213
213. “தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக் கவலை மாற்றல் அரிது” என்றனர்
திருவள்ளுவர். அவர் உரையின் மெய்ம்மை கண்டு பன்னூறு ஆண்டுகளாகச் சான்றோர் பலர் இறைவனை
யடைந்து மனக்கவலை நீங்கி இன்புற்றதுடன் எத்தனையோ மக்களை அதனை மேற்கொண்டு இன்புறச் செய்தனர்;
அவரும் இன்புற்றனர். தம்மை நினைந்து அடைந்தவர்க் குளதாகும் மனக்கவலை நீங்கச் செய்வதில்
இறைவற்கு என்ன தொடர்பு? என நினைப்பவர் உண்டு. இறைவன் மக்கட்கு உலகியலில் வாழ்வளிப்பவன்;
வாழ்தற்கு கருவியாக வாய்த்த உடல் கருவி கரணம் பலவும் அவனது அருளியக்கத்தால் இயங்குவன. அவற்றின்
இயக்கத்தால் மனக்கிளர்ச்சியும் கவலையும் உண்டாகின்றன. இதனை நினைப்பவர் இறைவன் திருவருட்கு
முதல்வனாதல் கண்டு, அவன் அருள் புரிவனாயின் மனக்கவலை தீரும் எனக் கண்டு தெளிவுற்றனர்.
வாழ்வும் வாழ்க்கைக்கு வேண்டிய வாய்ப்புகளும் இறைவனால் அளிக்கப்படுதற்குக் காரணம் மக்களுயிர்இவற்றைத்
தாமே செய்துகொள்ளும் மதுகையுடையவல்ல. அவற்றைப் படைத்தளித்து மக்களைத் தனது நன்றி நினைந்து
ஒழுகச் செய்வதனால், இறைவனை மக்கள் தமக்கு முதல்வனாக நினைந்து அன்பு செய்து இன்புறுகின்றார்கள்.
இவ்வகையில் இறைவன் அருளையின்றித் துணை வேறின்மை அறிகின்ற அறிவுடை மக்கள் அவனைத் தமக்கு
முதல்வனாகவும், இறைவனாகவும் எண்ணி வழிபடுவதுடன், தம்மை உடையவனாகவும் கொண்டு போற்றுகின்றார்கள்.
அவன் உள்ளம் உவப்பன செய்து ஒழுகுகின்றார்கள். அவனையன்றிப் பிறரை நாடிப் பின் செல்ல
விரும்புகின்றார்கள் இல்லை. இந்நன்மக்கள் இனத்தவராதலின் வடலூர் வள்ளல் இதனையே எடுத்து
மொழிகின்றார்கள்.
2383. இருவர்க் கறியப் படாதெழுந்
தோங்கிநின் றேத்துகின்றோர்
கருவர்க்க நீக்கும் கருணைவெற்
பேஎன் கவலையைஇங்
கொருவர்க்கு நான்சொல மாட்டேன்
அவரென் னுடையவரோ
வெருவற்க என்றெனை ஆண்டருள்
ஈதென்றன் விண்ணப்பமே.
உரை: பிரமன் திருமால் ஆகிய இருவரால் அறியப்படாவாறு ஓங்கி நிற்பதுடன், தன்னை வழிபடுபவர்க்கு உளதாகும் பிறவி வகையை மாற்றுதலையுடைய கருணை மலையே, என் மனத்தெழும் கவலையை யான் ஒருவர்க்கு உரைப்பதில்லை; காரணம், அவர்கள் என்னைத் தமக்கு உடைமையாகப் பேணிக் காப்பவரல்லர்; கருவகை எய்துமென அஞ்ச வேண்டா எனச் சொல்லி என்னை ஆண்டருள்க; இதுவே என் விண்ணப்பம் எ.று.
இருவர், பிரமனும் திருமாலுமாவர். இருவரும் உலகைப் படைத்தற்கும் காத்தற்கும் முதல்வராவர். அவர்கள் முழுமுதற் கடவுளல்லராதலின், குற்றம் குறைகளையுடைய ஏனையோர் போலத் தவறு செய்து அறியாமையுற்றுக் கீழ்ப்பட்டனர். அதுபற்றியே, சிவனை “இருவர்க்கறியப்படாது எழுந்து ஓங்கி நின்றான்” என உரைக்கின்றார். பெரிய தேவர்களாகிய இருவர்க்கும் அறியாதான், மக்களாலும் அறியப் படான் எனப் பிறர் கருதாமைப் பொருட்டுத் தன்னை வழிபட்டு ஏத்துபவர் தேவராயினும் மக்களாயினும் பணிந்து வழிபடுமாறு எளியனாய் விளங்கி அவரது பிறவித் துன்பங்களைப் போக்குகின்றான் என்பது விளங்க, “ஏத்துகின்றோர் கருவர்க்கம் நீக்குகிறான்” எனக் கட்டுரைக்கின்றார். கருவர்க்கம் - பிறவித் துன்பம்; அனாதிமலத் தொடர்புடைமையின் பிறத்தல் உயிர்கட்கு இன்றியமையாதது; பிறக்குங்கால் தவறு செய்து துன்பத்துக்குள்ளாதல்பற்றிப் பிறத்தல் துன்பமாயிற்று. பிறவித் துன்பம் எய்தாவாறு அருள் ஞானம் வழங்கி உய்வித்தல் உண்மையின் “கருவர்க்கம் நீக்கும் கருணைவெற்பே” எனக் கூறுகின்றார். சலியாக்கருணை வள்ளல் என்றற்குக் “கருணை வெற்பே” எனக் குறிக்கின்றார். என்னிலும் அறிவு ஆற்றல் தெளிவு ஆகிய பண்புகளால் மிக்கோர் உலகில் உளரெனினும், அவர்பால் அடைந்து என் மனக்கவலையை உரைத்தல் இலேன் என்றற்கு “என் கவலையை இங்கு ஒருவர்க்கு நான் சொல்ல மாட்டேன்” என உரைக்கின்றார். அவர்பால் உரைப்பதில் வரும் குற்றமென்னை யெனின், அவர்களும் மனக்கவலை கொண்டு என்போல் இறைவனை வழிபட்டு அருள்பெற்று உய்திபெறும் இயல்பினர்; அதனால் அவர்களால் கவலை முற்றும் தீர்த்துதவும் ஆற்றல் இல்லையாம்; அக் குறைபாட்டால் என் கவலையைக் கேட்டுப் பிறர்க்குரைத்துத் தூற்றுதலும் செய்வர்; அது என்னுடைய உனக்குப் பழியாம் என்பாராய், “அவர் என் உடையவரோ?” என மொழிகின்றார். இவ்வாறு கவலைகட்கும் அதனைத் தீர்க்கும் முயற்சிக்கண் தோன்றும் குற்றங்கட்கும் அஞ்சி வருந்தும் என்னை அருளுக என வேண்டுதலால், “வெருவற்க என்று எனை ஆண்டருள் ஈது என்றன் விண்ணப்பம்” என விளம்புகின்றார்.
இதனால் மனக்கவலையுளதாய வழி அதனை இறைவனிடமே விண்ணப்பித்தல் முறையென்பது பெறப்படுவது காண்க. (213)
|