208
208. உலகப் பரப்பில் மக்கள் தம்மில் பெற்றோர், புதல்வர், உற்றார், உறவினர்; நண்பர்;
துணைவர்; முதலாளர், உழைப்பவர்; ஆள்பவர் ஆளப்படுபவர்; கற்பிப்போர், கற்போர்; ஒத்தவர்,
ஒவ்வாதவர் என்ற வகையில் ஒருவரோடொருவர் தொடர்புற்றே வாழ்கின்றனர். இத் தொடர்பால் பெற்றோர்
புதல்வர்களை இளமையில் உண்டியும் உடையும் அறிவும் ஒழுக்கமும் தந்து பேணுகின்றார்கள். புதல்வர்கள்
வளர்ந்து குடும்பத்தலைவர் தலைவியர்களாகிய பெறும் புதல்வர்களையும் பெற்றோர்களையும் பேணுகின்றார்கள்.
உற்றாரும் உறவினரும் ஒருவர்க்கொருவர் வேண்டுவன உதவுதலும் உதவிபெறுதலும் அதற்குரிய செயல்களும்
புரிகின்றார்கள். நண்பரும் துணைவருமாகியோர் அறிவும் பொருளும் கொண்டும் கொடுத்தும் நலம் செய்கின்றனர்.
முதலாளரும் தொழிலாளரும் வாழ்க்கைக்குரியதொரு பெருந்தொழிலை மேற்கொண்டு பொருளும் கருவியும்
நிறுவி மிக்க பேரளவில் விளைவு பெருக்குதலில் ஈடுபடுகின்றனர். முதலாளர் முதலும் தொழிலாளர்
உழைப்பும் தொழிற்கு முதற்பொருளாய் நின்று பயன்பெருக்கி வாழ்வுக்கு வளம் செய்கின்றன. ஆள்பவர்
ஆளப்படுபவர் நலமே நினைந்து ஆளுதலும், ஆட்சி இனிது இயலுமாறு ஆளப்படுவர் அதற்குரிய விதி விலக்குகளை
அறிந்து செயற்குரியவற்றைத் தெளிந்து செய்தலும் கடனாகக் கொள்கின்றனர்; கற்பிப்போர் கற்போர்
கொள்வகை அறிந்து மனக்கோட்டமின்றிக் கற்பித்தலும், கற்போர் கற்பிப்போர் மனமுவக்குமாறு
பணிவும் அடக்கமும் மேற்கொண்டு கற்றன போற்றிக் கற்பன பயின்றும் கல்வி பெறுகின்றனர். இவ்வண்ணம்
யாவரும் தத்தமக்கு அமைந்த செயல்களைப் புரிகின்றார்கள். இவற்றை முறையே நாளும் நினைந்து செய்வது
உலகநடை; உலகில் வாழ்வாங்கு வாழ்தற்கு ஒத்த நடைமுறை; இதன்கண் மக்கள் தாம் பெற்ற உடம்பொடு
கூடி நெடிது உயிர்தாங்கி வாழ்வதையே குறிக்கொண்டு இயலுகின்றனர். உலகியலறிவு பெருகப் பெருக,
விஞ்ஞானப் புலமை சிறந்து, உடலுழைப்பைக் குறைத்து வாழ்க்கை வளம் மிகுதற்குதவும் பொறிகளையும்
எந்திரங்களையும் தோற்றுவிக்கின்றது. நிலத்தில் விரைந்து போக்குவரவு புரிவதுபோல் நீரிலும்
வானத்திலும் மக்கள் இன்று போக்குவரவு புரிகின்றனர். ஒரு வீட்டிற்குள் ஒருவரோடொருவர் பேசிக்
கொள்வதுபோல, உலகிலும் வானத்திலும் பல்லாயிரம் கற்களுக்கு அப்பாலுள்ள மக்களோடு
பேசுகிறோம்; பேசுகின்ற அவர்களுடைய உருவத்தையும் பார்க்கின்றோம். அளப்பரிய பரப்புடையது நிலவுலகம்,
அளவிறந்த உயரமுடையது என்றெல்லாம் பேசியவை இன்று சுருங்கி, ஒரு வீட்டின் பரப்புக்குள்ளும் உயரத்துக்குள்ளும்
சுருங்கி யொடுங்கித் தம்பால் உள்ள பொருட்காட்சிகளைக் காட்டி இன்பம் செய்கின்றன. இவ்வினிய
உலகியல்வாழ்வே வாழ்வு என்ற எண்ணந் தோன்றி அதன்பால் ஆராக்காதலைத் தோற்றுவித்துள்ளது.
