223
223. விடியல் உறக்கத்தின் நீங்கிக் கண்ணைத் திறந்து நோக்கின் பகல் வரவும் பறவைகளின்
பாட்டரவமும் விலங்குகளின் விழிப்பொலியும் ஒருபுறம் கிளர்ந்தெழக் காண்கின்றோம். மக்களிடையே
அழைப்பொலியும் அங்குமிங்கும் சென்றலையும் காட்சியும் தோன்றுகின்றன. மக்களல்லாத பிறவுயிர்கட்கு
உண்டலும் உறங்குதலும் இனம் பெருக்கலு மொழிய வேறு தொழிலில்லை. மக்களினம் இவையேயன்றிச் செய்தனபோகச்
செய்யவேண்டுவன நினைதலும் அவற்றைச் செய்தற்குரியன நாடுதலும் செய்கின்றன. நாடியன கிடைத்தவழி
மகிழ்வதும், கிடைக்காமல் தடைப்பட்டவழிக் கலக்கமும் கையறவும் எய்தி வருந்துவதும் மக்கள்பால்
காணப்படுவன. எண்ணிய எண்ணியாங்கு எய்தாமையே உலக வாழ்க்கையின் பெருநிகழ்ச்சி. அதனால் உளதாகும்
துன்பமே பெரும்பயன். இதனால் அத்துன்பத்தை வெறுத்தல் இயல்பு. இப்போக்கு செய்யும் போராட்டமே
வாழ்வு. கருவி கரணங்களை அயர்ச்சி போக்குதறகுச் வண்மை யுறுவிப்பது இன்பம்; அதற்கு மாறாகத்
துன்பம் அவற்றின் வலியைக் கரைத்து நோய் விளைவிப்பது. அதனால் துன்பத்துக்கு அஞ்சி அதனைத்
தவிர்ப்பது நாடி மக்கள் காற்றாடிபோல் கறங்கிய வண்ணம் இருக்கின்றனர். அயர்வும் அவலமும் உள்ளத்திலும்
உடம்பிலும் தோன்றி அலைக்கழிக்கின்றன. உலையா முயற்சிகொண்டு அங்குமிங்கும் ஓடியாடித் திரிவது
எங்கும் எவர்பாலும் காட்சிதருகிறது. அறிதற்கும் தொழில் செய்தற்கும் எய்திய அழகிய அரிய
உடம்பெடுத்தது இங்ஙனம் அலைந்து திரிந்து அலக்கண் உறுதற்கா என நினைக்கும்போது, நெஞ்சு புண்படுகிறது;
அதுவன்றி வேறு வழியில்லை என்னும்போது நேர்ந்த புண்ணில் நெருப்பிடுவது போலத் துயர்
மிகுவிக்கிறது. அலைவது காணுங்கால் இகழ்ச்சி தோன்றி உள்ளத்தில் எழுச்சி தோன்றாவாறு ஈடழிக்கின்றது.
இதனால் இரக்கம் தோன்றி வள்ளலார் உள்ளத்தை உருக்குகிறது. உருக்கம் பாட்டுருக் கொள்கிறது.
2393. புரிகின்ற வீட்டகம் போந்தடி
பட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என்
பாவிச் சிறுபிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனலிடல்
போலெணுந் தோறுநெஞ்சம்
எரிகின்ற தென்செய்கு வேன்பிறை
வார்சடை என்னமுதே.
உரை: பிறை தங்கிய நீண்ட சடைமுடித்து என் போன்றோர்க்கு அமுதம்போல் இன்பம் தருபவனே, என் சிறு பிழைப்பு நாய்க்கும் சிரிப்புத் தருவதாம்; இதனை எண்ணும்போது புண்ணில் நெருப்பிடுவது போல நெஞ்சம் எரிந்து வருந்துகிறது; நான் என் செய்யவல்லேன்; நின் அருளன்றோ எல்லாம் செய்யவல்லது. எ.று.
