212
212. இங்கு வா என்று நேர்முகமாக அழைக்கத்தகும் நிலையையுடையவர் பிரமனும் திருமாலும் பிற தேவர்களுமாவர்.
அப்பெற்றியோர் இறைவன் திருமுடியும் திருவடியும் காணாது அயர்ந்தனர். இங்கு வா என அழைக்கப்பெறும்
வாழ்வும் இவ்வாற்றால் சிவானந்த வாழ்வு பெறற்கண் குறையுடையதுபோல் உளதன்றோ என்றொரு ஐயம்
அறிஞர் உள்ளத்தெழுகிறது. வள்ளலார் அவர்க்குத் தெளிவு கூறலுற்று, அவர்கள் ஞானக்கண் கொண்டு நாடிற்றிலர்;
அதுவே குறை என வுரைக்கின்றார்.
2382. நான்முகத் தோனும் திருநெடு
மாலுமெய்ஞ் ஞானமென்றும்
வான்முகக் கண்கொண்டு காணாமல்
தம்உரு மாறியும்நின்
தேன்முகக் கொன்றை முடியும்செந்
தாமரைச் சேவடியும்
ஊன்முகக் கண்கொண்டு தேடிநின்
றார்சற் றுணர்விலரே.
உரை: நான்கு முகங்களையுடைய பிரமனும் நெடிய திருமாலும் மெய்யுணர்வென்னும் தூய ஞானக்கண் கொண்டு காணாமல் உருவேறு கொண்டு நின் தேன் சொரியும் கொன்றையணிந்த திருமுடியையும் செந்தாமரை போன்ற திருவடியையும் ஊனால் அமைந்த கண்களைக் கொண்டு தேடி அயர்ந்து நின்று போனார்கள்; சிறிது உணர்வு இல்லா தொழிந்தமை காரணமாகும். எ.று.
முகத்தில் உள்ள கண் ஊனக்கண்; மனத்தால் அறிவுக்கண் கொண்டு காண்பது ஞானக்கண். “அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” என்று திருமூலர் தெரிவிக்கின்றார். அறிவின் தெளிவிற்கும் மெய்ம்மைக்கும் நுண்மைக்கும் ஏற்பவே ஞானப் பார்வை யுண்டாகும். அறிவு சுகதுக்க மோகம் என்னும் குணங்களில், துக்க மோகங்களால் கலக்கப்படின் அறிவு தெளிவிழந்து கூர்மைக் குன்றிப்போகும். நான்முகனும் திருமாலும் கணந்தோறும் மாறும் முக்குணச் சேர்க்கையால் சிறிது உணர்வு மழுங்கினர் என்றற்குச் “சற்று உணர்விலரே” என விளக்குகின்றார். அதனால் தான், திருமால் திருவடி காண்டற் பொருட்டுப் பன்றியாகவும், பிரமன் திருமுடி காண்டல் வேண்டிப் பறவையாகவும் உருமாறிச் சென்றனர்; அவ்விரண்டிற்கும் ஞானக்கண் இல்லை; ஊனக்கண்ணே யுண்டு என்பதை நினையாமையால் தேடி அயர்ந்து நின்றனர் என்றற்கு, “உருமாறியும் கொன்றை முடியும் செந்தாமரைச் சேவடியும் ஊன்முகக் கண்கொண்டு தேடி நின்றார்” எனக் கூறுகின்றார். ஞானக்கண் முக்குணவயப்பட்டுத் தன்மை திரியும் இயல்பினதன்று; மெய்ப் பொருட்கண் சென்று பதியும் சிறப்பும் உடையது என்றற்கு “மெய்ஞ் ஞானமென்னும் வான்கண் கொண்டு காணாமல்” என இசைக்கின்றார். மெய்ஞ்ஞானத்தை கண்ணாக உருவகம் செய்தலின், வாலிதாம் தன்மையை “வான்முகம்” எனச் சிறப்பிக்கின்றார். அடிமுடி காண்டற் பொருட்டு நேரிய முறையில் முயலாமை ஒரு குறை; உண்மையுருவினும் மாறியவுரு மாண்புடையதன்று என்ற கருத்தை வற்புறுத்தற்கே “உருமாறியும்” என்றும், “சற்றுவணர்விலர்” என்றும் வள்ளலார் உரைக்கின்றார்.
இதனால், உண்மை நிலைநின்று மெய்யுணர்வு திரியாது செய்யும் முயற்சியே தேவதேவர்கட்கும் சிறப்பளிக்கும் என்பது தெளியலாம். (212)
|