218
218. உலகில் காலமாறுதல் தொழிலறிவு சிறந்து புதியபுதிய செயல்வகை தோன்றற்குவழி காணுகிறது.
உடுக்கும் உடைகள் வன்மையும் மென்மையும் பல்வகை வண்ணங்களும் கொண்டு வெளிப்படுகின்றன. அவற்றை
உடுப்பவரைக் காணின் காண்பவர் உள்ளத்தில் அவற்றைத் தாமும் வாங்கி உடுக்க வேண்டும் என்ற
ஆர்வம் உண்டாகிறது; நல்ல ஆடையில்லாரை மக்கள் அவமதிக்கின்றார்கள்; அவரை அரைவிலங்கென்றே
அறைகின்றார்கள். மக்களுருவுக்கு ஆடை ஏற்றமளிப்பதனால் உடை மிக இன்றியமையா தென்பது தெளிவாகிவிட்டது.
உடை நெய்யும் தொழிலுக்கு வாணிகமும் காலந்தோறும் மாறுகின்றன. தொழில் திறம் மேன்மையும்
கீழ்மையும் எய்தும்போது வாணிகப் பெருக்கமும் சுருக்கமும் அடைகிறது. சமூகத்தில் தொழிலாளரும்
ஏழை எளியரும் வருத்தமுறுகின்றனர். செல்வர் சிலரும் எளியவர் பலருமாக உள்ளமையின் உடைவாங்கும்
திறம் குன்றுதலால் அது வேண்டி மனம் நோக்கின்ற காட்சி எங்கும் மலிந்துவிடுகிறது.
உடைநிலை ஒரு
பாலாக, உணவு நிலை ஒருபால் உள்ளத்தை ஈர்க்கிறது. உணவு அளவு குன்றினாலும், அஃது இல்லையானாலும்,
மக்கள் அவலமுறுகின்றனர். மக்கள் செல்வம் மாண்புடையது என்ற கொள்கை வழிவழியாக அறிவுறுத்தப்பட்டு
வந்தமையின், மக்களினம் புற்றீயல் போலப் பெருகிடவே, அவர்கட்கு உடையேயன்றி உணவளிப்பதும்
பெருங்கடமை யாகிவிட்டது. உணவுப்பொருள் விளைவிக்கும் உழவுத் தொழிலை உயர்ந்தோர் எனப்படுவோர்
மிக்க தாழ்வாகக் கருதினர்; உழவின் பெருமையைத் திருவள்ளுவர் முதலியோர் எத்துணையோ உயர்த்துக்
கூறினாராயினும், பிற்காலத்தோர் அதனை யேலாது உரிமை சிறந்த உழவினும், மடிமை வளர்க்கும்
அடிமைப்பணி உயர்ந்ததென்று கொண்டு, “உத்தியோகம்” எனப் பெயரிட்டுக் கல்விக் கற்போரைப்
பிறர் ஏவின செய்யும் ஏழைகளாக்கினர். கல்வியறிவு வில்லாதவர்பால் உழவுத்தொழில் சிக்கினமையின்,
உண்பொருள் விளைவும் வணிகப் பொருள் பெருக்கமும் புதியபுதிய நெறிகண்டு வளம்பெறும் திறம் இன்றிச்
சுருங்கத் தலைப்பட்டன. உண்போர் பெருக்கமும் விளைவின் சுருக்கமும் மக்களிடையே பற்றாக்குறையை
முற்றுவித்து விட்டது. உழவரும் தொழிலரும் வணிகரும் உத்தியோகரும் உணவு தேடி அலைந்து திரியும்
காட்சி பார்க்குமிடம் எங்கும் பரந்து விளங்குகிறது. பொன்னும் பொருளும் மிகைபட இருந்தாலன்றி
உடையில்லை உணவில்லை என்ற நிலை தோன்றியதும் அரசியல் வாணிகம் முதலிய துறைகளில் வஞ்சமும்
சூதும் இலஞ்சமும் ஏமாற்றமும் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன. அரசரில்லாத ஆட்சியில் அமைச்சர்கள்
அரசியல் தலைவர்கள்; அவர்களது அரசியல் வாழ்வு குறுகிய காலத்ததாகலின், “காலமுண்டாகவே (
பொருட் ) காதல் செய்து உய்தலைக் கருதுவது” அவர்கட்கு வேண்டப் படுவதாயிற்று. அரசியலில் வஞ்சமும்
இலஞ்சமும் இடம் பெற்றதும், அது பையப் பரவி உப்பும் காடியும் நாடும் ஏழமைத்துறையிலும் இனிது
இயங்குவதாயிற்று. இதனால் உண்பொருள் தேட்டம் பெருந்துன்ப நிலையாக மாறிவிட்டது. மக்கட்கு வேண்டுவன
அறிந்து காடும் மலையும் கடலும் கடந்து கொணர்ந்தளித்து மக்களின் வாழ்வுக்குப் பணிசெய்யும் நல்லறம்
எனப்பட்ட வாணிகம், “சூதாட்டம்” என்று வழங்கும் இழி நிலைக்கு இறங்கிவிட்ட.து.
