219
219. ஆகம அறிவால் உலகின் தோற்றத்துக்கும் உலகிலுள்ள உயிரின் தோற்றத்துக்கும் காரணமாக
இலங்குவது இறைவன் திருவருளே என்பது இனிது விளங்கி நிற்கிறது. அதனை எண்ணுகின்ற அடிகளார், அருளே
எல்லாமாய் இருப்பதை வியந்து பாடுகின்றார்.
2389. அருள்அர சேஅருட் குள்றேமன்
றாடும் அருட்கடலே
அருள்அமு தேஅருட் பேறே
நிறைந்த அருட்கடலே
அருள்அணி யேஅருட் கண்ணேவிண்
ணோங்கும் அருள்ஒளியே
அருள்அற மேஅருட் பண்பேமுக்
கண்கொள் அருட்சிவமே.
உரை: அருளே வடிவாகிய சிவம், அருள் நெறியில் தனது ஆணை செலுத்துகிறது; பொருள்களின் தோற்றத்திலும் இருப்பிலும் மறைவிலும் மாற்றங்கள் உண்டாகியபோது அருள்நிலை சலியாத குன்றமாகத் திகழ்கிறது; பொன்மன்றில் ஆடலரசாய் அருள் கூர்ந்து ஆடும் இறைவனாக இலங்குகிறது; அருளமுதமாய், அருளாற் பெறலாகும் பொருளாய், அருளால் எங்கும் நீக்கமற நிறைந்த கடலாய், எப்பொருட்கும் அழகுதரும் அணியாய், அருள் ஒளிரும் கண்ணாய் அமைந்திலங்கும் அப் பரம்பொருள் விண்ணகத்தே விரிந்துயர்ந்து விளங்கும் அருளொளியாகும்; மூன்று கண்களோடு கூடிய உருவாய்ச் சகளீகரிக்கும் சிவம், அறமும் பண்பும் அருளேயாக அமைகிறது எ.று.
அருளும் இறைமையும் பிரிப்பறக் கலந்து திகழும் சிவபரம்பொருள் அகள நிலையில் முறை செய்யும் அரசராகவும், தளராது தாங்கும் வகையில் குன்றமாகவும், மன்னுயிர்க்கு வாழ்வளித்தல் வேண்டி மன்றில் நின்றாடுவானாகவும் விளக்கமுறுவகை எடுத்து மொழிந்து, அன்பு மிகுதியால் “அருளமுதே அருட்பேறே நிறைந்த அருட்கடலே” என்று சொல்லி மகிழ்கின்றார். அருளை மனத்தால் நினைந்து கண்டு, உணர்வின் கண் அதன் சுவையைப் பருகி மெய்தளிர்க்க நின்ற அருட்பெருக்க நிலையை அதன் தண்ணொளியில் பார்த்து வியக்கின்றார். அவ்வியப்பு “அருள் அணி” எனவும், “அருட்கண்” எனவும், “விண்ணோங்கு அருள் ஒளி” எனவும் உணரப்படுகிறது. அருள் ஒளியில் சகளமாய் முக்கண் கொண்டு தோன்றும் சிவத்திருமேனி அறமும் அருட்பண்பும் கொண்டு காட்சி தருகிறது. இதனால் அருளொளியில் தோய்ந்து அருளாரமுத வெள்ளத்திற் படிந்து இன்புறும் அருணிலை ஒருவகையில் உணர்த்துமாறு காணலாம். (219)
|