216
216. திருவைந்தெழுத்தைத் தன் அகத்தே கொண்ட நமசிவாய என்னும் திருப்பெயரையுடைவன்
சிவபெருமான்; வானவர் பொருட்டு நஞ்சுண்டருளிய அருளாளனாகிய அவனுடைய எழுத்து அஞ்சையும் இறப்பதற்குள்
எண்ணாதவர் சிறிதும் அறிவிலராவர்; அறிவு பெற்றதன் பயன் இவ்வெழுத்தஞ்சையும் அறிந்து ஓதிப்
பயில்வது என்ற கருத்தை வடலூர் வள்ளல் வற்புறுத்துகிறார். திருவைந்தெழுத்தின் சிறப்பையும்
பொருளையும் உரைத்தவர் பலர்; அவ்வெழுத்துக்கள் உள்ள இடம் கண்டு உரைத்தவர் வள்ளலார்க்கு
முன்னோர் இவர் என்பது தெரியவில்லை.
2386. மஞ்சடை வான நிறத்தோன்
அயன்முதல் வானவர்க்கா
நஞ்சடை யாள மிடுமிடற்
றோய்கங்கை நண்ணுகின்ற
செஞ்சடை யாய்நின் திருப்பெய
ராகச் சிறத்தஎழுத்
தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை
யாமுன் னறிவிலரே.
உரை: திருமால் பிரமன் முதலிய வானவர் பொருட்டு நஞ்சுண்டு அதன் அடையாளமாகக் கழுத்திற் கறை கொண்ட சிவபெருமானே, கங்கையாறு தங்கிய சிவந்த சடையையுடையவனே, நின் திருப்பெயராக விளங்க நிற்கும் எழுத்து அஞ்சையும், இறக்கும் வரையில் நெஞ்சில் நினைந்தறியாதவர் அறிவில்லாதவரே யாவர் எ.று.
மஞ்சடைவானம் - நீல முகில் படிந்து தோன்றும் வானம்; அதன் நிறத்தையுடையவன் திருமால்; அதுபற்றியே அவன் நீலமேகன்; நீலமேக வண்ணன் என்றெல்லாம் பாராட்டப்படுகின்றான். நஞ்சு - கடல் கடையப் பிறந்த விடம். அது கண்டு அஞ்சி ஓலமிட்ட வானவர் பொருட்டு அதனை உண்டதோடு, அதற்கு அடையாளமாக மிடறு கறைபட்டிருப்பது புலப்பட, “வானவர்க்கா நஞ்சு அடையாளம் இடும்மிடற்றோய்” என நவில்கின்றார். வானவராகிய பிறர் இறவாமைப் பொருட்டுத் தான் நஞ்சுண்டது “நனிநாகரிகம்” ஆதலின், அதனை வியந்து, “நஞ்சடையாளமிடும் மிடற்றோய்” என எடுத்து மொழிகின்றார். அதுபோலவே, நிலவுலகைப் பாதலத்திற் புதைக்கும் கருத்துடன் போந்த கங்கைப் பெருக்கைத் தன் திருமுடியில் தாங்கியருளிய நலத்தை நினையுமாறு “கங்கை நாணுகின்ற செஞ்சடையாய்” எனச் சிறப்பிக்கின்றார். சிவனது சடை இயல்பாகவே சிவந்திருப்பது. அதன்மேலும் அதனிடத்துள்ள செம்மை, நிலவுலகு கெடாமை காத்தது என்ற குறிப்பும் தோன்றச் “செஞ்சடையாய்” என்பது நிற்கிறது. “சலமுகத்தால் அவன் சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ” என மணிவாசகப் பெருமான் விளக்குகின்றார். நமசிவாய என்பது திருப்பெயர்; சி, வ, ய, ந, ம என்ற எழுத்தஞ்சும் கூடி அப்பெயரின்கண் சிறப்புறுகின்றன. இவற்றை எழுத்தெழுத்தாக எண்ணி, ஒவ்வொன்றும் குறிக்கும் பொருளை எண்ணி, அவ்வெண்ணத்தால் சிவத்துகும் உலகுக்கும் உயிர்கட்கும் தொடர்புறுத்தும் திருவருளை யுணர்ந்துகொள்வது அறிவுடையோர் அறிவு பெற்றதன் பயனாகும். அதனைச் செய்யாதார் அறிவிலார் ஆவர்; செய்தற்குரிய காலம், உயிரோடிருக்கிற காலம். உயிர் போகும் நிலையில் கண் பஞ்சடைவதுபற்றி, இறப்பதற்கு முன்னர் என உரைக்கற்பாலராகிய வடலூர் வள்ளலார் “கண்கள் பஞ்சடையா முன் எழுத்தஞ்சும் அடையார்” எனவுரைக்கின்றார். அடைதல் - நினைத்தல்.
இதனால் அறிவுடையராகிய மக்கள் திருவைந்தெழுத்தை உயிர் உடலின் நீங்குதற்கு முன் நினைந்து உய்தி பெறல் வேண்டும் என்பது இப்பாட்டின் கருத்தாதல் காணலாம். (216)
|