201

      201. உலக வாழ்வில் எய்தும் துன்பவின்பங்களைக் காணும்போது துள்ளித் துடித்தோடுவது மனத்தின் இயல்பு. துன்பத்தைக் கண்டவழி அதனைவிலக்குதற்கும், இன்பம் எய்தியவழி அதனைப் பெருகப் பெற்று ஆரத்துய்த்தற்கும் நெஞ்சம் அவாவி அல்லல்களுக்கு உள்ளாகின்றது. அத்தகைய துள்ளலும் துடிப்பும் இன்றி அமைதி கொண்டு இன்புறற்கு இயைந்தது சிவானந்தப் பெரு வாழ்வு; அதனைப் பெற்றது திருவைந் தெழுத்து என்பதை வள்ளலார் கண்டு நமக்கு அறிவுறுத்துகின்றார்.

2371.

     கான்போல் இருண்டஇவ் வஞ்சக
          வாழ்க்கையில் கன்னெசஞ்சமே
     மான்போல் குதித்துக்கொண் டோடேல்
          அமுத மதிவிளங்கும்
     வான்போல் குளிர்ந்த சிவானந்த
          வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
     தேன்போல் இனிக்கும் சிவாய
          நமஎனச் சிந்தைசெய்யே.

உரை:

     கற்போன்ற நெஞ்சமே, இருள் படிந்த கானம்போல் வஞ்சம் நிறைந்த இவ்வுலக வாழ்வில் மானினம் போலத் துள்ளித் திரிவதைக் கைவிடுக; தண்ணிய சந்திரன் விளங்கும் வானம்போலக் குளிர்ந்த சிவானந்தப் பெருவாழ்வு பெற்றுத் திளைப்பதற்குச் செந்தேன் போன்று இனிக்கும் சிவாய நம என்ற திருவைந்தெழுத்தைச் சிந்தையில் வைத்து எண்ணுவாயாக. எ.று.

     கான்போல் இருண்ட என்பதை, இருண்ட கான் போன்ற என மாற்றுக. வஞ்சகம் நிறைந்த வாழ்வு, இருள் படிந்த கானம் போல்வதென அறிக. உருகா வியல்புடைமைபற்றிக் கன்னெஞ்சமே என உரைக்கின்றார். துன்பத்தைத் தவிர்த்தற்கும் இன்பத்தை ஆழ்ந்து நுகர்தற்கும் உள்ளம் துள்ளலும் துடிப்பும் எய்துவது பற்றி, “மான்போல் குதித்துக் கொண் டோடேல்” என அறிவிக்கின்றார். மதி என்ற சொல்லே மதுவை யுடையதெனப் பொருள் காணப்படுகிறது; சந்திரன்கண் அமுதமயமான மதுவுண்டென்பது பெரியோர் கருத்து. அதனால் “அமுதமதி” எனவுரைக்கின்றார். மதி விளங்கும் வானம் குளிர்ச்சி மிகவுடையது; நிலத்தின்மேல் வெறுப்புற்று மேற்செல்லும் முகில் விண்ணிடத்து மிக்கிருக்கும் குளிர்ச்சியால் மழையாகவும் பனியாகவும் மாறுவது இக்கால விஞ்ஞானத்தால் மெய்ப்பிக்கப்பட்டது. குளிர்நாட்டவர்க்கு வெப்பத்திலும், வெப்ப நாட்டவர்க்குத் தட்பத்திலும் விருப்புண்டு. வெம்மை நாட்டவரான நம்மவர்க்கு இன்பம் குளிர்ச்சியிலாதலால் “வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்வு” எனச் சிறப்பிக்கின்றார். சிவானந்தப் பெருவாழ்வுக்குத் திருவைந்தெழுத்தின் சிந்தனை வாயிலாதலால், அதனை வற்புறுத்துகின்ற வள்ளலார், ஒவ்வோரெழுத்தையும் சிந்திக்கும்போது செந்தேன் சிறந்து முந்திப் பொழிவதுபற்றி, “செந்தேன் போல இனிக்கும் சிவாய நம” எனத் தெரிவிக்கின்றார். இறைவன் திருவடி, “சிந்திப்பவர்க்குச் சிறந்த செந்தேன் முந்திப் பொழிவது” எனத் திருநாவுக்கரசர் உரைப்பதும் காண்க. ஒவ்வோர் எழுத்தும் சிவனையும் திருவருளையும் உயிரையும் நினைப்பித்து, திருவருள் சிவத்தோடு உயிரைப் பிணிப்பித்து, உலிகியல் வாழ்வில் தோய்ந்து வாழ்தற்கும், விலகி நீங்கி ஞானவாழ்வில் நயந்துறைதற்கும் உதவும் நீர்மை இன்பமாய்க் காட்சிப்படும் என்பது கருத்து.

     இதனால், திருவைந்தெழுத்தின் சிந்தனை தேன்பால் இனித்துச் சிவபோகப் பெருவாழ்வில் இனிது செலுத்தும் என்பது உணர்த்தியவாறாம்.

     (201)