225
225. மக்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எல்லாநாளும் ஒருநாள் போல் கழிவதில்லை. செய்வது
ஒருவகைத் தொழிலே யாயினும், தொழிலின் செயற்பாடும் விளைபொருளும் பயனும் ஒருநிலையாக இருப்பதில்லை.
குறைவும் பெருக்கமும் தோன்றி முறையே மனத்துக்குத் தளர்ச்சியும் கிளர்ச்சியும் உண்டு பண்ணுகின்றன.
தொழிலின்றி உண்பதும் உறங்குவதுமே செயலாகவுடையவர் இளங்குழவியும் முத்துமிக முதிர்ந்தவரும்.
அவர்கட்கும் நாள்தோறும் நிலைமை மாறுகிறது. இளங்குழவிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளர்கின்றன. கல்வி பயிலும் இளைஞரிடத்தும் நாளும் இத்தகைய மாற்றங்கள் காணப்படுகின்றன.
ஒருநாள் காணப்படுகிற தெளிவு மறுநாள் இல்லை. கடிமனைக்கண் காதலன்பாற் பிணிப்புண்டு இன்புறும்
கணவன் மனைவியர் வாழ்விலும் ஊடலும் புலவியும் துனியும் தோன்றி ஒரு தன்மைத்தாய இன்பநுகர்ச்சி
கைகூடாவாறு செய்கின்றன. எவ்வகையாலேனும் கலக்கமும் மயக்கமும் தெளிவும் மாறெதிர்ந்து மாற்றம்
செய்கின்றன.
இம்மாற்றத்துக்குக்
காரணம் கணப்பொழுதும் நில்லாமல் மேலும் கீழுமாகச் சுழன்று கொண்டிருக்கும் குணதத்துவம் என்றும்,
இதுவும் ஆன்மதத்துவத்துக்கு மூலமாயுள்ள மாயையின் விளைவென்றும் கூறுவர். மாயையிடத்துள்ள விளக்கமும்
துளக்கமும் குணதத்துவமாய் விரியும் போது விளக்கம் சத்துவமென்றும், துளக்கம் இராசதமென்றும்,
இரண்டும் கலந்த மயக்கம் தமம் என்றும் நம் நாட்டுத் தத்துவ நூலோர் கூறுபவர். சத்துவகுணம் தெளிவும்
அமைதியும், இராசதம் துளக்கமும் சினமும் துடிப்பும் பதைப்பும் பயக்கும். தமம் என்பது இரண்டிற்கும்
இடைநின்று மயக்கமும் உறக்கமும் மடிமையும் விளைவிக்கும். இவற்றைச் சுருக்கிச் சத்துவம்
சுகவுணர்வையும், இராசதம் துக்கவுணர்வையும், தமம் மோகத்தையும் தோற்றுவிக்கும் என்பர். இக்கருத்துக்கள்
பலவும் மக்களிடையே பரவி, அவர்கள் நினைவில் பயிலவிடாது கற்றோர் நூலளவிலே நிறுத்திக் கொண்டனர்.
கல்வியறிவு செயலிற் பாய்ந்து தெளிவெய்த வேண்டும் என்ற கருத்து கல்வியாளர்க்கு இல்லாது
போயிற்று. அதனால் நாட்டில் மக்களிடையே சிந்திக்கும் திறம் பெரிதும் குன்றிவிட்டது. “ஏனோ
இன்று எனக்கு மனம் தெளிவாயில்லை” என்று பலர் சொல்லக் கேட்கிறோம். அவ்வாறு இருப்பது நன்றன்றே.
இதற்குக் காரணம் யாது? என எண்ணிக் காணும் பண்பு பெரும்பாலரிடத்துக் காணப்படவில்லை. பலரும்
தமக்காகப் பிறரைச் சிந்திக்கச்செய்து அதற்குப் பொன்னும் பொருளும் தந்து ஏழையாகின்றார்கள்.
வடலூர் வள்ளல்
மனம் தெளிவின்றியிருப்பது காண்கின்றார்; துக்கமா மோகமா எனச் சிந்தித்து மோகம் (மயக்கம்)
என உணர்கின்றார். உலகியலில் வேண்டுவனபற்றி மனத்தில் அலையலையாக எண்ணங்கள் எழுகின்றன;
அவற்றைச் செயற்படுத்தும் திறங்கள் காணப்படுகின்றன; செயலிற் பிழைகள் புகுகின்றன; எண்ணியது
எண்ணியாங்கு எய்தாதொழிகிறது; ஏமாற்றம் உண்டாகிறது. மனம் மயக்கம் கொள்கிறது. காலம் நெடிது
பயனின்றிக் கழிகிறது. செய்வினை சிதைகிறது. அதன் வழியாகத் துயரமும் துன்பமும் சூழ்கின்றன.
