221

      221. உள்ளம், வாய், மெய் என்ற முக்கருவிகளையும் ஆழ்ந்து நினைக்கின்றார் வடலூர் அடிகள். உள்ளத்தின் தூய தன்மை உண்மையாகவும், வாய்மொழியின் தூய்மை வாய்மையாகவும், மெய்யால் செய்யப்படும் செயற்றூய்மை மெய்ம்மையாகவும் விளங்கக் காண்கின்றார். இம் மும்மையும் செம்மையாக அமைந்தாலன்றி மக்களினம் இம்மை மறுமை அம்மை என்ற மும்மை வாழ்வில் செம்மையான இன்பம் பெறமுடியாது என்ற அருளறிவு விளக்கமாகிறது. வாய்மை வழுவுமாயின், தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவது காண்கிறோம். இவ்வாறே மெய்ம்மை பிறழுமாயின், பிறழ்பவன் பிறருடைய நம்பிக்கை யிழந்து உணவுக்கும் உடைக்கும் வழியின்றி வறுமைக்கு இரையாகி வருந்துகிறான்; உண்மையில்லாதவன் “எல்லார்க்கும் பொய்யனாய் ஏழ் பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாய்” தீமையடைகின்றான். இந்நிலை தனிமனிதனோடு நில்லாது அவனை உள்ளிட்ட சமுதாயத்தையும் இவ்வாறே மிக்க துன்பத்துக்கு உள்ளாக்குகிறது. உலக மக்களின்பால் மெய்ம்மையுடன் நடந்துகொள்ளாத சமுதாயம் வாணிகம் தொழில் என்ற துறைகளில் மதிப்பிழந்துவிடுகிறது. மிளகாய்ப்பொடியுடன் செங்கற்பொடியைக் கலந்து விற்பதும், மிளகுடன் கருமண் உருண்டை கலந்து தருவதும் இவ்வாறே நன்பொருளோடு வேண்டாத தீயபொருளைக் கலந்து கொடுப்பதும் மெய்ம்மைக்கு மறுதலையாய்ச் சமுதாயத்துக்குத் தீங்கு செய்கிறது. ஒப்பரவு என்ற அறம்தான் உண்மையொழுக்கத்துக்கு உரம் தந்து உலக மக்களை வாழச் செய்கிறது. உலகவர்க்கு வேண்டும் உணவும் உடையும் இடத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப வேறுபடும். அவ்வேறுபாட்டுக் கொப்பச் செய்தொழிலும், தொழிற்குரிய அறிவும் நினைவும் வேறுபடும். இதனால்தான் ஐரோப்பிய நாட்டவரும் அவர் கிளையினரான அமெரிக்கரும் தொழிலும் அறிவும் மேம்பட்டு விளங்குகின்றனர். அறிவு நுட்பத்தால் மெய்யுழைப்பைக் குறைக்கும் கருவிகளைக் கண்டு பொருள்வகைகளைப் பெருக்கி வேண்டும் பிற நாட்டவர்க்கும் வழங்குகின்றார்கள்; அதனால் செல்வம் மிகுந்து சிறப்புடைய வாழ்வினராக உள்ளார்கள். பொருட் பெருக்கம் மாத்திரம் செல்வம் தருவதில்லை. பெருகிய பொருளைப் பிறர்க்கு வழங்குங்கால் வாய்மை முதலிய மும்மை யொழுக்கமும் பெரும்பணி செய்கிறது. சொல்லிலும் செயலிலும் தூய்மை யிருந்தாலன்றிப் பொருட் பெருக்கம் செல்வம் தரமாட்டாமல் கேடு செய்கிறது; வாழ்வு துன்ப நிலையமாகிறது. உலக நாடுகளில் பொருட் பெருக்கமும் செல்வமும் உள்ள நாட்டவர் சிலரே; பலர் அந்த நலமின்றித் தாங்களே ஏமாற்றி ஏய்க்கின்றனர்; இளைக்கின்றனர். அவர்களுடைய அரசும் வாழ்வும் அறம் துறந்தும் அல்லலுறுகின்றன. நீதியும் நேர்மையும் விலைப்பொருளாய் மக்களிடையே விற்கப்படுகின்றன.