இங்ஙனம் யாவரையும்
வஞ்சித்தொழுகும் மக்களினம் பெருகியது ஒருபாலாக, செல்வர் வாழ்வில், உடைக்கும் உணவுக்கும்
வருந்தும் நிலை இன்றாயினும், ஆடையாலும் உடையாலும் உடலை அணிசெய்வதோடு மணியும் பொன்னும் கொண்டு
பணிகள் பல பூண்பதில் வேட்கை எழுவதாயிற்று. பூணாரம் பூண்பது மக்களினம் அறிவறியப்பெற்ற நாளிலிருந்தே
தொடர்ந்துவரும் பண்பாடு. இனப்பெருக்கம் கருதி ஆணைத் தன்பால் ஈர்த்தற் பொருட்டுப் பெண்ணினத்துக்கு
இயற்கை அழகிற்குமேல் அணிமணிகளால் செயற்கை வனப்புச் செய்துகோடல் வேண்டினமையின், நாளடைவில்
இஃதொரு பண்பாகிவிட்டது. பின்னர் இது செல்வர்க்கே உலகு சிறப்புத் தருவது தெரிந்து, செல்வமுடைமையைப்
பிறர்க்கும் புலப்படுத்தும் சீரிய குறியுமாயிற்று. அதனைச் சீர்மையுடன் செய்வோரை நாடலும், செய்த
பொன்மணிப் பணிகளைக் காத்தலும் கடுந்துன்பமாயின. ஆகவே செல்வர் வாழ்வும் மனவருத்தமே தருவது
பயனாயிற்று. இவற்றை எண்ணுகின்றார் நம் வடலூர் வள்ளல். மன்மக்கள் அனைவரையும் தன் மக்கள்
என்று கருதும் சான்றோராதலால் நெஞ்சு நீராக உருக்கின்றார். எல்லாம் சஞ்சலமாக இருப்பதை நினைந்து
இதனின்று நீங்கி உய்திபெற அருளவேண்டும் என இறைவனைப் பாடிப் பரவுகின்றார்.
2388. உடையென்றும் பூணென்றும் ஊணென்றும்
நாடி உழன்றிடும்இந்
நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங்
காணிதி னான்சிறியேன்
புடையென்று வெய்ய லுறும்புழுப்
போன்று புழுங்குகின்றேன்
விடையென்று மாலறங் கொண்டோயென்
துன்பம் விலக்குகவே.
உரை: பெரிய அறத்தை விடையென்று கொண்டு அதனை ஊர்பவனே, உடையும் ஊணும் பூணும் நாடிவருந்தும் இவ்வுலக நடை எப்பொழுதும் சஞ்சலம், சஞ்சலமேயாக உளது; இதன் பெருமையும் வெறுமையும் நோக்க நான் அதன் கொடுமையை நீக்கும் ஆற்றல் இல்லாச் சிறுமையுடையேன்; ஆயினும், இச் சஞ்சலத்தைக் கண்டு பக்கமென்று கருதி வெயிலிற் புகுந்த புழுப்போல மனம் புழுங்குகின்றேன்; இத் துன்பத்தை விலக்கியருளல் வேண்டும். எ.று.
உடுக்கப்படுவது உடை; பூணப்படுவது பூண்; உண்ணப்படுவது ஊண். உடை பூண் ஊண் என்றாராயினும் உடை, ஊண், பூண் என முறைசெய்து கோடல் வேண்டும். ஊணினும் அறங்காக்கும் சிறப்பால் உடை முதற்கண்ணும், உடையும் ஊணும்போல இன்றியமையாமை உடையதென்றாதலால் பூணை இறுதிக்கண்ணும் வைத்தல் வேண்டும். எளிதிற் பெறப்படுவன அன்மை தோன்ற “நாடி உழன்றிடும் இந் நடை” என்று கூறுகின்றார். உலகியல் வாழ்வை “நடை” என்றும், யாவரும் அறிந்ததென்றதற்கு “இந்நடை” எனச் சுட்டியும் உரைக்கின்றார். அறிவும் செயலுமல்லது வாழ்க்கையில் வேறு நடையின்மையின் வாழ்க்கையை நடை என்று இயம்புகின்றார். இந்நடை நல்கும் நுகர்ச்சித் துன்பம் மிக்கிருப்பதுபற்றிச் “சஞ்சலம் சஞ்சலம்” என இருமுறை அடுக்கியுரைக்கின்றார். உலகநடை பயக்கும் துன்ப மிகுதியை நோக்க அதனை எதிரேற்றுத் தாங்கும் ஆற்றலில்லாமை விளங்க “நான் சிறியேன்” என்பார்; அதனால் தான் துன்பத்தால் வருந்தும் திறம் விளக்குதற்கு வெயிலிற்பட்ட புழுவை உவமை கூறுகின்றார். புடை - பக்கம். வெயிலைத்தான் ஒதுங்குதற்கேற்ற பக்கம் என்று கருதி அதன்கட் சென்று வருந்துகிறது புழு என்றற்கு, “புடையென்று வெய்யல் உறும் புழு” என்று புகல்கிறார். வெயில் வெய்யில் எனவும், வெய்யல் எனவும் வழங்கும். புழுங்கல் - வேகுதல். சிவபெருமான் ஊர்தியாகிய எருது அறத்தின் வடிவம் என்று கூறுவது பற்றி, “விடைபெறுமால் அறம் கொண்டோய்” என்கிறார்; என்றாரேனும், மால் அறத்தை விடையென்று கொண்டோய் என மாறுக. மால் - பெருமை. இனி திருமால் ஊர்தியாகிய எருதின் உருக்கொண்டு தாங்குகிறார் என்று பௌராணிகர் கூறுவதுபற்றி மால் அறம் என்றார் எனினும் அமையும். அதற்குத் திருமாலாகிய அறக்கடவுளை விடையென்று கொண்டோய் என உரைத்துக் கொள்க.
இதனால் அறத்தைச் செலுத்தும் அண்ணலாகிய நீ உலகநடை பயக்கும் துன்பத்தினின்றும் விலக்கியருளுவது அறமாம் என்பது பயன். (218)
|