205
205. சிவாகமங்கள் உரைக்கும் யோக போகங்களை நினைத்த வள்ளற் பெருமான், தத்துவாந்தத்தில்
விளங்கும் திருவருட் பெருஞ் சிறப்பை எண்ணுகிறார். அதன்பால் விளங்கும் ஞானமயமும், அது கொண்டு
எல்லாம் செய்யவல்ல நிலைமையும் தெரிகின்றன. அத் தெளிவின்கண் ஆன்மா எய்தும் ஞானவின்பம்
புலனாகக் காணும் வள்ளலார், அதன் பலவேறு இயல்புகளை எண்ணியெண்ணிப் பாடி மகிழ்கின்றார்.
2375. மதிதத்து வாந்த அருட்சிவ
மேசின் மயசிவமே
துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ
மேசிற் சுகசிவமே
கதிநித்த சுத்த சிவமே
விளங்குமுக் கட்சிவமே
யதிசச்சி தாநந்த சிற்சிவ
மேஎம் பரசிவமே.
உரை: ஆகமங்களால் மதிக்கப்படுகின்ற தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பால் நிற்கும் அருள்வடிவாய சிவபரம்பொருளே, அறிவு வடிவாய சிவபரம்பொருளே, துதிக்கப்படுகின்ற அரிய செயல் எல்லாம் செயல் வல்ல உண்மைப் பொருளாகிய சிவபரம் பொருளே, அறிவின்கண் அலைதல் இன்றித் தெளிவே யுருவாய் விளங்கும் சிவபரம்பொருளே, என்றும் பொன்றாத நித்தமாய்த் தூயதாய் மங்கல மாண்பே விளங்குவதாய மூன்று கண்ட படைத்த சிவபெருமானே, பதிபொருளாம் சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் ஞான இன்பமேயாய சிவமே, யாகங்கள் பரவும் மேலான சிவமே எ.று.
முப்பத்தாறும் தொண்ணூற்றாறும் என்றும், தத்துவம், தாத்விகம் என்றும் தத்துவ ஆராய்ச்சி பெருகச் செய்து தருவது சிவாகமமாதலால், “மதி தத்துவம்” என்று கூறுகிறார். சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் வேறாய், அறிவில்லாத மாயையின் காரியக் கூறுகள் தத்துவங்கள். அவற்றின் உள்ளும் புறமும் கலந்து இயங்கியும் இயக்கியும் உலகியலை நடத்துவது திருவருள். அதுவும் ஒளியும் ஒளிப்பொருளும் போலச் சிவத்தோடு நீக்கமற இருப்பதாகலின், “தத்துவாந்த அருட்சிவமே” என உரைக்கின்றார். அருளும் அறிவு மயமாதலால், அருட்சிவத்தைச் “சின்மய சிவமே” எனத் தெரிவிக்கின்றார். சிந்தனை ஆற்றலால் அரிய செயல்களைப் புரிவது சித்து எனப்படும். சித்துக்கள் பலவற்றையும் தங்கு தடையின்றிச் செய்தளிக்கவல்ல பரமனாதலின், சிவனைச் “சித்தெலாம் வல்ல மெய்ச்சிவம்” என்றும், அச்செயலால் உண்டாகும் பயன் ஞானசுகமாம் என்பது விளங்க “சிற் சுக சிவமே” என்றும் கூறுகின்றார். அரிய செயல் மக்களால் பரவித் துதிக்கப்படுவதுபற்றித் “துதிசித்து” எனச் சொல்லுகிறார். சிவலோகத்துச் சிவவாழ்வு சிவகதியாய், சுத்தமாய், நிலையுடையதாய் விளங்குவது தெரிவித்தற்கு “கதி நித்த சுத்த சிவம்” எனவுரைக்கின்றார். தத்துவாதீதனாய், புராணாதி உலகுகட்கு அதீதனாய் விளங்கும் பரமசிவத்தின் மாண்பை, பரசிவம்” எனவும் பரவியுரைக்கின்றார். பதிப்பொருளாகிய சச்சிதானந்தம் சிற்சிவம், அதுவே பரசிவம் என்பது இப்பாட்டின் முடிந்த கருத்தாக மொழிகின்றார்.
இதனால், தத்துவங்கட்கு உள்ளும் அவற்றிற்கு அப்பாலும் அதீதமாயும் சச்சிதானந்தமாயும் இருப்பது பரசிவம் எனப் பரசிவத்துக்கு இலக்கணம் ஒருவாறு கூறப்படுமாறு காண்க. (205)
|