 

      தனி மனிதன்பால் முளைத்த இவ்வொழுக்கக் கேடு சமுதாயத்திற் படர்ந்து பெருந்தீங்கு விளைத்திருப்பதை அறிவுடையோர் எண்ணுகின்றார்கள். பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட அரசுகள், தீங்குடைய நெஞ்சினர் பெரும்பாலராகின்றபோது பல்வகைத் தீங்குகள் பெருகுதற்கே துணை செய்வனவாகின்றன. அந்நிலையில் நாடா வளமுடையவாக வேண்டிய நாடுகள், பிறவற்றை நாடி வாழும் நாடுகளாகின்றன. நாடுவது வேண்டப்பட்டபோது, சொல்லும் செயலும் வேறுபடும் நாடுகள் வறுமைக் குரிமைபூண்ட நாடுகளாகி விடுகின்றன.

 

      இந் நிலைமை நம் நாட்டை நோக்கி வருவதை வடலூர் வள்ளல் நெடுந்தகை தமது அருள் நோக்கத்தால் கண்டு விடுகிறார். மக்களினத்தை உயிரோடே வைத்துக் கொன்றுண்ணும் கொலைக்கூட்டம் வாணிகம் தொழில் சமுதாயம் அரசு என்ற துறைகளில் மிகுவது காண்கின்றார். சமயத்துறையில் மெய்ம்மை பெருகித் தன்னலம் பேணும் தகவிலார் கூட்டம் சாதியினைச் சழக்குகளை நிறுவித் தழைப்பதற்குத் துணைபுரிவதும் அவரது அருட்கண்ணுக்குப்  புலனாகிறது. நாடோறும் இத்தகைய தீங்குகள் பல்லாயிரமாகப் பெருகுவது அறிந்த வடலூரடிகள் வருந்துகிறார். அகத்தே பெய்யும் செயலிற் கொடுமையும் நிறைந்த இத்தீமை அறக்கெட வேண்டுமாயின் இறைவன் திருவருளல்லது துணை செய்யவல்லது பிறிதில்லையென எண்ணி முறையிடுகின்றார்.

2391.

     மெய்யகத் தேகணப் போதும்
          விடாது விரும்புகின்றோம்
     கையகத் தேநின் றொளிர்கனி
          யேநுதற் கட்கரும்பே
     வையகத் தேநினை அல்லாமல்
          நற்றுணை மற்றிலைஇப்
     பொய்யகத் தேன்செயும் தீங்கா
          யிரமும் பொறுத்தருளே.

உரை:

     மெய்ம்மையைத் துறவாமல் விரும்பும் மெய்யடியார் கையகத்தே ஒளிரும் செங்கனி போலும் சிவனே, நெற்றியிற் கண் கொண்ட கரும்பே, நின்னையல்லால் நல்ல துணை வேறில்லையாதலால் யான் செய்யும் தீங்கு ஆயிரமாயினும் பொருத்தருள்க எ.று.

