214
214. மேலும் ஒரு கருத்து வள்ளற்பெருமான் திருவுள்ளத்திற் கிடந்து ஊக்குகிறது. கருத்துரைத்தற்கேற்ற
காலம் வாய்த்தமையின் அதனைக் கைவிடாது கூறுகின்றார். பெருமானே, என் வாழ்வு எளியேனை எத்தனையோ
சூழலிற் செலுத்தி இயல்விக்கிறது. கற்றோர் கல்லாதவர், உடையோர் இல்லாதவர் என்ற இவர்களோடன்றி
மகளிர் சூழலிலும் உய்க்கின்றது. எங்கே போயினும், எவரொடு கூடினும், நின் திருவடியை யன்றி வேறு
யாதும் நினையாத செயலே எனக்கு என்றும் நீங்காத செயலாக வேண்டும். அதுவே செய்யுமாறு அருள்புரிந்து
என்னை ஏன்று கொள்க என வேண்டுகின்றார்.
2384. ஒண்ணுதல் ஏழை மடவார்தம்
வாழ்க்கையின் உற்றிடினும்
பண்ணுத லேர்மறை ஆயிரஞ்
சூழுநின் பாதத்தையான்
எண்ணுத லேதொழி லாகச்செய்
வித்தென்னை ஏன்றுகொள்வாய்
கண்ணுத லேகரு ணைக்கட
லேஎன் கருத்திதுவே.
உரை: கண்ணுதலுடையாய்,. கருணைக்கடலே, ஏழை மகளிருடைய சூழலில் உறையும் நிலை எய்துமாயினும், ஆயிரம் மறைகள் சூழ்ந்து ஒலிக்கும் நின் திருவடியை எண்ணுவதே என் தொழிலாகச் செய்து என்னை ஏன்று கொள்க. எ.று.
நெற்றியிலே கண்ணுடையோ னாதலால், “கண்ணுதலோய்” என்றும், எவ்வுயிர்க்கும் இறையறவில்லாமல் அருள் வழங்குதல் தோன்றக் “கருணைக் கடலே” என்றும் பரவுகின்றார். ஒளியுடைய நுதல் மகளிர் முகத்துக்குப் பொலிவு தருவது. “திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்” எனச் சான்றோர் கூறுவது காண்க. போதிய அறிவு நிரம்பாத மகளிர் என்றற்கு “ஏழை மடவார்” என்கின்றார். மகளிர் சூழல் ஆடவர் மனத்தைச் சிற்றின்பத்தில் அழுத்தும் என்பது ஒரு சாரார் கருத்து. “பகற்சி மடவார் பயில நோன்பாற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத்திட்பம்” எனச் சிவப்பிரகாச சுவாமிகள் தமது நன்னெறியிற் கூறுகின்றார். பண்ணுதல் - ஓதுதற்குரிய நெறியமைத்தல். திருவடி நினைவு ஞானத்தையும் சிவானந்தத்தையும் நல்கி, முடிவில் சிவபோகப் பெருவாழ்வில் இருத்துவதுபற்றி, “பாதத்தை யான் எண்ணுதலே தொழிலாகச் செய்வித்து” என்றும், முடிவில் சிவானந்த ஞானவாழ்வு நல்குக என்றற்கு “ஏன்று கொள்வாய்” என்றும் வேண்டுகின்றார்.
இதனால், சிவபிரான் திருவடியை ஏத்தி வாழ்வது சிறந்த தொழிலாம் என்றும், அதனால் பேரின்பப் பெருவாழ்வு பெறலாம் என்றும் தெளிவது பயன் என அறிக. (214)
|