202
202. வடலூர் வள்ளலின் திருவுள்ளம் எப்போதும் சிவபரம்பொருளையே சிந்தித்திருக்கும் திருவுடையது,
சிவன் கயிலையில் திருவிளங்க வீற்றிருப்பதும் தேவர்ளும் அவர்கட்குத் தலைவர்களும் அவ்வப்போது
போந்து வழிபடுவதுமாகிய நிகழ்ச்சிகளை அவர் மனம் எண்ணிய வண்ணம் இருக்கும். பிரமன் முதலிய தேவர்கள்
சிவனிடம் குறையிரந்து நிற்கும் குறையுடையவர்; குறையிருப்பதால் அவர்கட்கும் துன்பம் தோன்றி
வருத்துகிறது. அதனை நீக்கிக்கொள்ளும் வன்மையில்லாமை தேவரிடத்தும் உளது. இவ்வாற்றால் தெய்வ
வாழ்வு உயர்ந்ததுபோலத் தோன்றினும், மக்களைப்போல் நோய் உறுவதும் நீங்குவதும் தேவர்பாலும்
இருப்பது, அவர் வாழ்வில் மக்கட்கு விருப்புண்டாகாத நிலையை உண்டு பண்ணுகிறது. தேவர்களை உயர்ந்தவர்களாக
எண்ணி அவர்பால் நலம்பெற விழைந்து வழிபடுவதைவிட, தேவர்கட்குத் தேவனாகிய சிவன்பாலே முறையிட்டுப்
பிணி நீங்கி நலம் பெறலாம் என்ற துணிவு மக்கட்கு உண்டாகிறது. அத்துணிவு சிறக்கும் வண்ணம்
அவர்கள் முறையிடும் திறத்தை வள்ளலார் நமக்கு உரைத்துக் காட்டுகின்றார்.
2372. வேதனென் கோதற வேண்டுமென்
கோஎன் விண்ணப்பஞ்செய்
பாதனென் கோகடற் பள்ளிகொண்
டான்தொழும் பண்பன்என்கோ
நாதனென் கோபர நாதனென்
கோஎங்கள் நம்பிக்குநல்
தூதனென் கோஅவன் தோழனென்
கோநினைத் தூமணியே.
உரை: என் கோவே, என் குற்றம் பலவும் நீங்க வேண்டும் என்று தேவனாகிய பிரமதேவன் விண்ணப்பம் செய்யும் திருவடிகளையுடைவன் என்று துதிப்பேனோ, பாற்கடலிற் பள்ளிக்கொள்ளும் தெய்வமாகிய திருமால் கைகூப்பித் தொழுகின்ற பண்புடையவன் என்று வேண்டுவேனோ, ஏனையுலகுகட்கும் உயிர்கட்கும் தலைவன் என நவில்வேனோ, சுத்த தத்துவத்துக்குள்ளாகிய நாததத்துவம் கடந்த பரநாத தத்துவத்தையுடையவன் எனப் புகழ்வேனோ, எங்களை ஆளாகவுடைய ஆளுடைய நம்பிக்கு நல்ல தூதன் என்று சொல்வேனோ, அவனுடைய உயிர்த் தோழன் என உரைப்பேனோ, தூய மணியாய் விளங்கும் உன்னை என்னென்று சொல்லிப் பரவுவேன் எ.று.
வேதன் - பிரமதேவன்; வேதங்களை ஓதுவது தொழிலாகவுடையவன் என்பதுபற்றி அவனை வேதன் என விளம்புகின்றனர். கோது - குற்றம். குற்றமே இல்லாதவன், சிவபெருமானல்லது பிறர் எவருமல்லர்; பிரமன் நாளும் வேதம் ஓதுபவனாயினும் குற்றமே இல்லாதவனல்லன் என்ற உண்மை புலப்பட வேண்டியே, “வேதன் என் கோதற வேண்டும் என விண்ணப்பம் செய் பாதன்” என விளக்கிக் கூறுகின்றார். நாடோறும் அவன் வேதம் ஓதுவதும் இக்கோது நீங்க வேண்டும் என்பதற்காகவே. ஓதியும் நீங்காத குறை அவன்பால் ஒட்டிக்கொண்டிருப்பதால்தான் “என்கோதற வேண்டும் என் கோவே” எனப் பரவுகின்றான். கடல் எனப் பொதுப்படக் கூறினாராயினும், பாற்கடல் எனத்தான் நாம் கொள்ளல் வேண்டும். பாற்கடலிற் பள்ளி கொள்ளும் பரமனாயினும் அவனை வழிபட வேண்டிய நிலைமையன் என்பது தோன்ற, “பள்ளி கொண்டான் தொழும் பண்பன்” எனப் பரிந்துரைக்கின்றார். நாதன்-தலைன். சைவருரைக்கும் தத்துவம் முப்பத்தாறனுள், சுத்த தத்துவமாகிய சிவ தத்துவம் ஐந்தனுள் உச்சிக் கண்ணது நாத தத்துவம். இது மாயா மண்டலத்தினுள் இருத்தலால் அபரநாதம் என்றும், மாயா மண்டலம் கடந்த பரசிவத்தின் தனித் தத்துவமாகிய நாதம் பரநாத தத்துவம் என்றும் கூறப்படும். அவற்றுள் பரநாத தத்துவத் தலைவனாகும் சிறப்பை நினைப்பிக்கவே “பரநாதன் என்கோ” என உரைக்கின்றார். ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரர்பால் தமக்குள்ள அன்பு மிகுதியை “எங்கள் நம்பி” என்று நாம்அறிய வுரைக்கின்றார். நம்பி விரும்பியவண்ணம் நள்ளிரவில் பரவையார்பால் தூது சென்று நம்பியின் விருப்பம் நிறைவுறச் செய்த நலம் பற்றி “நல் தூதன் என்கோ” என உரைப்பதுடன், சங்கிலியார் திருமணத்தில் தோழமை புரிந்த அன்பு நலம் வியந்து “அவன் தோழன் என்கோ” எனப் புகழ்கின்றார். தூதனும் தோழனுமாகியும் தன் தனித்தலைமைத் தன்மையில் குறைபடாமை விளங்கத் “தூ மணியே” என்று சொல்லுகிறார்.
இதனால் பிரமன் முதலிய தேவர் குறையிரந்து பரவும் நாதனாகவும் பரநாதத் தலைவனாகவும் ஆளுடைய நம்பிக்குத் தூதனாகவும் தோழனாகவும் நலம் புரிந்த பெருமையைப் பாடினாராயிற்று. (202)
|