207
207. நம் நாட்டில் வரலாற்று நிகழ்ச்சிகளும் பொய்க்கதைகளும் எனப் பல மக்களிடையே நிலவுகின்றன.
அவற்றுள் வரலாற்றுக் குறிப்புக்களும் சங்க காலம், பல்லவர் காலம், சோழ பாண்டியர் காலம்,
விசயநகர வேந்தர் காலம், முகமதிய ஐரோப்பியர் காலம் எனப் பல காலங்களைப் பின்னணியாகக்
கொண்டு உள்ளன; அவற்றை அறிதற்குச் சங்க இலக்கியங்களும், செப்பேட்டுக் கல்வெட்டு இலக்கியங்களும்
பல்லாயிரக்கணக்கில் உள்ளன; ஆனால் அவற்றை ஆராய்ந்து வெளியிடுவாரில்லை; அதற்கென அரசியலில்
ஒரு துறை உளதெனினும், வரலாற்றுக் குறிப்புக்களைப் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பெற்றுப் படித்தறிதல்
வேண்டும் என்ற எண்ணம் அவர்கட்கு இல்லை. இவற்றின் வேறாகப் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட
கதைகள் எண்ணிறந்தன உள்ளன. அவை யாவும் தேவர்களையும் மக்களையும் சேர்த்து மண்ணுலகத்தோடும்
விண்ணுலகத்தோடும் பிணைந்து வாழ்க்கைக்கு ஒவ்வாத செய்திகளைக் கூறுவன. மக்களின் உயர்ந்த தேவர்களுக்கு
மக்களினும் தாழ்ந்த கீழான ஆசைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் இருப்பதாகப் புணர்த்துச் சாதாரண
மக்களுக்கும் அறிவால் காணுமிடத்து அவர்பால் அருவருப்பும் புறக்கணித்து இகழத்தக்க மனவுணர்வும்
உண்டாகுமாறு நிகழ்ச்சிகள் பல புராணங்களில் புணர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் வேறாக உலகியலோடு
பொருந்தாத பொய்க்கதைகள் அளவில்லாமல் உரைக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகளை மறைத்துப்
பொய்யும் புனைகதைகளுமே நாட்டில் பெருகி நிலவ விட்டமையால், கற்ற மக்களிடையே கடவுட் பற்றும்,
அது நினைந்து ஒழுகும் சமய வொழுக்கமும் வேரற்றுப் போயின. போலிபற்றும் போலிப்புகழும் வளம்பெற்று
விளைவு மிகுந்தன. இவற்றை நூறாண்டுகட்கு முன்னே வடலூர் வள்ளல் நன்கு உணர்ந்தார். பொய்க்
கதைகளால் சமயத்துக்கு அரண் செய்யும் செயல் வகைகள் கற்றவர் கூட்டத்தில் முதன்மையிடம் பெற்றன.
பொய்க் கதைகளைக் கேட்பார் விரும்பத்தக்க முறையில் தேனும் பாலும் போன்ற சொற்களால்
உரைப்பவர் உளராயினர். பொய் புனைந்துரைப்போர்க்குப் பொன்னும் புகழும் பெருகின. இச்செயல்,
கல்லும் சுண்ணாம்பும் இரும்பும் மரமும் கொண்டு வலிமிக்க காவல் மதில் அமைப்பதை விடுத்துச்
சின்னாளில் காய்ந்து உலர்ந்து பொடியாகி மடிந்தொழியும் புல்லால் மதில் கட்டும் கீழ்மக்கள்
செயலாக இருப்பதை நினைந்து வருந்தி வள்ளலார் இறைவன்பால் முறையிடுகின்றார்.
2377. இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ்
ஞானிகட் கின்பநல்கும்
விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின்
நாமம் வியந்துரையார்
கடைக்கொடி போலக் கதறுகின்
றார்பொய்க் கதையவர்தாம்
புடைக்கொடி யாலன்றிப் புல்லால்
எயிலைப் புனைபவரே.
