222
222. உலக வாழ்வில் மகளிர்பாற் பெறலாகும் இன்பமயக்கில் வீழ்ந்து அவரை வழிபட்டுப் பின்செல்லும்
ஆடவர்களை வள்ளலார் காண்கின்றார். அவர்களை உயரிய ஆடைகளாலும் விலையுயர்ந்த மணிகளாலும் அழகுறுத்துவதில்
அவர்களது ஆர்வம் மிக்கிருக்கிறது. அம் மகளிரும், தமது உருநலமும் உடைநலமும் அணியழகுமாகிய
புறநலங்கள் ஆடவனது ஆசையை மிகுவித்து அறிவைக் கீழ்ப்படுத்துத் தம்மை அடிபணிந்து ஒழுகச் செய்கிறது
என்பதை இயல்பாகவே உணர்ந்துகொள்கிறார்கள். அடிபணிபவன் மீளா அடிமையாவதைத் தான் அடிமைகொள்பவர்
என்றும் கருதியிருப்பர். பொருளாலும் அதிகாரத்தாலும் பிறரை அடிமை நிலையில் வைத்துக் காண்பவன்
அதனை நிலைகுலையாமல் எண்ணியவண்ணம் இருப்பது உலகநடையின் பண்பு. சாதியின் வேற்றுமைகள் தமது நாட்டில்
தளர்வுறாமல் இருப்பதற்குக் காரணம், “தாம் உயர்ந்து தம்மையெல்லாம் தொழவேண்டும்” என்ற
கருத்தேயாகும்; அதிகாரத்தால் பொருளால் உயர்ந்தவராயினும் அவர் பெண்ணுருவின் பேரழகுக்கு அறிவிழந்து
பேதைமையுற்று அடிமையாவதைப் பெண்ணறிவு எளிதில் உணர்ந்து கொள்கிறது. ஆடவனை அந்நிலையில் நிறுத்தித்
தம்மை உயர்த்தும் கருவி தமது பெண்ணுடம்பில் பிறப்பொடு வராது,. பெதும்பைப் பருவத்தில்
அரும்பி, மலர் மொட்டுப்போல் வளரும் மார்புகளை அவற்றிற்குரிய கச்சணிந்து காட்சி மிகச் செய்வர்.
ஆடவனைப் புதுமைப்பித்தன் என்பர் சங்கச்சான்றோர். அப் பித்துமகளிர் மார்பின் புதுமையில்
ஈடுபடுத்தும்; அந்நிலையில் அவன் கண்கள் அவற்றையே நோக்கும், அங்ஙனம் கண்ட ஆடவன் “கடாஅக்
களிற்றின் மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்” என்று கருதுகிறான் எனத் திருவள்ளுவர்
கூறுகிறார்; சீதையைக் கன்னிமாடத் தும்பரில் இராமன் முதன்முதலாகக் கண்டபோது அவன் கண்கள்,
“வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும், தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே” என்று கம்பரும்
எடுத்துரைக்கின்றார். அதனால் மகளிர் தம்முடைய மார்புகளையும் அவற்றின் மேன்முற்றத்தையும் சந்தனக்
குழம்பு பூசி அதன் ஈரம் புலர வேங்கைப் பூவின் மகரந்தப் பொடியைக் காண்பார் கண்கவருமாறு அப்பி
அணி செய்வரென நக்கீரர் ( முருகு ) கூறுவர். மார்புகள் தம் கண்காண இருத்தலால் அவற்றை தாமே
அணிசெய்து கொள்வது; தலைக்கூந்தற்கு மலர்சூடி வனப்புறுத்துவது தமக்கு இனிது அமையாமையின், அதனைக்
காதலன் சூடுவதை மகளிர் பெரிதும் விரும்புவர்; அக்கூந்தலைத் தொட்டுப் பூச்சூடிப் பொலிவுறுத்துவதில்
ஆடவன் மிகவும் விருப்புறுகின்றான். அங்ஙனம் பூச்சூடியவனைக் கண்டவள் “இனிது செய்தனையால் நுந்தை
வாழியர் நன்மனை வதுவை அயர, இவள் பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே” ( ஐங். 294 ) என்று
கூறுகின்றாள். இவ்வாறு பூச்சூடுதல் மரபாதலைக் கண்ட திருவள்ளுவர், பூச்சூடப்பெற்ற தன் காதல்
மனைவி புலந்தது கூறலுற்று, “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய குடினீர் என்று” (1313) எனவுரைக்கின்றான் என்பர். ஆயிரம் ஆண்டுகட்குமுன் உயர்குடிச் செல்வர்,
மகளிரை ஒப்பனை செய்யும் திறத்தையும் ஒரு கலையாகக் கற்றறிருந்திருந்தனர் என்பது தோன்றத் திருத்தக்கத்தேவர்,
அனங்கமாலை யென்னும் ஆடல்மகளை ஒப்பனை செய்தற்குச் சீவகனை நடையறி புலவர் வருவித்தாரென்றும்,
அவனும் அவட்கு, “நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி, அலர்முலைக் குருதிச் சாந்தும்
ஆரமும் பூணும் சேர்த்துக் குலவிய குருதிப் பட்டிற் கலைநலம் கொளுத்தியிட்டான்” (சீவக. 673)
என்றும் கூறுவதால் அறிகின்றோம். இவற்றை நூல்முகத்தாலும் காட்சி வகையாலும் கண்டமையின் வடலூர்
வள்ளல், இங்ஙனம் மகளிர் மார்புக்கும் தலைக்கும் தாமே அணிசெய்து மகிழும் ஆடவர் செயலை எண்ணுகிறார்.
