200

      200. சிவபரம் பொருளைப் பொதுநிலையில் வைத்து அது சிவமும் பதியும், ஆதியும் அருள் நிதியுமாம் இயல்புகளை ஓதி அருள் வாழ்வு நல்கும் மெய்ந்நிலை அருளுமாறு முன்னைத் திருப்பாட்டில் வேண்டிக் கொண்ட வள்ளற் பெருமான், தமக்கும் சிவனுக்கும் உள்ள உறவை நினைக்கின்றார். தொடர்பு காட்டி முறையிட்டவழி அருள்புரிதற்கு ஏதுவாம் எனக் கருதுகின்றார். தொடர்பு விளக்கின், ஏதின்மை யென்ற குறை நீங்கி இறைவன் ஏற்றுக் கோடற்கு வாய்ப்புண்டாம் எனத் தெளிந்து வேண்டுகின்றார்.

2370.

     என்உற வேஎன் குருவேஎன்
          உள்ளத் தெழும்இன்பமே
     என்னுயி ரேஎன்றன் அன்பே
          நிலைபெற்ற என்செல்வமே
     என்னறி வேஎன்றன் வாழ்வேஎன்
          வாழ்வுக் கிடுமுதலே
     என்னர சேஎன் குலதெய்வ
          மேஎனை ஏன்றுகொள்ளே.

உரை:

     உறவே, குருவே, இன்பமே, உயிரே, அன்பே, செல்வமே, அறிவே, வாழ்வே, வாழ்முதலே, அரசே, தெய்வமே, அடியேனை அருள் பெறற்குரியனாக ஏன்று கொள்க எ.று.

     சமய நூல்களால் துணிந்து தெளியப்பட்ட பொருள் சிவம், உயிர், உலகு என்ற மூன்றுமாகும்; இவற்றுள் உலகு உணர்வற்ற ஒன்றாதலால், உயிர்கட்கோ சிவத்துக்கோ அஃது உறவாகாது. உயிரும் சிவமும் உணர்வுடைய சைதன்யங்களாதலால் ஒன்றிற்கொன்று உறவாதற்கமையும்; அதனாற் சிவத்தை “என் உறவே” என உரைக்கின்றார். மலப்பிணிப்பால் செயலற்றுக் கேவலத்துக் கிடந்தபோது உணர்வு கொளுத்திச் சகலத்தில் புகுத்தி இயக்கினமைபற்றி, சிவனை “என் உயிரே” எனத் தொடர்புபடுத்துகின்றார். அறியாமையால் இருளுற்று மயங்குங்காலத்து அறிவு தந்து உய்விக்கும் இயைபுபற்றி “என் குருவே” என உரைக்கின்றார். குருவையும் மாணவனையும் தொடர்புபடுத்துவது குருவருளும் அறிவாதலால், “என் அறிவே” என்றும், அறிவருளுதற்கும் ஏற்றற்கும் ஏது அன்பாதல்பற்றி, “என் அன்பே” என்றும், அதனைப் பெறுங்கால் உள்ளத்து எய்துவது அறிவின்பமாதலால் அதனை நினைந்து “என் உள்ளத் தெழும் இன்பமே” என்றும் எடுத்திசைக்கின்றார். இன்பத்தை நுகர்தற்கும் அந்நுகர்ச்சி தடையுற்றுக் கெடாதவாறு முறை செய்தளிக்கும் சிவன் செயலை வியந்து “என் அரசே” என்றும், அரசின் காவற் செயலைச் செய்யும் அதிகாரிகள்போலத் தெய்வங்கள் துணைபுரிவது கண்டு “என் குல தெய்வமே” என்றும் குறிக்கின்றார். இங்ஙனம் சிவத்தோடு தொடர்புற்று, உறையும் தமது செயற்குச் சிவத்தின் திருவருள் ஊக்கம் தருதல் பற்றி, என் வாழ்வே எனவும், வாழ்வை வாழச்செய்யும் செயல் நோக்கி “வாழ்முதல்” எனவும், வாழ்வுக்கு இன்றியமையாத முதல் திருவருட் செல்வமாவதால் “என் செல்வமே” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், உறவும் வாழ்வும் அறிவும் இன்பமும் பெறுதலே சிவபோகப் பெருவாழ்வு; இதற்குரியனாதல் முறை என்று உணர்தல் கூறப்படுவது காணலாம்.

     (200)