உரை: கொடிபோலும் இடையையுடைய உமாதேவியை இடப்பக்கத்தில் கொண்ட இறைவனே, ஞானச்செல்வர்கட்கு வற்றாத அருளின்பம் நல்கி மகிழ்விக்கும் எருதுக்கொடியை வெற்றி வலமாக வைத்துக் கொண்டவனே, நின் நாமத்தை உண்மை நூல்கள் வற்புறுத்தக் கண்டு வியந்து யாவர்க்கும் உரைக்காமல், புறக்கடையில் கத்தியுழலும் காக்கைகள் போலப் பொய்கதைகளைப் புகன்று உரைக்கின்றார்கள்; அவர்கள் செயல், பக்கத்தே வெற்றிக்கொடி நின்று நிலவும் வலிய பொருள்களால் அமைக்க நினையாமல் மெல்லிய புல்லைக் கொண்டு மதில் கட்டுபவரை ஒப்பது; இவர் பொருட்டுச் செய்வது என்னே? எ.று.
இடைக் கொடி - இடை பூங்கொடியை ஒக்கும் உமாதேவி. வாமம். இடப்பக்கம். சிவஞானச் செல்வர்கள் மெய்ந்நூற் பயிற்சியும் மெய்ப் பொருள் சிந்தையும் உடையவராதலின், அவர்களை “மெய்ஞ்ஞானிகள்” என மொழிகின்றார். மெய்ஞ்ஞானத்தால் சிவானந்தம் பெறுவது இயல்பாதல்பற்றி, “மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும்” பெருமானே எனப் பாராட்டுகின்றார். விடைக் கொடி - எருது எழுதிய கொடி. வலப் பக்கத்தே தனது ஒப்பற்ற வலிமை புலப்பட உயர்த்த கொடியாவது பற்றி, “விடைக் கொடி ஏந்தும் வலத்தாய்” என வழுத்துகின்றார். “ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர் சடை, மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன்” (புறம் 56) எனச் சான்றோர் எடுத்துரைப்பது காண்க. நாமம் - புகழ். நல்ல வரலாற்றுக் கதையமைந்த பெயரை “நாமம்” என்பது மரபு. உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நிற்கும் சிறப்பமைந்த பெயரை நினைக்கும் மக்கள் மனம், விய்ந்து மகிழ்ந்து பன்முறையும் ஓதி இன்புறும் இயல்பு கண்டு, பொய்க்கதை புனைந்தும், பொய்ந்நூல் கற்றும், எதிர் காலத்தில் மக்கள் கடவுட்கொள்கையை மனம் கொள்ளாமல் வெறுக்குமாறு சூழ்ச்சி செய்து திரியும் பொய்யர் செயல் தமக்கு வருத்தம் தருவதுபற்றி, “நாமம் வியந்து உரையார்” என வகுத்துரைக்கின்றார். கடைக்கொடி -புறக்கடையில் தங்கி இரை தேடும் காக்கை பொய்க்கதையே எங்கும் கூறித் திரிவது காணப் பொறாத உள்ளத்தால், “கொடிபோலப் பொய்க்கதை கதறுகின்றார்” எனக் கூறுகின்றார். கதறுதல், ஈண்டுப் பெருங் குரலெடுத்துப் பேசுதல். அவர் பொய்க்கதையால் ஞானமும் பக்தியும் தழைப்பிக்கலாம் எனக் கதறிக் திரிவர் கீழ் மக்கள். புடைக்கொடி, பகைவரைத் தாக்கிப் புடைக்கும் படைவலியாற் பெறலாகும் வலிய பொருள்கள். பகைவர் எளிதிற் கைப்பற்றி உள்ளும் புறமும் அழிக்கலாகாத எயில் புனைய வேண்டி முயல்கின்ற வேந்தர், தானே சின்னாளிற் காய்ந்து புலர்ந்து கெடும் புல்லால் எயில் அமைக்க மாட்டார்கள்; நிலைபெறவேண்டிய சமய நிலையங்களைப் பொய்க்கதைகளால் நிலைநிறுத்த முயல்பவர், புல்லைக் கொண்டு எயில் அமைக்கும் மூடர்களை ஒப்பர் என்பது கருத்து.
இந்நாளில் இம்மூடர் கூட்டம் பெருகியதே மக்களிடையே சமயவுணர்வும் ஒழுக்கமும் வலிய இடம் பெறாமைக்குக் காரணம் என உணர்தல் அறமாம். (207)
|