217
217. திருவருள் ஞானமும் செல்வமும் வேண்டிக் குறையிரந்து நிற்கும் வடலூர் வள்ளல் சிவபெருமான்
இராவணற்கு அருளிய நலத்தை நினைந்து பரவுகின்றார். இராவணன் இராக்கதர் குலத்து மன்னன்; இலங்கையிலிருந்து
ஆட்சி புரிந்தவன். பெருவலியும் பேராற்றலும் பெற்றவன். இராமன் மனைவியான சீதையைக் கவர்ந்து
தீராப்பழி எய்துதற்குமுன் உலகு புகழும் உயர்வுபெற்று வாழ்ந்தவன். வேதமோதுவதில் மிக்க மேன்மையுற்றவன்;
நாற்றிசையிலும் வாழ்ந்த ஆற்றல் மிக்க அரசரை வென்ற தனிப்புகழ் எய்தியவன். சிவனடியே சிந்திக்கும்
செம்மை மனத்தினன். திருநீறு அணிந்து சிவவழிபாடு செய்யும் சீர்த்தி மிக்கவன். பல்கலையும்
பாங்குறப் பயின்ற பண்பு மேம்பட்டவன். இசைத்துறையில் ஈடு எடுப்பற்றவன்; அவனது இசைப் புலமையை
வியந்து சிவன் அவனுக்கு இராவணன் என்ற சிறப்பளித்தானெனப் புகழும் நாவுக்கரசர், “பத்திலங்கு
வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனைத் தலையாலங்காடன்
தன்னை” என்று பாடுகின்றார். “எண்ணின்றி முக்கோடி வாழ்நாள்” உடையான் என்பர் ஞானசம்பந்தர்.
அவனுடைய வீரர்கள் வானத்திலும் கடலின் அடியிலும் இயங்கும் ஆற்றலுடையவர். அவனுடைய ஆட்சியில்
சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் எனப்படும் கோள்களும் சேட்டைகள் செய்வதில்லை.
இத்துணை ஆண்மையும்
ஆற்றலும் அறிவும் உடைய வேந்தன் மெய்வலி மிகுதலால் ஒருகால் செருக்கினால் சிந்தை மயங்கினான்.
கயிலைமலைப் பகுதியில் வானவூர்தியேறித் திரிந்தபோது, வழியில் கயிலைமலை நிற்பது கண்டான்.
தேர்ப்பாகன் “கருதியதேர் கயிலாயமீது செல்லாது; மேற்செல்லக் கருதுதல் கூடாது; நம் வீரத்தை
இங்கே ஒழிதல் வேண்டும்; மேற்செல்ல முடுகுவது தன்மம் அன்று” என்று மொழிந்தான். அவனுரை
கொள்ளாது இராவணன் முனிந்து விடுவிடு என்று ஆணையிட்டான்; தேர் செல்லாதாயிற்று (நாவுக்.
பருவரையொன்று சுற்றி) பின்னர், அக்கயிலையைப் பெயர்த்து ஒருபால் வைத்துவிட்டுத் தன் தேரைச்
செலுத்துவதென்று எண்ணி அதன் கீழ்த் தன் தலைபத்தையும் நுழைத்து எடுத்தான்; மலையசைந்தது;
மலையுச்சியில் வீற்றிருந்த சிவன் அதனையறிந்து தன் கால் விரலை யூன்றவும், நெருக்குண்டு தன்
குற்றம் உணர்ந்து சிவனது அருள் வேண்டிப் பாடினான்; இதனை ஞானசம்பந்தர் நினைந்து, “வள்ளல்
இருந்த மலையதனை வலம் செய்தல் வாய்மையென உள்ளம் கொள்ளாது கொதித்தெழுந்து அன்று எடுத்தான்
உரம் நெரிய மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் (தோணி. 8) என்று பாடுவர். சிந்தை
திருந்திய செவ்விய இசைப்பாடிப் பரவிய அவ்விராவணற்குச் சிவபிரான் அருள் புரிந்தான். வணங்காவுள்ளத்தால்
வீரம் பேசி வீழ்ச்சியெய்திப் பின் வணங்கிய செய்கையும் இணங்கிய கொள்கையும் இராவணன் உற்றமைக்கு
உவந்தளித்த அருள் நலத்தை வடலூர் அடிகள் தமக்கும் அருளவேண்டுமென இறைஞ்சுகிறார்.
2387. இலங்கா புரத்தான் இராக்கதர்
மன்னன் இராவணன்முன்
மலங்காநின் வெள்ளி மலைக்கீ
ழிருந்து வருந்திநின்சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே
இரங்கிக் கருணைசெய்த
நலங்காணின் தன்மைஇன் றென்னள
வியாண்டையின் நண்ணியதே.
உரை: இராவணன் நின் வெள்ளிமலைக்கீழ் இருந்து வருந்தி நின் சீரைக் கலங்காமல் பாடிடக் கேட்டு இரங்கிச் செய்த கருணை நலங்காண் நின் தன்மை; இப்பொழுது அந்நலம் எங்கே சென்றது; அருள் புரிக எ.று.