நாளும் உருத்தேய்தலால் இடுக்கணுற்று வருந்திய பிறைத் திங்களைச் சடையில் தாங்கி அருளினமை நினைப்பித்தலால் சிவனை, “பிறவார் சடையுடை அமுதே” என்று கூறுகின்றார். அருட்செயல் நினைக்கும் உள்ளத்தில் இன்பம் நிறைவித்தலின் அமுதே என்றும், அதனைத் தாம் பெறற்கு உரிமை தோன்ற “என் அமுதே” என்றும் உரைக்கின்றார். வீட்டின் திறந்த வாயில் பொருளுண்மை காட்டி நாயின் மனத்தை வற்றுதலால், அது வீட்டின் உள்ளே புகுகிறது என்றற்குப் “புகுகின்ற வீட்டகம் போந்து” என்று புகல்கின்றார். திறந்த வாயிலையுடைய வீடு நாயின் மனத்தில் விழைவு தோற்றுவிப்பது என்றற்குப் “புரிகின்ற வீடு” என்றும், புகுந்தது காண்டலும் வீட்டின் உள்ளோர் அதனை அடித்து வெருட்டுவது தோன்ற “அகம் போந்து அடிபட்டு” என்றும், வீட்டின் உட்பகுதிக்கும் புறக்கடை அணித்தாதலின் அதன்வழி ஓடி வெளிப்பட்டுத் தெருவடையும் வழி தெரியாமல் திகைத்து அலமரும் அதன் செயலை நினைந்து “புறங்கடையில் திரிகின்ற நாய்” என்றும் தெரிவிக்கின்றார். இங்ஙனம், ஆசை வயப்பட்டு ஆகா இடம்புகுந்து அல்லற்படும் நாய். எங்கள் செயலைக் கண்டு என்னினும் வருவன முன்னுற வுணரும் நல்லறிவு படைத்த மக்களாகிய நீங்கள் என்னைப்போல் அலைந்து இடர்ப்படுகின்றீர்களே என்று நினைக்குமாயின் அதற்கும் நகைப்புத் தோன்றும் என்பாராய், “நாய்க்கும் சிரிப்பாம்” என்று இகழ்கின்றார். நாய்க்கும் என்றவிடத்து உம்மை எதிர்மறை. உயிரினத்துள் மக்களுயிர் ஒன்றுக்குத்தான் சிரிக்கும் தன்மை உண்டு என அறிக. தன் வாழ்வைச் சிறுநடை என்றும் சிறுவாழ்வு என்றும் குறிக்காமல், சிறுபிழைப்பு என்பதில் ஒரு குறிப்புண்டு. பிழைப்பு குற்றம் செய்தல்; நன்மை விளைவியாமல் குற்றமே விளைவிக்கும் வாழ்வு என்பது விளங்கச் “சிறுபிழைப்பு” என்று இயம்புகின்றார். சிறுபிழை என்றாற்போலச் சிறுமை இங்கே பிழைமேல் நிற்கவில்லை. அறிவின் சிறுமை காரணமாகச் செய்யப்படும் பிழை மலிந்த வாழ்வு என்று பொருள்படுமாறு “சிறுபிழைப்பு” என்று குறிக்கின்றார். இதனால் நான் பெற்றது பாவம் என்பார், பாவி என்று கூறுகிறார். பாவியாகிய என் சிறுபிழைப்பு பாவத்தைக் குறிக்காமல் மேன்மேலும் மிகுவித்து நோய் செய்கிறது; அதனால் மனம் புண்படுகிறது; அந்நிலையில் நாயும் சிரிக்கத் தக்கது இச் சிறுபிழைப்பு என்ற நினைவு எழும்போது, நெருப்பாய்ச் சுடுகிறது என்பாராய், “சிறுபிழைப்பை எண்ணுந்தோறும், சொரிகின்ற புண்ணில் கனல் இடல்போல் நெஞ்சம் எரிகின்றது” என்று எளிய இனிய சொற்களால் எடுத்துரைக்கின்றார். சிறுமை உயிர்க்கு மலமறைப்புக் காரணமாக உளதாவது; அதனைத் திருவருள் ஒளியின்றி வேறு என்னால் போக்கரிது என்றற்கு “என் செய்வேன்” என்றும், தேய்ந்து சிறுமை யுற்று வருந்திய பிறைத்திங்கட்கு அருளியது போல அருளல் வேண்டும் என்றற்குப் “பிறை வார் சடை என் அமுதே” என்றும் உரைக்கின்றார்.
இதனால் திருவருளல்லது எனக்கு வேறே பொருளில்லை என முறை யிடுவது பயன் என வுணர்க. (223)
|