அவ் வாடவர் அம்மகளிரைப் பாராட்டும் வாயால் இறைவனைப் பாராட்டாமை அடிகளார் உள்ளத்தை
அலைக்கின்றது. அழகு செய்வதும் செயப்படுவதுமாகிய உடம்புகள் சின்னாளில் முதிர்ந்து இறக்குமே;
அக்காலை நமன் உயிரைக் கவர்வான் வருவானே; அப்போழ்து இவர்கள் அவற்கு என்ன சொல்வார்கள்
என்று எண்ணுகின்றார. அருள் வள்ளலாதலால் மனமுருகி வருந்துகிறார்.
2392. முலைக்கலங் கார மிடுமட
வார்மயல் மூடிஅவர்
தலைக்கலங் கார மலர்சூடு
வார்நின் றனைவழுத்தார்
இலைக்கலங் காரவ் வியமன்வந்
தாலென் இசைப்பர் வெள்ளி
மலைக்கலங் கார மணியேமுக்
கண்கொண்ட மாமருந்தே.
உரை: வெள்ளி மலைக்கு அணிசெய்யும் மணி போல்பவனே, முக்கண் கொண்ட மாமருந்தே, மடவாரது இன்ப மயக்கத்தால் அறிவிழந்த ஆடவர், அம்மகளிர் தலைக்கு அலங்காரமான மலர்சூடிப் பாராட்டுவதன்றி, நின் திருவடியை நினைந்து பரவுகின்றார் இல்லை; நாளை நமன் வந்து கேட்டால் என்ன சொல்லுவார்கள்; அவர்கள் கருத்தை நின் அருளறிவு தோன்றி மாற்றுவதன்றே வேண்டுவது. எ.று.
வெள்ளிமலைக்குச் சிறப்பு அதன் தன்மையினாலின்றி, சிவபெருமான் முடிக்கு அணிசெய்யும் மணிபோல் அதன்மேல் வீற்றிருப்பது என்பது விளங்க, “வெள்ளிமலைக்கு அலங்கார மணியே” என்று விளம்புகிறார். இருகண் கொண்ட மக்களால் தீர்க்க முடியாத பிறவிநோயை முக்கண் கொண்டு நீக்குவது பற்றி “முக்கண் கொண்ட மாமருந்து” என்று சிவனைச் சிறப்பிக்கின்றார். மார்புகளைச் சந்தனக் குழம்பு கொண்டு மருதிணர் போல் தோன்றுமாறு அணிகொள்ளத் திமிர்ந்து குங்குமம் கலந்து ஈரம் புலருமாறு வேங்கைப்பூவின் மகரந்தத்தை அப்பி அழகு திகழச் செய்வதுபற்றி, “முலைக்கலங்காரம் இடும் மடவார்” என்று கூறுகின்றார். “நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தாது” அப்புவர் என நக்கீரர் கூறுவது காண்க. இவ்வழக்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்வரை இருந்தமையைச் “சந்தனம் கலந்த குங்குமம் புனைந்தணிந்த கொள்கை” (634) என அருணகிரியார் கூறுவதால் அறிகின்றோம். மடவார் - இளமகளிர். அவர்பாற் பெறலாகும் காமக் களிமயக்கத்தை “மயல்” என்றும், அதனால் அறிவொளி குன்றுமாறு விளங்க, “மயல்மூடி” என்றும் விளக்குகிறார். காதலின்ப வேட்கையால் மகளிர் தலையிற் பூச்சூடி மகிழும் களியாட்டை மடவார் மயல்மூடி அவர் தலைக்கு அலங்கார மலர் சூடுவார்” என உரைக்கின்றார்; அருணகிரிநாதர், “நிலவினிலே திரிந்து வகைமலரே தெரிந்து நிறை குழல் மீதணிந்து. . . . . .வனிதையர்பால் மயங்கு கபடனையாள வுன்றன் அருள் கூராய்” (திருப்பு. 893) என்று கூறுவது காண்க. இலைக்கலங்கார் - இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்குதலும் இல்லாமைக்கு மனம் கலங்காதவர். இலை என்னும் வினைக்குறிப்பு பெயராய் இன்மைப் பொருளில் வந்தது. திருவருள் அறிவின்மையாற் பெரிதும் துன்புறுவராதலின் அருள் புரிக என முறையிடுகின்றார். (222)
|