220
220. குடும்ப வாழ்க்கையின் கொடுமை கூறக் கேட்கும் நெஞ்சம் நிறையழிந்து
என் செய்வது என்ற ஏக்கம் எய்துகிறது; உய்தி யாது என உணரத்தலைப்படுகிறது. இஃது எய்தியதற்குக்
காரணம் யாது என எண்ணுகிறது. மேனாட்டு அறிஞர் ஒருவர்
A
longing to enquire
Into the mystery of
this heart which beats
So wild, so deep in us
- to know
Where our lives come
and where they go,
என்று சொல்லி, ஒருவரும் முடிவு காணாராயினர் என்ற கருத்துப்பட,
And
many a man in his own breast then delves,
But deep enough, alas! none
ever mines,
என்று கையறவுபடுகின்றார். இம் மேனாட்டறிஞரைப் போலவே திருநாவுக்கரசரும்
“வந்தவாறு எங்ஙனே போமாறு ஏதோ மாயமாம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா” என்பது நினைவில் எழுகிறது.
குடும்ப வெள்ளத்தில் வீழ்ந்த “நாம் எங்ஙனம் வீழ்ந்தோம்? ஏன் வீழ்ந்தோம்?” என்பதை நினைவதிற்
பயனில்லை; இதனின்று கரையேறுவதே செயற்பாலது என்று எண்ணுகின்றார். வெள்ளத்தோடே ஓடி ஒடுங்காமல்
திருவருளாகிய கரையை அடைய வேண்டும். அக் கரையைக் காணாது கலங்குவோர்க்குக் கரைகாட்டி அருள்பவன்
இறைவன் என்னும் கருத்துப்பட “முதல் அந்த மில்லா மல்லற் கரை காட்டி ஆட்கொண்டான்” என மணிவாசகப்
பெருமான் கூறுவது நினைந்து, அருள் புரியுமாறு வேண்டுகின்றார்.
2390. நிலையறி யாத குடும்பத்
துயரென்னும் நீத்தத்திலே
தலையறி யாது விழுந்தேனை
ஆண்டருன் தானளிப்பாய்
அலையறி யாத கடலேமுக்
கண்கொண்ட ஆரமுதே
விலையறி யாத மணியே
விடேலிதென் விண்ணப்பமே.
உரை: அலையறியாத கடலே, முக்கண் ஆரமுதே, மணியே, குடும்பத் துயரமென்னும் நீர்ப்பெருக்கில் இடமறியாது வீழ்ந்து வருந்துகிறேன்; இதன்கண் அழுந்திக் கெடவிடாமல் அருளாகிய கரைகாட்டி ஆட்கொள்க; இதுவே என் விண்ணப்பம் எ.று.
குறைவிலா நிறைவான அறிவின்பக் கடலாக இருக்கும் இறைவனை அலைப்பன வேறே எவையும் இல்லாமையால் “அலையறியாத கடலே” என்று கூறுகிறார். மண்ணுலகில் நாம் காணும் கடல் பலவும் மலைபோல் அலையுடையன என்பதை நினைவு கூர்க. தாவா இன்பமும் சாவா வாழ்வும் தருபவனாதலால், “முக்கண்கொண்ட ஆரமுதே” என்று பாராட்டுகின்றார். நினைவார் நெஞ்சின்கண் மணிபோல் ஒளிர்தலால் விலை கூறமாட்டாமை விளங்க “விலையறியாத மணி” என்று இயம்புகின்றார். குடும்பங்கள் தோற்றமும் முடிவும் காணமுடியாத நிலையில் நீரோட்டம் போலக் காட்சி வழங்குவதுபற்றிக் “குடும்பம்” என்றும், அதன்கண் துயர்வகைகள் மாறிமாறி அலைபோல் வந்து தாக்கியவண்ணம் மிருப்பதால் “குடும்பத்துயர் என்னும் நீத்தம்” என்றும் கூறுகின்றார். துன்பம், துயர், உண்டி, உடை, உறையுள், மருந்து என்பவற்றின் தேட்டமே தொழிலாய், அவற்றின் ஆக்கக் கேடுகளால் அவலுமும் கவலையும் கலக்கமும் கையறவும் ஆகியவற்றால் துன்பமாய், நீர்ப்பெருக்குப்போல் பெருகி நிலையின்றி மாறிக்கொண்டே யிருத்தலால் “துயர் என்னும் நீத்தம்” என்று சிறப்பிக்கின்றார். குடும்பவாழ்வு பெறுவன பெற்றவழி இன்பம் தருமாயினும், பெறாவழி எய்தும் துன்பமும் துயரும் மிகுதியாதலால், அவற்றையே எடுத்துக் “குடும்பத்துயர்” என்று கூறுகின்றார். நில்லாது ஓடுதல்பற்றி நீர்ப்போக்கினை நீத்தம் என்பது வழக்காயிற்று. துறையறிந்து இறங்காமல் வீழ்ந்தேன் என்பார், “தலையறியாது விழுந்தேன்” என்று இசைக்கின்றார். தலை - இறங்கும் துறையிடம். இதனாற்றான் கரையறியாது கலங்குகின்றேன் என்பது கருத்து. “காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்” என்று திருநாவுக்கரசர் உரைத்தருளுவது ஒப்ப நோக்கத் தகுவது. அருட்கரை காட்டிக் கைகொடுத்து ஏற்றுக என்பார், “அருள்தான் அளிப்பாய்” என்றும், அருளாயாயின் கரையேற மாட்டாமல் குடும்பத் துயர்கடலில் அழுந்திக் கெடுவேன் என்றற்கு, “விடேல்” என்றும் கூறுகின்றார். இஃது ஒன்றே வேண்டுவதென்றற்கு “இது என் விண்ணப்பம்” என மொழிகின்றார்.
இதனால், குடும்பத் தொல்லையென்னும் நிலையறியாத நீர்ப்பெருக்கில் வீழ்ந்தார்க்கு அருளல்லது கரையேற வேறு துணையில்லை என்பது பயனாம் என்க. (220)
|