210
210. சிவானந்தப் பெருவாழ்வையே நினைந்து பல பாட்டுக்களிற் பாடிவரும் வள்ளற்பிரானார் திருவருள்
உணர்வும் இன்பமும் உள்ளத்திற் பொங்குவது கண்டு போற்றிப் பரவுகின்றார். நாவுக்கரசரும் மணிவாசகரும்
பாடியருளிய போற்றித் திருப்பாடல்கள் வள்ளலார் மனத்தில் எழுகின்றன. அவரும் பாடுகின்றார்.
2380. போற்றிஎன் ஆவித் துணையேஎன்
அன்பில் புகுஞ்சிவமே
போற்றிஎன் வாழ்வின் பயனேஎன்
இன்பப் புதுநறவே
போற்றிஎன் கண்ணுண் மணியேஎன்
உள்ளம் புனைஅணியே
போற்றிஎன் ஓர்பெருந் தேவே
கருணை புரிந்தருளே.
உரை: என் உயிர்க்குத் துணையாய் என் அன்பின்கண் எழுந்தருளும் சிவபரம்பொருளே போற்றி; என் வாழ்வின் விளைபயனாய் யான் எய்தும் இன்பமாகிய புதிய தேனே போற்றி; என் கண்ணின் மணியாய் என் உள்ளத்தை அழகுறுத்தும் அணிகலமே போற்றி; எனக்குரிய ஒப்பற்ற பெருந்தேவனே போற்றி; அருள் புரிக எ.று.
அறிவில்லாதாகிய உடம்பின்கண் அறிவுடைய உயிர் நிற்பது அன்பு செய்தற்கும் பெறுதற்குமாகும்; வேறுபட்ட இரண்டினையும் கூட்டி அன்பு செய்வித்தலின் சிவனை, “ஆவித் துணையே” எனக் கூறுகின்றார். அன்பு செய்வித்து அதன்கண் எழுந்தருளி ஞானக்காட்சி தந்து உய்விப்பதுபற்றி “அன்பில் புகும் சிவமே” என வுரைக்கின்றார். உடலோடு கூடி உலகில் வாழ்வதால் உயிர் பெறும் பயன் சிவானந்தப் பெருவாழ்வாதலின் “வாழ்வின் பயனே” எனவும், சிவபோகம் இதுகாறும் எப்பிறப்பினும் கண்டிராத புதுமையும் இன்பமும் உடையதென்றற்கு “இன்பப் புது நறவே” எனவும் புகல்கின்றார். வாழ்விற் புறக்கண்களால் காண்பன காண்டலும் அகக்கண்ணால் சிவத்தைக் காண்டலும்பற்றி “என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே” எனப் போற்றி செய்கின்றார். தெய்வம் எனப்படுவன எல்லாவற்றினும் மேலாய ஒப்பற்ற தெய்வம் சிவமாதல் விளங்க “ஓர் பெருந் தேவே” என்று வழிபட்டுத் திருவருள் அருள்க எனத் தொழுகின்றார்.
இதனால், திருவருள் வேண்டி முறையிட்டு அதனையே அருளுக எனப் போற்றிப் புகழும் நெறி கூறியவாறு காணலாம். திருவருள் நினைவால் விளங்கிய காட்சிக்கண் பிறந்த உவகை மிக்குப்பெருகுவதால் களித்தலும் போற்றுதலும் உள்ளத்தே நிகழ்வது பயனாம். (210)
|