211

      211. மகளிர் இன்பமே உலக வாழ்விற் பெறுமவற்றுள் பெரிது என எண்ணிப் பேதுறுவது மக்களுலகிற் பெரும்பான்மைக் காட்சியாகப் பிறங்குவதை வள்ளலார் அருட்கண்ணால் நோக்குகின்றார். மகளிரையும் மனக்கண்ணிற் பார்க்கின்றார். அவர்களது உருவில் ஆடவர் அறிவைப் பிணித்து தம் வழியில் நிறுத்துவது எக்கூறு என ஆராய்கின்றார். முகத்தை நோக்குவார்க்கு அது தாமரைபோல் மலர்ந்து ஒளிசெய்து மகிழ்விக்கிறது. மலரணையில் மருங்கில் நிற்கும் மங்கைநல்லாளின் தோற்றமும் நடையும் ஒருவகை ஏர்கொண்டு இலங்குகின்றன. ஏர், எழிச்சி காரணமாகப் பிறக்கும் அழகு. உள்ளத்தில் கிளர்ச்சியும் முகத்தில் மலர்ச்சியும் அவ்வெழுச்சியை ஊக்குவிக்கின்றன. கூடுதலில் சுவை மிகுவிக்கும் புலவி சொல்லிடைத் துளும்பும்போது, இந்த ஏர் தோன்றுகிறது என்பாராய்த் திருவள்ளுவர், “நலத்தகை, நல்லவர்க்கு ஏர் புலத்தகை பூவன்ன கண்ணாரகத்து” என்று கூறுகின்றார். நற்பண்பும் செயலுமுடைய நல்லோரிடையும் இப்புலத்தகை மிக்குநின்று இன்பம் நல்கும் ஏற்றம் உடைத்து என்று கூறுவதால், அவ்வின்பத் துறையில் எளியராய மக்களுக்கு அது கள்ளினும் மகிழ் செய்யும் என்பதைக் காண்கின்றார். அந்நிலையில் மகளிரின் கண்கள் காட்சி தருகின்றன; அவற்றின் பார்வையில் நிலவும் குளிர்ச்சி, பார்க்கப்பட்டார் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து உடலும் ஊனும் உணர்வும் யாவும் குளிர்ப்பெய்தப் பரந்து மயக்கம் செய்கின்றன; இச்செயல் நஞ்சுக்கு ஒப்பத் தோன்றக் கண்டு அஞ்சுகிறார். அப்பொழுது அவருடைய சொல்லும் செயலும் இனியவாயினும், நோயும் துன்பமும் பயத்தலின் அவை வஞ்சமாதலை நோக்குகின்றார். அவ்வஞ்சத்தின் வயப்பட்ட ஆடவர் ஆள்வினைத் தலைமையிழந்து அவர் வழிச் செல்லாராய், வினையாண்மையால் வீறு எய்துவ தின்றிப் “பெரியதோர் நாணாக நாணுத் தருதலால்” நெஞ்சிற் சுருக்க மெய்துவது நன்கு தெரிகிறது. அச்சுருக்கம் அந்த ஆண்மகனை மிக்க எளியனாக்கி “அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்” இல்லாமல் துன்பம் உழக்கச் செய்கிறது. உலக வாழ்வை நரகமாக்கி விடுகிறது. வாழ்ந்து அறிவு தெளிவுற்றுத் தெய்வ இன்ப வாழ்வு பெறற்குப் பிறந்த பெருமக்கள் இங்ஙனம் துன்புறுவது, வடலூர் வள்ளலின் அருள் மனத்தை அலைத்து வருத்துகிறது. ஆண்டவன்பால் முறையிடுகின்றார்.

2381.

     கஞ்சத்தி லேமுக மஞ்சத்தி
          லேர்நடைக் கன்னியர்கண்
     நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி
          லேபட்டு நானுறும்புண்
     நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி
          லேமுக் கணித்த என்போல்
     பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி
          லேஉழப் பார்எவரே.

உரை:

     மகளிர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் நெஞ்சிற்குத் தஞ்சமாய், அதனுள் மூழ்கிய என்போல் இப் பிரபஞ்சத்தில் துன்புறுவோர்யாரும் இல்லை; துன்பம் துடைத்து அருள்க எ.று.

     கஞ்சம் - தாமரை. மஞ்சம் - படுக்கை. கண்ணியர் என்றது, ஈண்டு விலைமகளிரை. ஏனைக் குலமகளிர் போல நாடறி நன்மணத்தால் ஒருவற்கு மனைவியாகும் காரணத்தால் கன்னிமை நீங்குதல் இல்லாதவராதலின், அவர்களைக் “கன்னியர்” என்று கூறுகின்றார். கண்பார்வையில் அமையும் குளிர்ச்சி பார்க்கப்பட்டார்மேல் பாய்ந்து அவர் உடலின் அகத்துப் புறத்தும் பரந்து அறிவை மயக்குதலின் “கண்நஞ்சம்” என்று குறிக்கின்றார். சொல்லும் செயலும் ஒவ்வாது ஒழுகுதலால் “வஞ்சம்” என்கிறார். பெண்வழிச் செல்வார்க்கு எய்தும் பயன் நாணமாதலால் “நாணுறும் புன்நெஞ்சம்” என்று கூறுகிறார். தஞ்சமாதல், எளிமையுறுவது. முக்கணித்தல் - மூழ்குதல்; தென்னாட்டில் இச்சொல் முக்குளித்தல் என வழங்குகிறது. பஞ்சம் - குறைபாடு, பிரபஞ்சம் - விரிந்த உலகின் மேற்று.

     (211)