மோகத்துக் கிரையாகிய மனத்தை மீட்டு இறைவன் திருவடியைச் சிந்திப்பதில் செல்லவிடுகிறார்;
அங்கே மனத்துக்கு எண்ணங்களால் அலைக்கப்படும் வாய்ப்பில்லை; ஏமாற்றமில்லை; துயரம் தோன்ற
இடமில்லை; திருவடி நினைவிற் பிறக்கும் இன்பமே நுகரப்படுகிறது. திருவடிகள், “சிந்திப்பவர்க்குச்
சிறந்த செந்தேன் முந்திப் பொழிவன” எனத் திருநாவுக்கரசர் கூறுகிறாரன்றோ? இந்த நாள் சிறந்த
நாள் என்று தெளிந்து காணும் வள்ளலார், இந்நாளே எனக்கு எந்நாளுமாக அருளுக என இறைவனிடம் முறையிடுகின்றார்.
2395. மோகங் கலந்த மனத்தேன்
துயரங்கள் முற்றுமற்றுத்
தேகங் கலந்த பவந்தீர்க்கும்
நின்பதம் சிந்திக்கும்நாள்
போகங் கலந்த திருநாள்
மலையற் புதப்பசுந்தேன்
பாகங் கலந்தசெம் பாலே
நுதற்கட் பரஞ்சுடரே.
உரை: மலையிடத்து அரிதிற் பெறப்படும் பசுந்தேன் அளிவிற் கலந்த செம்பால் போலும் சிவபெருமானே, நெற்றியிற் கண்ணுடைய பரஞ்சுடரே, மோகம் கலந்த மனமுடைய னாயினமையின் துயரங்கள் மிகுந்து துன்புற்றேன்; அவை முற்றும் அறுத்துப் பிறப்பறுக்கும் நின் திருவடி சிந்திக்கும் நாள் எனக்கு எல்லா இன்பங்களும் எய்திய திருநாளாகும்; எந்நாளும் அந்த நன்னாளாக அருள் புரிக. எ.று.
மலையுச்சிகளில் மக்கள் சென்று கொள்ள இயலாத கொடுமுடியிற் கட்டப்பட்ட புதிய பசுந்தேன் என்றற்கு “மலை அற்புதப் பசுந்தேன்” என்றும், பால் அளவிற்கு மிகுதி குறைவின்றிச் செவ்வே தேன்கலந்த பால் என்றற்குப் “பசுந்தேன் பாகம் கலந்த செம்பாலே” என்றும் சிவபெருமானைக் கூறுகின்றார். நெற்றியிற் கண்ணும் ஞானவொளியும் அப்பெருமான்பால் உள்ளமையின் “நுதற்கண் பரஞ்சுடரே” என்று உரைக்கின்றார். தம் உள்ளத்தில் துயரம் படிந்து மனத்தில் கிளர்ச்சியின்றி மயக்கம் தோய்ந்திருப்பதை உணர்ந்துரைக்கின்றாராரதலால் “மோகம் கலந்த மனத்தேன்” என்று சொல்லுகிறார். மோகம் தமோகுணத்தின் செயல். துயரத்தைப் பற்றறப் போக்கிப் பிறவாப் பெருநலம் தருவது சிவன் திருவடி என்பதுபற்றி, துயரங்கள் முற்றும் அறுத்துப் பவம்தீர்க்கும் நின் பதம் என்று சிறப்பிக்கின்றார். பிறப்பென்பது உயிர் உடம்பொடு கூடி உலகில் தோன்றுவது என விளக்குதற்குத் “தேகம் கலந்த பவம்” என்று கூறுகிறார். ஏனை உலிகியற் பொருள்களைச் சிந்திக்கும் நாள் பலவும் கலக்கமும் மயக்கமும் பயந்து அலக்கண் உறுவிக்கும் நாளாதல் காணப்படுதலால், “நின்பதம் சிந்திக்கும் நாள் போகம் கலந்த திருநாள்” என்று புகழ்கின்றார். உலகியற் போகங்களை நல்கும் நாள் நல்லநாள் என வழங்கப்படுவதால் சிவபோகம் நல்கும் நல்ல நாளைத் திருநாள் என்று கூறுகின்றார். இதனால் எனக்கு உள்ள நாட்கள் யாவும் சிவபோகம் கலந்த திருநாட்களாக அருளல் வேண்டுமென முறையிடுவது காணலாம். (225)
|