அருள் மேவிய வெண்ணீற்றவனே” என அறிவுறுத்துகின்றார். சிவனுக்கு ஊர்தி வெண்மையான எருது. “ஊர்தி வால்வெள்ளேறே” எனுற் சான்றோர் உரைக்கின்றார்கள். அவ்வெருது நெடிய கொம்பும் உயர்ந்த திமிலும் பால்போல் வெளுத்த நிறமும் உடையது என்றற்கு, “நெடுமுடி வெள்ளேற்றவனே” எனச் சிறப்பிக்கின்றார். தாருகவனத்து முனிமகளிர் மனத்தை மாற்றும் பொருட்டுப் பலியேற்பவனாய்க் கையில் ஓடேந்தி அவர் மனைதோறும் சென்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து “பலி ஏற்பவனே” எனவுரைக்கின்றார். எல்லா வுலகையும் படைத் தளித் தழிக்கும் பெருமான் பலியேற்றான் என்பதையொரு சிறப்பாக முன்னையோர் மொழிந்துள்ளனர். ஆனால் ஞானசம்பந்தர் “மனமுலாம் அடியார்க்கருள் புரிகின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான்” எனப் புகல்கின்றார். தன்பால் அன்புடையார்க்கு வேண்டுவன நல்கி வாழ்வித்தலில் சிவபிரான் தன்னிகரில்லாத தலைவன் என்பதுபற்றி, “அன்பர்க்கு ஏற்றவனே” எனப் பாராட்டி மகிழ்பவர், இறுதியாகத் தனக்கு வேண்டுவது திருவருளே என்றற்கு “நின் அருள் தரவேண்டும்” என விண்ணப்பிக்கின்றார். அருளின் சிறப்பைக் காரைக்காற் பேயார்,
“அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன் அருளே பிறப்பறுப் பதானால் - அருளாலே மெய்ப்பொருள் நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதென் கு”
எனவுரைப்பது காண்க.
இவ்வரிய கருத்தையுட்கொண்டே இப்பாட்டின்கண் வள்ளலார் திருவருளொன்றையே நயந்து வேண்டுகின்றமை அறிகின்றோம். (198)
|