     அகத்தே மெய்ம்மை கணப்போதும் விரும்புகின்றோர், சிவஞானத்தால் சிவமாகிய மெய்ப்பொருளைக் கண்டு, அதன்கண் இமைப்போதும் நீக்கமின்றி நினைவு தோய்ந்து அதனையே விரும்பியுறையும் சிவஞானிகள் அங்கையில் என்ற பழமொழியை மெய்யுணர்ந்து விழையும் பெரியோர் “கையகத்தே நின்றொளிர் கனியே” என உரைக்கின்றார். அஃதாவது அப்பெருமக்களின் ஞானக் கண்ணெதிரே காட்சிதந்து கொண்டிருப்பது சிவபரம் பொருள் என்பது. நுதற்கண் கரும்பு - நெற்றியிலே கண்ணுடைய கரும்பு. வையக வாழ்வில் மக்கள் பிறர் துணையின்றி இருப்பதில்லை; மேலோர்க்கு மேலோரும், கீழோர்க்கு கீழோரும், சிறுவர்க்குச் சிறுவரும், முதியர்க்கு முதியோரும் துணைபுரிந்து வாழ்கின்றனர். எவர்க்கும் யாவரும் நிலைத்த துணையாவதில்லை; முக்குணச் சுழற்சியால் நல்லோர்பால் தீயனவும், உயர்ந்தோர்பால் தாழ்வு தருவனவும், நண்பர்பால் பகைமையும் அறியாமலே தோன்றி, அவரது துணைமைக்கு ஊறு செய்கின்றன. ஆதலால் அவர்களை நற்றுணை என்று சொல்வதற்கில்லை. அது பற்றியே “வையகத்தே நினை அல்லாமல் துணை மற்று இலை” என்று வள்ளலார் வடித்துரைக்கின்றார். துணையாகாத் துணைவர் சூழலில் வாழும் என் மனத்தில் பொய்ம்மையுணர்வு பொதிந்து கிடத்தலால், எண்ணிறந்த தீய நினைவுகட்கு இரையாகிப் பல்லாயிரம் குற்றம் புரிவது எனக்கு இயல்பாகவுளது; இதனைப் பொறுத்தல் வேண்டும் என வேண்டுவராய் “பொய்யகத் தேன் செய்யும் தீங்கு ஆயிரமும் பொறுத்தருளே” என முறையிடுகின்றார். தீங்கு குறித்து அது செய்தாரை ஒறுப்பது முறையேயன்றிப் பொறுப்பது நன்றன்றே; தீங்கு ஆயிரமும் பொறுத்தருள் என இறைவனிடம் முறையிடுவதும், இறைவன் பொறுப்பதும், அறவாழ்வில் சீர்மைக்கேடு செய்வதாக முடியுமே எனின், மானவுணர்வால் தீதுணர்ந்து வருந்திக் திருந்தும் இயல்புடையார் அது செய்யின் ஒறுத்துத் திருத்துவது அறப்பயன் விளைவிக்கும்; அஃது இல்லாரை ஒறுப்பது பயனில் செயலாதல் கண்டு பயனுள்ளனவே புரியும் பண்பினனாகிய இறைவன் பொறுப்பது புரிகின்றான். மலவிருளும் அறிவொளியும் கலந்திருப்பதால் மக்களுயுர்க்குக் குற்றம் புரிவது இயல்பாக இருக்கிறது; இது பற்றியே “குணம் நாடிக் குற்றமும் நாடுக எனவும்” “அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு” எனவும் திருவள்ளுவப் பெருமான் அறிவிக்கின்றார். இதனை நுணுகி நோக்கிய ஞானசம்பந்தர், ஞானக்கண் கொண்டு சிவனை நோக்கி, குற்றமே யில்லாதவன் அவன் ஒருவனே எனத் தெளிந்து, “குற்றம் இல்லாதார் குரை கடல் சூழ்ந்து கோணமாமலை யமர்ந்தாரை” என்றும், “குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்” (பிரம) என்றும் இன்மை வாய்பாட்டாற் குறிக்கின்றார். தம்பாலுள்ள குற்றம் உணர்ந்து நீக்கிக் கொண்ட பெரியோர்பால் நிறையும் குணத்தின்கண் ஒளிர்பவன் சிவன் என்பதையும் “குற்றமறுத்தார் குணத்திலுள்ளார்” (ஆவூர்) எனத் தெரிவிக்கின்றார். திருநாவுக்கரசர், கண்காண வாழும் மக்களிடையே, குணம் குற்றம் இரண்டும் கண்டு அவற்றுள் மிகை நாடி, குற்றம் மிக்கிருத்தல் கண்டு, “குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்” என அழைத்து, குற்றமிகுதியால் வரும் தீவினையை இறைவனருளால் போக்கிக் கொள்ளலாம் என்பாராய், “மற்றும் தீவினை உள்ளன மாய்க்கலாம், . . . . . .