இதற்கு ஆக்கமும் அரணுமானவற்றையே மக்களறிவு நாடுகிறது; செயல்புரிகிறது. விஞ்ஞானம் காட்டும் வியத்தகு
காட்சிகட்கு உள்ளீடாகிய பொருளிடத்தே அமைந்திருக்கும் நெறி முறையும் ஒழுங்கும், அளவு பிறழாத
இயையும் ஆற்றலும் மக்களின் அறிவுக் கண்ணுக்குப் புலப்பட்டுப் பயன்படுமாறு படைத்தளித்துள்ள பரம்பொருளின்
பேரருட்பெருக்கை அவ்வறிவு காண விழைவதில்லை; உள்ளமும் விரும்புவதில்லை; காணவிழைவதும் கருத்தால்
விரும்புவதும் ஆற்றலில்லாதார் பேச்சும் செயலுமாம் என எள்ளியிகழும் பான்மை மக்களுலகில்
மிக்கு நிற்கிறது. இதனை அருட்கண்ணால் காணும் வள்ளற்பெருமான், இறைவன் திருவடியடையும் நெறி காண
நினையாது உலகியல் வாழ்க்கைப் பெருமையையே நினைவது நன்றன்றே என எண்ணுகிறார். மார்பில் எறியம்பு
பாய்ந்ததுபோலத் துயர்கொண்டு வருந்துகிறார்.
2378. உருமத்தி லேபட்ட புன்புழுப்
போல்இவ் உலகநடைக்
கருமத்தி லேபட்ட என்மனந்
தான்நின் கழலடையும்
தருமத்தி லேபட்ட தின்றேஎன்
றெண்ணுந் தனையுமந்தோ
மருமத்தி லேபட்ட வாளியைப்
போன்று வருத்துவதே.
உரை: உரும வெளிலிற் பட்ட புழுவைப்போல உலகநடைக்குரிய கருமத்திலே கிடந்து என் மனம் துடிக்கின்றது; ஆனால், அது பேரருளே உருவாகிய நின் திருவடியடைந்து இன்புறும் நற்செயலில் ஈடுபடவில்லை; இதனை எண்ணும்போது, நெஞ்சில், எறியம்பு பாய்ந்ததுபோன்ற துயர் தோன்றி வருத்துகிறது, எ.று.
கடுங்கோடை வெயில் காலத்தில், நண்பகலில், வானத்தின் உச்சியைக் கதிரவன் அடையுங் காலம் 'உருமம்' எனப்படும். அவ்வுரும வெயிலில் என்பேயில்லாத சிறு புழு அகப்பட்டால் துடிதுடித்துச் சாகும். சாகுமுன் அதன் துடிப்பில் எத்தனை வேதனையுண்டோ அத்தனையும் சாகுமுன் அதன் துடிப்பில் எத்தனை வேதனையுண்டோ அத்தனையும் உலக வாழ்வில் உண்டு. மக்களிடையே தனித்தும் கூடியும் பெற்றோர் புதல்வர் உறவினர் நண்பர் முதலிய பலவேறு நிலைகளில் நின்றும் செய்வனவும் தவிர்வனவும் தெரிந்து செய்வது உலகநடையும் அதற்குரிய செய்வினையு மாகும். இதனை உலகநடைக் கருமம் என்று வடலூர் வள்ளல் வழங்குகிறார். இக்கருமத்தில் ஈடுபடும்போது எய்தும் ஆக்கத்தினும் இடையூறும் இடுக்கணும் அலைபோல் அடுக்கிவந்து கடை போகுமளவும் தடுக்கும்; அந்நிலையில் மனம் பல்வேறு எண்ணமே வடிவாய் நின்று விதிர்ப்பும் அதிர்ப்பும் வெடிப்பும் துடிப்பும் உற்று வருந்தும்; அதனை விளக்குதற்கே “உருமத்திலேபட்ட புன்புழுப்போல் இவ்வுலகநடைக் கருமத்திலே பட்ட என் மனம்” என்று உரைக்கின்றார். மலவழுக்கிலே பிறந்து வளர்வதுபற்றிப் புழுவைப் “புன்புழு” என்று குறிக்கின்றார். அசுத்தமாயையில் தோன்றி அறியாமையிருளில் வளரும் மனத்துக்கு