199
199. பன்னாளும் பன்முறையும் பரமன் புகழே பாடிக்கொண்டிருக்கும் வடலூர் வள்ளலின் உள்ளம் பரந்து
உலக முழுதும் செல்வதொழிந்து சிவ பரம்பொருள்பால் ஒன்றுகிறது; பலவேறு உலகியல் நிலைகள் நிலைபேறின்றிக்
கெடுவது கண்ட அவரது உண்மையறிவு, நிலையாமை வகையனைத்தும் நிலைபேறுடைய மெய்ந்நிலை யொன்று உண்டு
என்பதைக் காட்டக் காண்கின்றார். அதனைத் தமக்கு அருளுமாறு முறையிடுகின்றார்.
2369. பதியே சரணம் பரமே
சரணம் பரம்பரமாய்
திதியே சரணம் சிவமே
சரணம் சிவமுணர்ந்தோர்
கதியே சரணம்என் கண்ணே
சரணம்முக் கட்கருணா
நிதியே சரணம் சரணம்என்
பால்மெய்ந் நிலையருளே.
உரை: எல்லாவுலகிற்கும் தலைமையாகிய பதிப்பொருளே, எல்லாத் தத்துவங்கட்கும் அப்பாலாய் மேலாயுள்ள பொருளே, மேன்மேலாய்ச் சென்று நிற்கும் புவனப் படைப்புக்கு முதற்பொருளே, சிவமே, சிவமுண்மையுணர்ந்த சிவஞானிகட்கு முடிவுநிலையாய பெருநிலையே, எனக்கு ஞானக் கண்ணாய் இலங்குபவனே, மூன்று கண் கொண்ட கருணாநிதியே, உன்னையே சரணம் அடைந்தேன்; எனக்கு மெய்ந்நிலையாய சிவபதத்தை அருளுக எ.று.
மக்கள், முனிவர், தேவர், தேவதேவர் அனைவர்க்கும் தலைவனாய் இயக்குதல் பற்றிச் சிவனைப் 'பதி' என உரைக்கின்றார். இவ்வாறே சருவ ஞானோத்தரம் முதலிய சிவாகமங்கள் உரைக்கின்றன. சகல புவனங்களுக்கும் மேன்மேலாய் உயர்ந்து விளங்கும் சிவலோகத்தைச் சிறப்பித்தற்குப் பரமே என்றும், பரம்பரமே என்றும் பகர்கின்றார். பரம், மேல் தத்துவங்களையும் புவனங்களையும் படைத்து அவ்வவற்குத் தலைமை தாங்கி நிலைபெறுவிக்கும் தன்மைதோன்ற “திதியே” என விளக்குகிறார். நிலைபெற்று நின்று உள்பொருளாய்க் காட்சிதரும் உலகைப் படைத்தளிப்பதால் திதியாயிற்று. கலை, தத்துவம், புவனம் என்பவற்றின் இயல்பு கடந்து ஞானமயமாய் இலகுவது சிவமாதலின் “சிவமே” என்றும், சிவபரம்பொருளைச் சிவஞானத்தால் உணர்ந்த சிவஞானிகட்கு முடிவில் சென்றடையும் இன்பநிலையமாதல் பற்றிச் “சிவமுணர்ந்தோர் கதியே” எனவும் தெரிவித்தருள்கின்றார். இவ்வுணர்வை யூக்கும் பசுஞானவொளியைக் “கண்”ணென்றும், சிவஞானப் பேரொளியை “முக்கண்” என்றும், இந்த இருவகை ஞானங்களால் ஆன்மாவை உய்விக்கும் பேரருணிலையைக் “கருணாநிதியே” என்றும் உரைக்கின்றார். இத்தனையும் திருவருள் ஞானத்தால் கண்டறியும் வடலூர் வள்ளல், இவற்றிற்கெல்லாம் மேலாய் இன்பமாய் நிலைபேறாய் உள்ள சிவபோக வாழ்வு வேண்டி, “மெய்ந்நிலை அருளே” என விளம்புகிறார்.
இதனால், வள்ளலார், பசுபாச ஞானப் போக்கின் மாறிச் சிவயோக போக ஞனங்களை நினைந்து வேண்டுவதைக் காணலாம். (199)
|