பூவனூர் ஈசன்பேர் கற்று வாழ்த்தும்” எனவுரைக்கின்றார், சுந்தரர், சிவன் திருவடியையே நினைந்தொழுகும் அடியவர் குற்றமறுத்து அஃதிலராகிய வழியும், உடலோடு கூடி உலகில் வாழ்வதால் அக்குற்றம் வந்து சுடும் நெறியுண்டு; அக்காலை இறைவன் அந்நெறியைக் கெடுத்தருளுவன் என்ற கருத்து விளங்கக் “குற்றமொன்று அடியார் இலரானால் கூடுமாறதனைக் கெடுப்பானை” என்று கூறுகின்றார். இம்மூவர் அருளுரைகளால் குற்றமேயில்லாதவன் சிவன் ஒருவனே; குற்றம் பெருகச் செய்யும் மக்கள் அதனை அறுப்பாராயின், அவர் பக்கல் துணையாய் நின்று குற்றம் மீளவும் உண்டாகாவண்ணம் காப்பன் என்றும், “பிழையுள்ளன பொறுத்தலும்” அப்பெருமான் இயல்பு என்றும் காண்கின்றார் வடலூர் வள்ளல். மணிவாசகப் பெருமானை நோக்குகிறார். “குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டி”, குற்றங்கள் உளவாவதற்குத் துணையாய் நிற்கும் சுற்றத்தின் தொடர்பறுத்து, மேலை மூவர் காட்டியவாறு காத்தருள்வன் என்ற கருத்தை, “சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான்” (திருவம்மா) என்றும், தனக்குவமையில்லாத் தனித்தலைவனாதலால் குற்றங்களையே குணமாகக் கொண்டாலும் அவற்குக் கெடுவது ஒன்றுமில்லை என்பது தோன்ற, “குன்றேயனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது. இரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே” (குழைத்) என்றும் கூறுவதோடு நில்லாது, பிழையைப் பொறுக்க வேண்டும் என்றற்குப் பெரியார்மேல் வைத்துப் “பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே” (நீத்தல்) என்று உரைப்பது நோக்குகிறார். குணங்களையே தாங்கும் உள்ளம் மாறாய குற்றத்தை எங்ஙனம் ஏற்கும் என்று வினாவுகின்றார். அப்பெருமானது திருவுள்ளம் பெருமைப் பண்புக்கு எல்லையாய் அமைவது; பெருமைக்குள் சிறுமை தருவன யாவையும் அடங்கும்; அதனால், அவர், “வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் பொறுப்பவனே” (அடைக்) என முறையிடுவது தெளிகின்றார். அப்பெருமக்கள் வழிநின்று ஞானம் வழங்கும் வள்ளற் பெருமான், யான் செய்யும் தீங்கு ஆயிரமாயினும் பொறுத்தருள்க என முறையிடுகின்றார். பிறிதோரிடத்தும், “குற்றம் புரிதல் எனக்கு இயல்பே; சிற்றம்பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாதுளதே” என செப்புகின்றார்.

     குற்றம் புரிதல் இயல்பாயின், அதனைச் சொல்லி முறையிடுவானேன் எனின், உயிர்க்கு உறவாவது குணம்; பகையாவது குற்றம்; குற்றம் குறைந்து குணமே மிகுதல் உயிர்க்கு உறவும் ஆக்கமும் அரணுமாம் எனத் தாயுமானார் கூறுகின்றார்; “குற்றம் குறையக் குணம் மேலிட அருளை உற்றவர் ஆவிக்கு உறவாம் பராபரமே”. அதனாலன்றோ அருள் ஒளி வள்ளலார் இவ்வாறு முறையிடுகின்றார் என உணர்க.

     (221)