206
206. சைவ சமயத்தவர்க்கு உரிய சைவநூல்கள் பதி, பசு, பாசம் என்ற மூன்றையும் அடிப்படையாகக்
கொண்டு கூறும் இயல்பின. இச்சமயம் தென்னாட்டுக்குரியதாயினும், பண்டை நாளில் சமயவாதிகள்
பலரும் வடமொழியைப் பொதுவாக கையாண்டமையால், அவர்களும் அறிந்து கோடற்பொருட்டு ஆகமம் என்ற
பெயரால் வடமொழியில் நூல் எழுதப்புகுந்து, இறைவனாகிய சிவத்தைப் பதி என்றும், உயிர்களைப்
பசு என்றும், அப் பசுவைப் பிணித்து நிற்கும் தளையைப் பாசம் என்றும் குறித்து வழங்கினர்.
உயிர் தன்னியல்பில்
உணர்வும் ஒளியும் உடையதாயினும் பாசத்தால் தொடக்குண்டிருத்தலால் பசு என்றும் சமய நூல்களில்
குறிக்கப்படுகிறது. சைவ நூல்களில் மிகப் பழமையான தமிழ்நூல் திருமூலர் அருளிய திருமந்திரம்.
அது, “பதிபசுபாசம் எனப் பகர் மூன்றில், பதியினைப் போற் பசுபாசம் அனாதி” என்று கூறுகிறது.
இக்கூற்றில் “பகர்மூன்று” என்ற தொடரை நோக்கின், திருமூலர்க்கு முன்னே வாழந்த சைவ
முன்னோர்கள் இப் பெயர்களை அமைத்தருளினர் என்று அறியலாம். உயிரைப் பிணித்துப்
பசுவார்க்கும் பாசமாகிய தளை, மலம் எனப்படும். ஒளிவடிவான உயிரைப்பற்றி இருளுற மறைப்பதுபற்றி
மலம் (அழுக்கு) எனப்படும்.
இந்த மலக்கலப்பு
எப்பொழுது உளதாயிற்றெனக் காலம் உணரப்படாததால் ‘அனாதி’ என்று சமயக்கணக்கர் அனைவரும்
கூறுவர். மலவிருளிலிருந்து நீங்குவதற்காக உயிரின் பொருட்டு இவ்வுலகு படைக்கப்பட்டுள்ளது; உலகப்பொருளை
யுண்டு வளரும் உடம்பும் படைக்கப்பட்டுளது. தாயின் கருவறையில் உருவாகும் உடம்போடு கூடி உலகில் தோன்றுவது
பிறப்பு எனப்படும். பிறந்து வளர்ந்து சிறக்கும் உடம்பினின்றும் உயிர் பிரிவது இறப்பு ஆகும்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது வாழ்க்கை. உடம்பொடு கூடிய உயிர்கள் உலகில்
வாழ்வாங்கு வாழ்ந்து மலவிருளின் நீங்கி மீளப் பிறவாப் பெரு வாழ்வு பெறும். அதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட
உலகிற்கும் உடம்பிற்கும் முதற்காரணமாவது மாயை என்னும் உணர்வில்லாத சத்திவடிவாய பொருள்.
உடம்பொடு கூடி உலகில் வாழுங்கால் உயிர் நினைப்பதும் பேசுவதும் செய்வதும் என்ற மூன்று செயல்களில்
இடையறவின்றி ஈடுபட்டிருக்கும்; அச்செயலைக் கன்மம் என்பர். மலம் மாயை கன்மம் என்ற மூன்றுக்கும்
வழங்கும் பொதுப்பெயர் ‘பாசம்’ என்பது. பசுவுக்கும் பாசத்துக்கும் வேறாய் மேலாய் விளங்குவது
பதியாகிய சிவம். அது எல்லாம் அறியவல்லது; எல்லாம் செய்யவல்லது; எப்பொருளும் கலத்தல் இல்லாத
தூய்மையானது; ஏனைப் பசுவோடும் பாசத்தோடும் கலந்தாலும் ஒரு சிறிதும் மாசு மறு எய்தாத மாண்புடையது.
உணர்வும் ஒளியுமுடையதாயினும் உயிர் தானாக, ஒன்றை அறியவும் செய்யவும் மாட்டாத சிறுமையுடையது.
அச்சிறுமை பற்றுக்கோடாக, ஒளிக்குள் இருள்போல மலம் கலந்துள்ளது. மலக்கலப்பிலிருந்து உயிரை
விடுவிப்பது கருதி அப் பதிப்பொருள் உடம்பையும் உலகையும் படைத்தளிப்பதற்குக் காரணம் பதிப்பொருளின்
அருட் பண்பேயன்றி வேறு ஒரு நோக்கமும் இல்லை. நெருப்புக்கு ஒளிவிடும் தன்மையும் சுடுந்தன்மையும்
உண்டு; இவ்விரண்டையும் ஒளிரும் சத்தி, சுடும் சத்தி என்பது மரபு; பதிப்பொருளின் அருட்பண்பை
அருட்சத்தி என்பர்.
