204

      204. சிவனை நினைக்கின்ற வள்ளலார் திருவுள்ளம் அவனுடைய புகழ் குறிக்கும் பெயர்கள் பலவற்றைச் சொல்லி இன்புறுகிறது. அருள்குறித்து முறையிட்ட ஆர்வம், சிவனுடைய திருநாமங்களை மாலையாகத் தொடுத்துப் பாடும் வகையில் பீறிட்டெழுகிறது. நாம ஆவளி யென்னும் பெயர் மாலக்குக் கட்டளை கலித்துறை என்ற யாப்புப் பொருந்துவதன்று; ஆயினும், அதுவும் வள்ளலார்க்கு நன்கு கைவந்து இன்பம் சிறக்கிறது.

2374.

     சிவசங்க ராசிவ யோகா
          சிவகதிச் சீரளிக்கும்
     சிவசம்பு வேசிவ லோகா
          சிவாநந்தச் செல்வநல்கும்
     சிவசுந்த ராசிவ போகா
          சிவாகமச் செந்நெறிசொல்
     சிவபுங்க வாசிவ ஞானிகள்
          வாழ்த்தும் சிவகுருவே.

உரை:

     சிவமாம் நலத்தை நன்கு செய்பவனே, சிவநெறிக்கண் ஒன்றுபவனே, சிவலோக வாழ்வளிக்கும் சம்புவே, சிவலோகத் திருப்பவனே, சிவானந்தமாகிய செல்வத்தைக் கொடுக்கும் அழகனே, சிவபோகம் தருபவனே, சிவாகமங்கள் உரைக்கும் செவ்விய நெறியை விளக்கும் உயர்ந்தவனே, சிவஞானிகள் மனமகிழ்ந்து வாழ்த்தும் குருவே எ.று.

     சங்கரன் - சுகத்தைச் செய்பவன். சிவநினைவும் மொழியும் செயலும் பொருந்திய கரணங்களையுடையனாய் ஒழுகுவதால் உளதாகும் இன்பநிலையை எய்துவிப்பவன் என்ற கருத்துப் புலப்படச் “சிவசங்கரன்” என்று சிறப்பிக்கின்றார். சிவயோகம், உடல் பொருள் உலகு முதலியவற்றை உறுதியெனக் கொள்ளாமல், அவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, உயிர்க்கு உறுதிப் பொருளாவது சிவனது திருவருள் என மேற்கொண்டு அதனோடு ஒன்றியொழுகுவது. அதனை எய்துதற்கு உறுதுணையாதலால், “சிவயோகன்” எனக் குறிக்கின்றார். சிவயோகத்தால் ஆன்மாச் சிவபோக நுகர்ச்சிக்குரிய சிவகரணங்களோடு கூடும் நிலை “சிவகதி” யாகும்; பசுகரணம் பதிகரணமாகிச் சிவநினைவே நிறைந்து நிற்பது சிவகதிக்குரிய சீர்மை; அதனையும் அவன் அருளாலன்றிப் பெறலாகாமையின், “சிவகதிச் சீர் அளிக்கும் சிவசம்பு” என விளக்குகின்றார். சிவகரணம் பெற்ற ஆன்மாக்கள் இருப்பது சிவலோகம்; அதுவும் அவனின் வேறாகாமை பற்றிச் “சிவலோகா” எனச் செப்புகின்றார். சிவலோக வாழ்வு சிவானந்தச் செல்வ வாழ்வு; அதனால், “சிவனாந்தச் செல்வம் நல்கும் சிவசுந்தரா” எனச் சொல்லுகிறார். செல்வம், தன்னைப் பெற்றோர்க்கும் பிறர்க்கு நல்குவோர்க்கும் அழகுதரும் சிறப்பமைந்தது; சிவானந்தம் அதனிற் சிறந்த செல்வமாதல் கண்டே, “சிவசுந்தரா” எனப் பரவுகின்றார். சிவம் இலயசிவம், போகசிவம், அதிகாரசிவம் என மூன்று நிலையினை யுடையது. இலயமும் அதிகாரமும் போக நுகர்ச்சிக்குத் துணையாதலால், அதற்குரிய இன்ப நிலையை மனத்திற் கொண்டு “சிவபோகா” எனப் பரவுகின்றார். சிவலோகச் சோர்வும், சிவயோகச் செய்தியும் சிவபோக நுகர்ச்சியும் சிவாகமம் கூறும் செந்நெறி நிற்பார்க்கு உயர்ந்த கொள்கைகளாகும்; அவ்வுண்மை விளங்கவே, சிவாகமச் செந்நெறி சொல் சிவபுங்கவா” என்று உரைக்கின்றார். சிவஞானத்தால் சிவத்தைக் கண்ட ஞானிகட்குச் சிவலோக யோக போகங்கள் செவ்வே கைவருதலின், அவர்கள் சிவத்தை வாழ்த்திச் சிவம் பெற முயல்வார்க்கு அதற்குரிய நெறியை உணர்த்துதலின் “சிவகுருவே” எனப் போற்றுகின்றார். இதனால் சிவாகமச் செந்நெறியும் அதன் பயனும் கூறுவது காண்க.

     (204)