209

       209. பல்வேறு கருத்துக்களைச் சொல்லிப் பன்முறையும் வேண்டிய வள்ளற்பெருமான், என்னை நோக்கி அன்புடன் வாய் திறந்து “இங்கே வா” என்று மொழிந்தாற் போதும்; நீ எல்லார்க்கும் இறைவன்; எனக்கும் என்னில் உயர்ந்த இமையவர்க்கும் இறைவன் நீ; அது மட்டுமன்று; பிரமன் திருமால் முனிவர் ஆகியோர்க்கும் அவர்களால் விரும்பிப் பேணப்படும் வேதங்கட்கும் இறைவனும் தலைவனும், பொருளும் ஆகியவன். நீ என்பால் அருள் கூர்ந்து இங்கே வா என்றால் எனக்கு அதியாப் பெருவாழ்வுண்டாகும் என முறையிடுகின்றார்.

2379.

     எள்னிறை வாஇமை யோரிறை
          வாமறை யின்முடிபின்
     முன்னிறை வாமலை மின்னிறை
          வாமலர் முண்டகத்தோன்
     தன்னிறை வாதிதித் தானிறை
          வாமெய்த் தபோதனருள்
     மன்னிறை வாஇங்கு வாஎன்
          றெனக்குநல் வாழ்வருளே.

உரை:

     எனக்கும் இமையவர்க்கும் இறைவனே; மறைகளின் அந்தத்தில் நினைக்கப்படுகிற பிரணவத்தின் இறைவனே; மலைமகட்குக் கணவனாகிய தலைவனே; தாமரை மலர்மேல் உள்ள பிரமனுக்கு இறைவனே; காக்கும் கடவுளாகிய திருமாலுக்கு இறைவனே; மெய்யுணர்ந்து அவாவறுத்த தவமுனிவர் உள்ளத்தில் நிலைபெற வீற்றிருக்கும் இறைவனே; இங்கு வா என அடியேனை அன்புடன் அழைத்து நல்ல அருள் வாழ்வு தருக எ.று.

     இமையோரை உளப்படுத்தியது அவர்கள் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாயினவர் என்பது பற்றியாகும். மறைமுடிபு - வேதத்தின் அந்தம் எனப்படும். அது ஓம் என்னும் பிரணவம். வேதம் ஓதுவோர் தொடக்கத்திலும் முடிவிலும் ஓதப்படுவதுபற்றி வேதாந்தம் எனப்படுகிறது. வேதம் பயின்றோர் உபநிடதங்களை வேதாந்தம் என்றும், அவற்றைக் கொண்டு காணநிற்கும் சமயம் வேதாந்த சமயம் என்றும், அதனை விரிவாக ஆராய்ந்துரைத்ததுபற்றிச் சங்கரர் பெயரைக் கூட்டிச் சங்கரர் வேதாந்தம் என்றும் உரைக்கின்றனர். சைமினி என்பவர் கண்ட வேதாந்தம் சைமினி வேதாந்தம் என்பர். இருதிறத்தார்க்கும் பிரணவம் பொதுவாகும். அதன் பொருளாயவன் சிவனாதலின் “மறையின் முடிபின் முன்னிறைவா” என வுரைக்கின்றார். இங்ஙனம் வேதாந்தம் இருவகைப்படுதல் கண்டே, “மறைமுடிபு” என்று ஒன்றாக வுரைக்காமல் “மறையின் முடிபின் முன் இறைவா” என உரைக்கின்றார். மறையின் முன் இறைவன், முடிபின் முன் இறைவன் என இரண்டாகக் கொண்டு, மறையினால் முன்னப்படும் இறைவன், உபநிடதங்களால் முன்னப்படும் இறைவன் என உரைத்தலும் ஒன்று. முன்னுதல் - முற்பட நினைத்தல். மலைமின் - மலையரசன் மகளாகிய உமாதேவி. முண்டகம் - தாமரை. திதி - காக்கும் பகவனாகிய திருமால். தபோதனர் - விரதங்களை மேற்கொண்டவர்; ஞானநூல் உணர்ந்து ஞானநெறி நின்று ஞான வழிபாடு செய்பவர். இவர்களைக் கண்டே திருநாவுக்கரசர், “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்” எனத் தெரிவிப்பது காண்க. இரு திறத்தாரும் மெய்யுணர்வுடைய மேலோராதலின் அவருளுள்ளத்தில் சிவபெருமான் நீங்காது உறைதல் தோன்றத் “தபோதனர் உள்மன் இறைவா” என இசைக்கின்றார். உள்ளத்தே மன்னும் இறைவனே எனற்பாலது, உள்மனம் இறைவா என நிற்கிறது. வந்தால் நல்கப்படுவது திருவருள் ஞானவின்பப் பெருவாழ்வென்பது சொல்லாமலே பெறப்படுதலால் “வா என்று எனக்கு நல்வாழ்வு அருள்” என உரைக்கின்றார். இக் கருத்தே தோன்ற, மணிவாசகப் பெருமான், “மருளார் மனத்தோடு உனைப் பிரிந்து வருந்துவேனை வா என்றுன், தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ” என வுரைப்பதையும் நோக்குக..

     இதனால், “என்று வந்தாய்” என்னும் குறிப்புப்போல, இங்கு வா என்னும் குறிப்பும் வேண்டப்படுவ தொன்றாம் என அறிவித்தல் காணலாம்.

     (209)