203
203. யோக நெறியை மேற்கொண்டு
தேகத்துள் அமைந்த நிலம் (ஆதாரம்) ஆறனுள், உணர்வை நிறுத்தி உலகியல் நிகழ்ச்சிகளிற்
கலவாது ஒன்றியுயர்ந்த யோகியர்களின் யோகக் காட்சியில் உய்த்துச் செல்லும் குண்டலினி என்ற
சத்தியைப் பணிகொள்வார்களுக்கும், மனமொழி மெய்களைப் பத்தி நெறியில் ஈடுபடுத்திப் பாடும்
பணியில் ஒன்றியிருப்பவர்க்கும் துணையருளும் சிவத்தின் திருவருளைச் சிந்திக்கின்றார்.
2373. இயங்கா மனமும் கயங்கா
நிலையும் இகபரத்தே
மயங்கா அறிவும் தியங்கா
நெறியும் மகிழ்ந்தருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா
உயர்தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற் குயங்கா
தவருட் புகுந்தவனே.
உரை: உயர்ந்த தவயோகியர் வாழ்த்துகின்ற புயங்கனே, துதிக்கும் பணியில் சோர்வுறாத பெருமக்கள் உள்ளத்தில் புகுந்தருள்பவனே, நிலையின்றி அலையாத மனத்தையும், கலங்காத குணநிலையையும், இம்மை மறுமை வாழ்வுகளை நினைந்து மயக்கமுறாத அறிவையும், கலங்காத நெறியையும் உள்ளம் மகிழ்ந்து அருளுக. எ.று.
மூலாதாரம்,. சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆணை என்ற ஆதாரம் ஆறும் ஆறு நிலங்களாகும். இவ்வாறும் குண்டலினி என்ற பாம்புருவாய சத்தி சென்று தங்கும் இடமாகும். ஏனை இலாடம், கண்டம், இதயம் முதலியனபோல உயிர் தங்கும் இடமல்லவாதலால், “வயங்கா நிலம்” என்று கூறுகின்றார். யோகியர் தமது யோகாக்கினியால் மூலாதாரத்தில் கிடக்கும் குண்டலினி என்ற சத்தியை எழுப்பி மேனோக்கி எழச் செய்வர்; பாம்புருவாய அதன்வழி உச்சிக்குமேல் பன்னிரண்டங்குலத்தில் (துவாத சாந்தத்தில்) ஒழுகும் மதுவுண்டு யோகியர் ஒன்றியிருப்பதன்றி இடையில் ஊறும் போக போக்கியங்களில் கலந்துகொள்ள ராகலின், அவரை “வயங்கா நிலத்தில் முயங்கா உயர் தவர்” எனவுரைக்கின்றார். அன்பு நிறைந்த மனத்துடன் காமம் குரோத முதலிய அறுவகைக் குற்றங்களை நீக்கி, பொறிபுலன்களை அடக்கி நன்னெறிக்கட் செலுத்தி ஞானவின்பம் பெறுவதும் தவமாதலின், அவரையும், “வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர்” என்றாரென்று கொள்ளினும் அமையும். புயங்கம் - பாம்பு. புயங்கன் - பாம்பணிந்தவன்; குண்டலினியை இயக்குபவன் என்றுமாம். துதித்தற்கு உயங்காதவர், திருமூலர் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள். உயங்குதல் - வருந்துதல். “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனத் திருமூலர் கூறுவது காண்க. சிவபெருமான் தம்முட் புகுந்து ஆண்ட திறத்தை இப்பெருமக்கள் திருப் பாடல்கள் நன்கு விளம்புகின்றன. அதுகொண்டு “உயங்காதவர் உட்புகுந்தவனே” என உரைக்கின்றார். பொறி புலன்களில் ஓடாது ஒன்றிய நிலையே மனத்துக்கு மாண்பாதல் பற்றி, “இயங்கா மனம்” வேண்டுகிறார். “உரன் என்றும் தோட்டியால் ஓரைந்தும் காத்தல்” சிறப்பென்று திருவள்ளுவர் தெரிவிப்பது காண்க. உயிரறிவுக்குத் தெளிவு கலக்கம் மயக்கம் என்ற மூன்று நிலையுண்டு. இவற்றைச் சுகதுக்க மோகங்களைச் செய்யும் சத்துவம், இராசதம், தாமதம் என மூன்று குணங்களாக வடநூலார் கூறுவர். இம்மை வாழ்வை நுகரும்போது அதன்பாலும், மறுமை வாழ்வைக் கற்றோர் புனைந்துரைக்கும்போது அதன்கண்ணும், அறிவும் இச்சையும் எழுந்து மயங்குவதால், “மயங்கா அறிவும்” என்றும், மனம் போன நெறி உயிர் அறிவைத் தியங்கச் செய்தலால் அது கூடாது என்றற்குத் “தியங்கா நெறியும்” என்றும் சொல்லி, இவற்றை மகிழ்ந்த உள்ளத்துடன் அடியேனுக்கு அருளவேண்டும் என்று முறையிடுதலால், “மகிழ்ந்தருள்வாய்” என வுரைக்கின்றார்.
இதனால், இறைவன் திருவுள்ளம் மகிழ்ந்து அருளப்பெறுவது சீர்த்த முறையெனக் கூறுமாறு காணலாம். (203)
|