215
215. மனத்தை வளைத்துக் கொண்டு தாழ்வு தரும் நினைவு சொல் செயல்களில் ஈடுபடுத்து மாயை மயக்குவது
பற்றி அதனை “வளைக்கின்ற மாயை” என்று பெயர் குறிக்கின்றார். உயிர்ப்பற்றும் பொருட்பற்றும்
பெருக்கி உலகியற் பொருட் சூழலில் ஆழ்த்தி இளிவந்த செயல்களில் ஈடுபடுத்தி அவம் செய்யும்
மனத்தின் கொடுமையை மேலும் உரைக்கின்றார் வள்ளற்பெருமான். காலவெள்ளத்தால் மக்கள்
வாழ்வில் புதுப்பது மாற்றங்கள் தோன்றிப் புதிய புதிய தேவைகளை உண்டு பண்ணுகின்றன குடும்ப
வாழ்வில் உணவிலும் உடையிலும் உறையுள் நிலையிலும் உண்டாகும் மாறுபாடுகளால் வாழ்க்கைக்குப்
பொருள் வகைகள் வேண்டப்படுகின்றன. அவற்றைத் தனி மனிதன் தானே ஆக்கிக் கொள்ளமாட்டாமல்
பலருடைய உழைப்பையும் உதவியையும் நாடுகின்றான். அவருள் நேர்மையுடையோரும் இல்லாதவரும் உண்டு;
எனினும் நேர்மை குன்றினோர் உறவும் உதவியும் பொருட்கேட்டை எய்துவித்து மனத்தையும்
மாசுபடுத்துகின்றன. குடும்பச் சூழல், நல்லார் தீயார் என்னாது எல்லாரையும் பிணித்து, தீதின்
நீங்கி நன்னெறிக்கண் செல்லாவாறு பலவகையில் மக்களைத் தளையிட்டது போலத் தடுக்கின்றது.
தளையை அறுத்துக் கொண்டு ஏகலாமெனின், குடும்பமும் மயக்குறுத்தும் மாயையின் அமைந்ததாகலின்,
தளையின் நீங்குவது எளிதிற் கைகூடுவதாக இல்லை. நல்லோர் உறவால் நலமும் நன்மதிப்பும் பெற்றவர்,
தீயோர் உறவால் துன்பமும் அவமதிப்பும் எய்தி அல்லல் உறுகின்றனர். மனநோய் பெருகி உடலை வாட்டி
வருத்துவதால் எழுச்சியின்றி இளைப்பதே நிலைமையாகிறது. இறைவன் திருவடி நினைந்தும் மொழிந்தும்
பரவியும் ஒழுகுவார்க்கு மனக்கவலை இல்லாகி மாறும் எனச் சான்றோர் உரைப்பதுகொண்டு, அவன் திருப்பெயரை
மொழியலுற்றால் சிறுமைசெய்யும் மானம் தோன்றி மொழிதற்குரிய நினைவு எழும்போதே சிதைந்துவிடுகிறது
என வள்ளலார் வருந்துகிறார்.
2385. தளைக்கின்ற மாயக் குடும்பப்
பெருந்துயர் தாங்கிஅந்தோ
இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண்
டாய்சிறி தேஇறகு
முளைக்கின்ற போதறுப் பார்போல்நின்
னாம மொழிந்திடுங்கால்
வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக்
கண்ணுடை மாமணியே.
உரை: முக்கண்ணுடை மாமணியே, குடும்பப் பெருந்துயர் தாங்கி இளைக்கின்ற ஏழையாகிய எனக்கு நீ மனம் இரங்கி அருளவேண்டும்; அதன் பொருட்டு நின் நாமம் மொழியப் புகும்போது, பறவைக்கு இறகு முளைக்கும்போது அறுப்பவர்போல் தொடக்கத்தேயே மனத்தை வளைத்து மறைக்கும் மானமாகிய மாயைக்கு இடங்கொடாது வெல்லும் ஆற்றலின்றி வருந்துகின்றேன். எ.று
மாயையின் காரியமாகிய உலகியற் குடும்பவாழ்வு, வாழ்வாங்கு வாழ்ந்து மக்கள் உய்தி பெறற் பொருட்டுப் படைக்கப்பட்டது; ஏனை உயிர்கட்கு உடம்பும் உலகவாழ்வும் தந்து வாழ்விப்பதும் மக்களினத்துக்குக் கடனாகும்; இவற்றைச் செய்யுங்கால் உண்டாகும் இடையூறுகட்கும் இடுக்கண்களுக்கும் அஞ்சி ஓடாமைப் பொருட்டு, மக்கள் மனத்தை மயக்கிப் பிணிக்கும் இயல்புபற்றிக் குடும்பத்தைத் “தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர்” என உரைக்கின்றார். சங்கச் சான்றோர், “ஓடி உய்தலும் கூடும் மன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம்) என மொழிவது காணலாம். குடும்பவாழ்வு தோன்றுதற்கு மூலகாரணம் மாயை என்பதை மறத்தலாகாது என்றற்கு “மாயக் குடும்பப் பெருந்துயர்” எனச் சிறப்பிக்கின்றார். பெருந்துயர் தாக்குங்கால் அதனைத் தாங்கினோர் அறிவு மாசுநீங்கி ஒளிபெறுவதுபற்றித் “தாங்கி” என்றார். என்றாலும், அதன் தாக்குதலின் மிகுதி விளங்க “அந்தோ” என்றும் வள்ளலார் உரைக்கின்றார். உள்ளொளி பெருகப் பெருக ஊனுடல் துன்பத்தாக்குதலால் உருகுவது இயல்பாதல்பற்றி “இளைக்கின்ற ஏழை” என்றும், இளைப்பு அருளொளிக்கு இடமாதலை உணரமாட்டாமை புலப்பட, “ஏழைக்கு இரங்கு கண்டாய்” என்றும் இசைக்கின்றார். மனக் கவலையை மாற்றுதற்கு முதல்வன் திருநாமம் மொழிதல் மருந்து; அதை மொழிய வாய்திறந்தால் பிறர் கேட்டு நகைப்பரோ என்றொரு பொய்யான மானம் தோன்றி வளைத்துக் கொள்கிறது. மொழிந்தாலும் மனம் ஒன்றுவதில்லை. இந்த மானமான மாயையைப் போக்கும் ஆற்றல் இல்லாதவனாக வுள்ளேன் என்பாராய், “நாமம் மொழிந்திடுங்கால் வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன்” என வுரைக்கின்றார். சூரபதுமன் போர்களத்தில் முருகப்பெருமான் “மாறிலாது இருக்கும் தொல்லை ஒரு தனது உருவம் காட்டி நிற்றலும் உம்பர் கடணார்” “இறுதியும் முதலும் இல்லா இப் பெருவடிவம் தன்னைக் கறைவிடம் உறழும் சூரன்” தானும் கண்டான். (கந்த. புரா. 4:13:427, 430); அவனுக்கு நல்லுணர்வு தோன்றிற்று. “சூழுதல் வேண்டும் தாள்கள், தொழுதிடல் வேண்டும் அங்கை, தாழுதல் வேண்டும் சென்னி, துதித்திடல் வேண்டும் தாலு . . . இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும்” (கந்த. புரா. 4: 444) என்று அவன் நெஞ்சம் நினைக்கலுற்றது; அந்நிலையில் அவனை அது செய்யாதபடி “தடுத்தது மானம் ஒன்றே” என்று சான்றோர் கூறுதல் காண்க.
இதனால், மானமாகிய மாயை தோன்றி மனத்தை வளைத்துத் தடுப்பது காணலாம். (215)
|