இப் புன்புழு உவமம். உலகியற் செயல்வகைகளைக் கருமம் என்பது திருக்குறள் வழக்கு. “கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு”, “கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமை”, “கருமத்தால் நாணுதல் நாணு”, “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என வருதல் காண்க. செய்கையைக் கருமம் என்பது தமிழ் வழக்கு; செய்கையையே யன்றிச் செயப்படு பொருளையும் பயனையும் கருமம் என்பது வடநூல் வழக்கு. உலக வாழ்வில் தமிழர் நற்செயலைக் கருமம் என்று சொல்வதில்லை. இக்கருத்தும் தோன்ற “உலகநடைக் கருமத்திலே” என்று வெறுப்புடன் விளம்புகின்றார். இறைவன் திருவடியை அதன்கண் அணியப்படும் கழல்மேல் வைத்துக் “கழல்” என்று கூறுகிறார். அவ்வாறு கூறுவதில் ஒரு கருத்துண்டு. திருநாவுக்கரசர், சிவபெருமான் திருவடி கழலா வினைகளைக் கழற்றும் மாண்புடையது என்பாராய்க் “கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்து அழலார் ஒளியின காண்க ஐயாறன் அடித்தலமே,” என்று உரைத்தனர். அந்த நயம் கருதியே வள்ளலார் “கழல்” என்று கூறுகின்றார். அடைதல் ஈண்டு நினைத்தல் மேற்று, “தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனை” என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. அல்லாத செயலைக் கருமம் என்றாற்போல நல்ல செயலைத் தருமம் என்பது தமிழ் வழக்கு. அதுபற்றித் திருவடியே நினைக்கும் செயலை “நின் கழலடையும் தருமம்” என்று சாற்றுகின்றார். பட்டதின்று - படவில்லை; செல்லவில்லை. உலகநடைக்கு ஆக்கமும் அரணுமானவற்றையே நினைந்து செல்வமும் சிறப்பும் திருவுருவும் சேரப்பெறினும் நிலையாமைக் கிறையாகிக் கெடுவது கண்டு, “கழலடையும் தருமத்திலே பட்டதின்றே” என்றும், நிலைத்த இன்பமே பயக்கும் திருவடிப்பேற்றை நினையாதொழிவது குற்றம் என்பது நினைவில் எழுந்தவுடன், சான்றோர் பெருந்துயருற்று வருந்துவராதலால் “தருமத்திலே பட்டதின்றே என்ற எண்ணம் மருமத்திலே பட்ட வாளியைப் போன்று வருத்துவதே” என்றும் வருந்தி மொழிகின்றார். “திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசு உறின்” என்று பெரியோர் உரைப்பது காண்க. மருமம்- மார்பு. “பட்ட வாளி” என்றதனால் எறியம்பு எனப்பொருள் கூறப்பட்டது. எண்ணாத குற்றம் நினைந்து அஞ்சித் திடுக்கிட்டு இரங்கிக் கூறுவது தோன்ற, “அந்தோ” என்று உரைக்கின்றார்.
இதனால், உலகநடைக்கு ஒப்பச் செய்வன செய்கையில் ஈடுபட்டு வருந்திய மனம் இறைவன் திருவடி நினையாத குற்றத்தால் எய்திய வருத்தம் கூறித் திருவருளை வேண்டுவது பயனாதல் காண்க. (208)
|