அருட்சத்தியால்
மாயையிலிருந்து உலகையும் உடம்பையும் படைக்கின்ற முதல்வன் முதலில் மாயையைச் சுத்தமாயை அசுத்த
மாயை என இரண்டாக உருவாக்கி, சுத்த மாயையை நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம்(சுத்த), வித்தை
என ஐந்து கூறாக்குகிறான். ஒவ்வொரு கூறையும் தத்துவம் என்பது வழக்கு. இவ்வாறே அசுத்த மாயை ஏழு
கூறாகி, கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயை என வரும். இவற்றுள் வித்தையை
முதலில் வைத்து, வித்தியா தத்துவம் ஏழு என்பர். இறுதிக்கண் நின்ற மாயை பின்பு இருபத்து நான்கு
தத்துவமாகப் பிரிக்கப்படும். அவற்றுள் உலகிற்கு மூலப்பொருளைந் தன்மாத்திரை என நிறுத்தி,
ஒன்றிலிருந்து வானத்தையும், ஒன்றிலிருந்து காற்றையும், ஒன்றிலிருந்து தீயையும், ஒன்றிலிருந்து
நீரையும், ஒன்றிலிருந்து நிலத்தையும், முதல்வன் தோற்றுவித்துள்ளான். நிலம் முதலிய ஐந்தையும்
பூதம் என்பதால், பூத தன்மாத்திரை ஐந்து, பூதம் ஐந்து எனப்படுகின்றன. இனி, உடம்புக்குரிய மாயையிலிருந்து
பூதம் ஐந்தால் உருவாகிய உலகினை உயிர் அறிதற்கும், அதன்கண் இருந்து தொழில் புரிதற்கும் முறையே
கண் காது மூக்கு வாய் உடம்பு என்றும், கை, கால், வாய், நீர்க்கால், மலக்கால் என்று ஐயைந்து
தத்துவங்காளக்கி கண்காது முதலிய ஐந்தும் உலகினை அறிதற்குக் கருவியாவது பற்றி அறி கருவி (
ஞானேந்திரியம் ) என்றும், தொழிற்கு ஏற்பனவாதலால் கை கால் முதலிய ஐந்தையும் தொழிற்
கருவி ( கன்மேந்திரியம் ) என்றும் கூறுகின்றனர். இவை பத்தும் உடம்போடு ஒட்டியிருப்பன. உடம்பினுள்
கட்புலனாகாத உயிருக்கும் உடலோடொட்டிய பத்துக்கும் இடையே மனம் என ஒன்று நின்று உயிர்க்கும்
உடம்புக்கும் பிரிக்கமுடியாத தொடர்புற்றிருக்கிறது. அது, மனம், சித்தம், அகங்காரம், புத்தி
என நான்காகி ஒன்றினுள் ஒன்றாய் உளது. அறிகருவி தொழிற் கருவிபோல உயிர்க்கு நினைவு
கருவியாம். இது உடற்கு உள்ளேயிருந்து பணி செய்தலால் உட்கருவி (அந்தக்கரணம்) எனப்படும். தன்
மாத்திரை முதல் புத்தி
ஈறாகக் கண்ட பொருளும் கருவியும் உயிர் அறிவதும் செய்வதுமாகிய வினை (தொழில்) செய்தற்கு உரியவாகும்.
உயிரைச் சமயக்கணக்கர் ஆன்மா என்பதுபற்றி இவ்விருபந்து நான்கையும் ஆன்மதத்துவம் என்பர்.
ஆன்மதத்துவம் 24, வித்தியாதத்துவம் 7; நாதம் முதலாகவுள்ள சுத்த தத்துவம் 5, ஆகத் தத்துவம்
36 என்பர்.
விரிந்தது தொகுத்தல்
என்ற முறையில் நோக்குவோமாயின் உயிரின் வேறாக அதனை அனாதியே பற்றியிருக்கும் மூலமலம்,
மாயாமலம் இரண்டு, வினையென்ற கன்மமலம் நான்கு எனக் காணலாம். மூலமலத்தைத் துடைத்தற்கு
அதனைச் சார்ந்து நிற்பதுபற்றி மாயையும் வினையும் மலம் எனப்படுகின்றன. முதல்வனது அருட்சத்தி
இம்மலங்களோடு கலந்து நின்று இயக்குகிறது. அதனையும் மலம் (திரோதமலம்) என்பர். இவ்வகையில்
மலம் ஐந்தாதலை அறிகின்றோம். மலம் என்பதால் இவை யாவும் உயிரறிவை மறைத்து மயக்குவனவாகும்.
