226
226. சேரமான் பெருமானது அரச வாழ்வில் அடிகளார் திருவுள்ளம் தோய்கிறது. “நீடும் உரிமைப் பேரரசால்
நிகழும் பயனும் நிறைவதமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைச் சிற்றம்பலத்துள் ஆடும்
கழலே எனத் தெளிந்த அறிவால்” சேரமான் சிறப்பது காண்கின்றார். அவர் தோழரான நம்பியாரூரர்,
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் என்க்குன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருவரை மதியாது
உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்” (வடமுல்லை.1) என்றதும் அடிகளார்க்கு நினைவில்
தோன்றி இன்பம் செய்கிறது. சிந்தனை இறைவன் திருவருளின் பெருமையைக் காட்டி அரசவாழ்விலும் மேலாயது
அருள் வாழ்வு என்பதைப் புலப்படுத்துகிறது. ஆர்வம் பெருகுகிறது.
2396. கோலென்றும் கண்ட இறைமகன்
வாழ்வினும் கோடிபங்கு
மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன்
சொல்லை விரும்பினியஞ்
சேலொன்று கண்ட மணியான்
வரைப்பசுந் தேன்கலந்த
பாலொன்று கண்டகண் கொண்டுயர்
வாழ்வு பலித்ததுவே.
உரை: நெஞ்சமே, செங்கோல் ஏந்திய அரசகுமரன் பெற்று மகிழும் அரச வாழ்விலும் கோடிபங்கு வாழ்வொன்று கண்டு கொண்டோம்; நான் சொல்லும் இச்சொல்லை ஐயுறாமல் விரும்புக; நீலமணி போலும் கண்டத்தையுடைய சிவபெருமான் எழுந்தருளும் மலையிடத்துப் பெறும் பசுந்தேன் கலந்த திருவருளாகிய பாலைக்கண்ட கண்களைக் கொண்டு இனி ஒன்றினையும் கண்டு அஞ்சவேண்டா; நமக்கு உயர்ந்த அருள்வாழ்வு வந்துவிட்டது காண். எ.று.
அரசன் புரியும் நீதிமுறையை வளைவு நெளிவில்லாத நேரிய கோல் என்றும், செங்கோல் என்றும் சொல்வது மரபு. அதனால் அரசனைக் “கோல் ஒன்று கண்ட இறைமகன்” என்று கூறுகின்றார். “வளம் தலை மயங்கிய வஞ்சி முற்றத்து இறைமகன்” (சிலப். 25;34-5) என இளங்கோவடிகள் கூறுவது காண்க. எல்லாவற்றினும் உயர்ந்த அருள் வாழ்வை இறுதியிற் கூறுதலால், எடுத்த எடுப்பில் கேட்போர் நெஞ்சில் அவா எழுதற் பொருட்டு “இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு மேல் ஒன்று கண்டனம்” என்று உரைக்கின்றார். உலகில் பெறும் பேறுகளில் அரச செல்வத்தினும் வேறு உயர்ந்த பேறு இல்லாமையால் நெஞ்சு ஐயமுற்று அலமருவது இயல்பாதலால் அஃது அவர் சொல்லை ஏலாது என்று எண்ணி, “என் சொல்லை விரும்பு” எனத் தெளிவிக்கின்றார். ஒன்று என்றவிடத்து முற்றும்மை தொக்கி நிற்கிறது. மணி போன்ற கண்டத்தை (கழுத்தை) யுடையவன் என்பது “கண்டமணியான்” என வந்தது. மணிகண்டன் என்பது சிவன் திருப்பெயர்களில் ஒன்று. “மாறிலா மணிகண்டா” (திருமாற்பேறு) என்று ஞானசம்பந்தரும், “மணிசெய் கண்டத்து மான்மறிக்கையினான்” (பொது - குறுந்) என்று நாவுக்கரசரும் கூறுவது காண்க. தேன் கலந்த பாலைக் கண்டதும் பருக நினைப்பதன்றி வேறுபட நினைந்து அஞ்சுவது கூடாது என்றற்கு “வரைப்பசுந்தேன் கலந்த பால் கண்ட கண்கொண்டு இனி ஒன்றும் அஞ்சேல்” என்று இயம்புகின்றார். தேன் கலந்த பால்போல் கண்கொண்டு கண்டமாத்திரையே நுகர்வது செயற்பாலதே யன்றிப் பருகலாமோ ஆகாதோ என அஞ்சி அலமராமல், மேலாய திருவருள் வாழ்வு கைவந்ததெனக் கருதி மேற்கோடல் வேண்டும் என்பது கருத்து. காட்சிக்குத் தெளிவும் கருத்துக்கு இனிமையும் தருவது திருவருள் வாழ்வாகிய, உயர் வாழ்வு என்றற்குத் தேன் கலந்த பாலை உவமம் செய்கின்றார். எல்லாவற்றிலும் மேலாய வாழ்வாதல் விளங்கத் திருவருள் வாழ்வை, “உயர்வு வாழ்வு - பலித்ததுவே” எனப் பாராட்டுகின்றார். “அருளிற் பெரியது அகிலத்து வேண்டும் பொருளில் தலை இல்லதுபோல்” என்று திருவருட் பயன் உரைப்பது காண்க. அரசவாழ்வு இளமைக்கண் இன்பமாய் முதுமைக்கண் துன்பமும் துவர்ப்பும் பயந்து நிலையின்றிக் கெடுவது பற்றி, அருள் வாழ்வு அரசு வாழ்விலும் கோடி பங்கு மேல் என அறுதியிட்டுரைக்கின்றார்.
இதனால் அரச வாழ்விலும் அருள்வாழ்வு மேலாயது என்பது பயன். (226)
|