224
224. சிவபெருமான் தன்னையே ஒருமை மனத்துடன் வேண்டி நிற்கும் தமது நிலையை விளக்கக்
கருதுகின்றார் வள்ளலார். மக்கட்குப் பொருட்குறை மனக்குறை என இருவகைக் குறைகள் உண்டாவது இயல்பு
பொருட்குறையைச் செல்வமுடையாரை அடைந்து நீக்கிக்கொள்வர். மனக்குறையை யறிந்து நீக்க வல்லவர்
சிவபெருமான், செல்வர்கள் செல்வத்தின்பால் உள்ள பற்றினால் பிறர் குறை நீக்குவதில் விருப்பமுறாமல்
அலைத்து வருத்துவர். அதனை நன்கு அறிந்தமையால் சிவனையே நினைந்து முறையிடுவது நெறியாகிறது. அதனால்
சிவபெருமான்பால் வள்ளலார் முறையிடுகின்றார்.
2394. மனக்கேத மாற்று மருந்தே
பொதுஒளிர் மாணிக்கமே
கனக்கே துறஎன் கருத்தறி
யாமல் கழறுகின்ற
தனக்கேளர் பாற்சென் றடியேன்
இதயம் தளர்வதெல்லாம்
நினக்கே தெரிந்த தெனக்கே
அருள நினைந்தருனே.
உரை: மன நினைவறிந்து துயர் போக்கும் மருந்தாய் உள்ள பெருமானே, அம்பலத்திலே விளங்குகின்ற மாணிக்கமே, மிக்க துன்பத்தால் வருந்தி வரும் என் கருத்தை அறிந்துகொள்ளாமல் மறுத்துரைக்கும் செல்வர்கள்பால் சென்று அடியேன் மனம் தளர்வது நீ நன்கு அறிந்தது; ஆதலால் என் கருத்தறிந்து அருள் புரிதற்குத் திருவுள்ளம் கொண்டருள்க. எ.று.
கேதம் - துன்பம். கனக்கேது - மிக்க துன்பம். கேதம் என்பது ஈறுகெட்டுக் கேது என வந்தது. மனக்கேதம், மனத்துக்கண் உண்டாகும் குறைபலவும் நோயாய்த் துன்பம் செய்தலின், சிவனை, “மனக்கேதம் மாற்றும் மருந்து” எனவுரைகின்றார். பொது - சபை. அம்பலத்தில் கூத்தாடும் பெருமாளை மாணிக்கக் கூத்தன் எனப் பாராட்டுவது வழக்கம். அக்கருத்தையே “பொதுவொளிர் மாணிக்கமே” எனக் கூறுகின்றார். தாம் பெற்ற செல்வத்தின்பால் பெருங்காதலுற்றிருத்தலின் செல்வரைத் “தனக்கேளர்” என்றும், அவர்கள் அது வேண்டித் தம்பால் வருவோர் மனம் நோய்மிகுமாறு வேறுவேறு கருத்துப் பட மொழிவது விளங்க, “கனக்கேதுற என் கருத்தறியாமல் கழறுகின்ற தனக்கேளர்” என்றும் உரைக்கின்றார். கழறுதல் - மறுத்துரைத்தல். தருவார்போல மொழிவதும், தாரார்போல நோக்குதலும், சுளித்து நோக்கலும், சுடு சொற் கூறலும் செய்து அலைத்து வருத்துவது புலப்பட, “அடியேன் இதயம் தளர்வதெல்லாம் நினக்கே தெரிந்தது” என்று இசைக்கின்றார். மனத்துறு நோயை இறைவனையல்லது பிறர் அறியாராகலின் “நினக்கே தெரிந்தது” என உரைத்து எனக்கு அருள் செய்க என முறையிடுகின்றார்.
இதனால், மனமறிந்து அருள் புரியும் வள்ளல் சிவபெருமான் எனத் தெரிவித்தருள்வது காணலாம். (224)
|