இம்மலங்களையும், இவற்றின் தனித்தனி இயல்புகளையும், இவை சார்பாக வந்த ஆன்ம தத்துவக்
கூறுகளையும் வடலூர் வள்ளல் நுணுகி நோக்குகிறார். உலகியலில் பெறப்படும் இன்ப நுகர்ச்சியினும்
துன்ப நுகர்ச்சி மிக விரிந்து தோன்றக் கண்டு அஞ்சுவது உயிர்க்கு இயல்பு. ஆன்மதத்தவக் கூறுகள்
உயிரறிவுக்கு மறைப்பு நீக்கி விளக்கம் தருவதும், விளக்கம் எய்தும்வரை அறிவை மறைத்து மயக்குவதும்
உண்டு. மயக்கத்தால் குற்றம் தோன்றித் துன்பம் விளைத்தலால், அதனால் வருந்தி அவற்றைப் பழித்துரைப்பது
அறிஞர் செயலாக இருந்து வருகிறது. வள்ளலார் அந்த அறிஞர் மரபினராதலால், அவற்றின் (ஆன்ம தத்துவக் கூறுகள்)
பன்மையையும் தம்முயிரின் தனிமையையும் எடுத்தோதி இறைவன்பால் முறையிடுகின்றார்.
2376. கடும்புல வேடர்கள் ஓரைவர்
இந்தியக் கள்வரைவர்
கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள்
வன்மலக் கோளரைவர்
அடும்படை கோடிகொண் டுற்றார்மற்
றேழையன் யானொருவன்
இடும்படை யாதுமி லேன்வெல்வ
தெங்ஙன் இறையவனே.
உரை: இறைவனே, புலன்கள் என்ற வேடர் ஐவர், மெய்வாய் முதலிய இந்திரியங்கள் என்ற கள்வர் ஐவர், முதலிய கரணங்களாகிய துட்டர் நால்வர்; மூலமலம் முதலிய மலங்களாகிய தீக்கோளர் ஐவர்; ஏழையேன் ஒருவன்; இவர்கள் கோடி படையுடன் ஒருங்குவந்து உள்ளனர்; இவர்களை யான் வெல்வது எவ்வாறு? அருள் புரிக எ.று.
புலன்கள் விளைவிக்கும் ஆசை உயிரறிவின் வன்மையைக் குறைத்துத் தம்வழியில் ஈர்த்துச் செல்வதுபற்றிக் “கடும்புல வேடர்” என்று கூறுகிறார். கடுமை - மிகுதி. புலன் ஐந்தாகலின் வேடர்கள் ஓர் ஐவர் என்கிறார். புலன்களை வேடர் என்று சான்றோர், “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து” என ஓதிக் காட்டுவர். இந்திரியம் என்பது இந்தியம் என வந்தது. “இந்தியப் போகில்” (ஞானா. 23. 8.) எனப் பிறரும் வழங்குவது காண்க. உயிர் அறியாமே புறப்பொருள் மேற்செல்வதால் “கள்வர்” என வுரைக்கின்றார். கரணம், மனம் முதலிய நான்கும். மலசத்தியால் மயக்குண்டு தீ நினைவு தோற்றுவித்துத் துன்பத்துக்குள்ளாக்குதலால் கொடுங்கரணத் துட்டர் நால்வர் என உருவகம் செய்யப்படுகிறது, கோளார் - கொலை செய்வோர். ஓரிரு பிறப்புக்களில் நீங்காது, எழுவகைப் பல்வேறு பிறப்புக்களில் செலுத்துவதால் வன்மலம் என உரைக்கின்றார். எண்ணிறந்த நினைவுகளையும் செயல்வகைகளையும் உடைமை தோன்ற, அவற்றைக் குற்றம் விளைவிக்கும் படையாக்கி, “அடும்படை கோடி கொண்டு உற்றார்” என்பது பொருத்தமாகும். இப்படையை எறிந்து அழிக்கவல்லது ஞானமாகிய அருட்படை ஒன்றே; அது தானும் என்பால் இல்லை என்பார். “இடும்படை யாதும் இல்லேன்” என்றும், இக்கொடும்படையை வென்றாலல்லது உய்தி பெறுமாறில்லை என ஞானவான்கள் கூறுகின்றார்கள்; யான் எவ்வாறு வென்றி பெறுவேன் என்பார், “வெல்வது எங்ஙன்” என்றும் உரைத்து, அருள் ஞானமாகிய படையை அருள்க என வள்ளலார் இறைவனிடம் முறையிடுகின்றார். (206)
|