இலங்கை என்ற சொல்லுக்குத் 'தீவு' என்பது பொருள். இதன் பழம்பெயர் 'ஈழம்' என்பர். தென்னாடு கடல்கோட்கு இரையாகியபோது ஈழம் இலங்கையாயிற்று; அதன் பின்னரே இஃது அரக்கர் வாழிடமாய் இராவணன் முதலியோர் இருந்து ஆட்சி செய்யும் நிலமாயிற்று. இராவணனுக்கு பின்னர் அர்க்கர் குலம் அழிந்து மறைந்தது. மக்கள் வாழிடமாகியதும் தமிழரும் சிங்களரும் இந்நாட்டில் வாழ்வாராயினர். சிங்களரும் ஒரு காலத்தே கலிங்க நாட்டிலிருந்து குடிபுகுந்தவர் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அரக்கர் வாழிடமாய் விளங்கிய காலத்தில் இராவணனுக்கு அரசிருக்கையாக விளங்கியது இலங்கை நகரம். அதனால் அவனை அடிகளார் “இலங்காபுரத்தான்” என்றும், அந்நாட்டில் வாழ்ந்தவர் மக்களைத் தின்னும் இராக்கதராதலின் “இராக்கதர் மன்னன்” என்றும் உரைக்கின்றார். இராக்கதரை அரக்கர் என்றும் கூறுவர். மனித இனத்தைக் கொன்று தின்பதுபற்றி இராக்கதரை இரக்கமற்ற அரக்கர் என்பது இயல்பாயிற்று. இவரது இனம் பிற்காலத்தே ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இருந்திருக்கிறது. இவர்கட்கு மன்னனான இராவணனது இயற்பெயர் தெரிந்திலது; சிவபிரான் தந்த இராவணன் என்ற பெயரே எங்கும் வழங்குகிறது. வடமொழியாளர் இராவணன் என்று சொல்லுக்குக் கூறும் பொருள் அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. இருளிரவின் நிறமுடையவன் - கருப்பன் - என்ற பெயரே பொருத்தமாகவுளது. வடவரும் கருப்பனைக் கிருஷ்ணன் என்றும், வெள்ளை நிறமுடையவனை அருச்சுனன் என்றும் பெயரிட்டழைப்பர். சலியா நிலையாதாகையால் வெள்ளி மலையை “மலங்கா வெள்ளிமலை” என்று கூறுகிறார். மலங்குதல் - சலித்தல். எக் காலத்தும் வெண்பனி யுறைந்து வெண்ணிறமாகத் திகழ்தலால் வெள்ளி மலை எனப்படுகிறது. சிவனுக்கே உரித்தெனப் புராணம் கூறுவதால் “நின் வெள்ளிமலை” என உரிமைப்படுத் துரைக்கின்றார். இராவணனது வானவூர்தி நேர்கோட்டில் செல்வதாகலின், எதிர்நின்ற வெள்ளிமலையை வளைந்தேகுவதைத் தவிர்க்க எண்ணி, அதனைப் பெயர்க்கருதி, அதன் கீழ்த் தலைபத்தும் செலுத்திப் பெயர்க்க நினைந்தான். வெள்ளி மலைத்தொடரில் கயிலாயம் ஒன்று; அதனால் கயிலை என்னாமல் பொது வாய்ப்பாட்டில் வெள்ளிமலை என்றார். மலையின்கீழ் தலையை நுழைத்து இராவணன் அசைக்கவும் அஃது அசைந்தது; அதன் உச்சியில் சிவனோடிருந்த உமை நங்கை அஞ்சினள் எனப் புராணங்கள் புகல்கின்றன; அதனை யுணர்வாற் கண்ட சிவபிரான் தன் திருவடிக் கட்டை விரலின் நுனியால் ஊன்றினர்; மலையெழுந்திற்று; இராவணன் அதன்கீழ் அகப்பட்டுத் தலையை எடுக்கமாட்டாது வருந்தினான்; அதனை “நின் வெள்ளிமலைக் கீழ் இருந்து வருந்தி” என்று பாடுகின்றார். வருந்த என்பது ஏடெழுதினோர் பிழை.
திருவிரற் சிறப்பால் இராவணற் கெய்திய வருத்தம், மெய்வலிச் செருக்கால் மறைக்கப்பட்டிருந்த அவனது நல்லறிவை விளக்கம் செய்தது. தன் தவற்றையும் இறைவனது திருவருட் சிறப்பையும் அறிவால் ஆராய்ந்துணர்ந்தான்; கலங்கிய அவனது உள்ளம் தெளிவு பெற்றது. அந்நிலையில் சிவபெருமான் திருவருள் நலத்தை இனிய இசை கலந்து பாடினான், இதனை “நின்சீர் கலங்காமல் பாடிடக் கேட்டு” எனப் புகலுகின்றார். கேட்டதனால், சிவனது திருவுள்ளம் இரங்கி அருள் சுரந்தது; அதனைக் “கேட்டே இரங்கிக் கருணை செய்த நலம் காண்” என்றும், இவ்வாறு தன்னை மதியாது பிழை செய்தாரையும் பொறுத்து நன்றருளுவது சிவபிரானது பெருந்தன்மை என்பது விளங்க, “இரங்கிக் கருணை செய்த நலம் காண் நின் தன்மை” என்றும் வள்ளலார் உரைக்கின்றார். இரக்கமற்ற அரக்கர் தலைவனுக்கும் சுரந்தளித்த நினது எய்தாமை என்னையோ முறையிடுவாராய், “இன்று என்னளவு யாண்டையின் நண்ணியது” எனக் கேட்கின்றார்.
இராவணற்குக் காட்டிய இரக்கம் கூறி அருள் நாடி முறையிடுவது இப்பாட்டின் பயன். (217)
|