227

      227. மலர்ந்த முகமும் மகிழ்ந்த உள்ளமும் சிறந்த செயலும் உடையார் சிலரைத் தான் உலகில் காணமுடிகிறது. மிகப் பலர் துளங்கிய நெஞ்சும் சோர்ந்த மேனியும் குழிந்த கண்ணும் தளர்ந்த நடையும் கலங்கிய பார்வையு முடையராய்க் காட்சி தருகின்றனர். அவர்கள் மனம் கவலையாகிய புழுவால் அரிப்புண்டு அவலமும், அழுங்கலும் மிகுந்துளது. துன்பமும் இன்பமும் இரவும் பகலும் போல மாறிமாறி வருவன; ஆதலால் சிறிதுபோதிற் கழிந்து மாறும் இவற்றால் கையறவு கொள்வது தகவன்றெனின்; துன்பமும் துயரமும் சிறிய என்றும் விரைந்து கழிவன என்றும் எண்ணுவதும் எடுத்துரைப்பதும் உண்மையல்ல; அவை மலையினும் மாணப் பெரியன; நிலத்தினும் விரிந்தன; வானினும் உயர்ந்தன; கடலினும் ஆழ்ந்தன என உரைத்து வருந்துகின்றனர். எய்தி வருந்தும் துன்பங்களையும் எடுத்தும் தொடுத்தும் அடுக்கியும் இசைக்கும்போது கருங்கன் மனமும் கசிந்துருகுகிறது; தொடுமணற் கேணிபோலக் கண்கள் நீர் சுரந்து சொறிகின்றன; மெய் விதிர்ப்பு எய்துகிறது. இத்தகைய காட்சியாலும் உரையாலும் கையறவும் கவலையும் மிகுகின்ற வடலூர் வள்ளல் மன்றிலாடும் கூத்தப்பிரானிடம் முறையிடுகின்றார்.

 

2397.

     புலையள வோஎனும் நெஞ்சக
          னேன்துயர்ப் போகமெட்டு
     மலையளவோ இந்த மண்ணள
          வோவந்த வானளவோ
     அலையன வோஎன்று மன்றுணின்
          றோங்கும் அருமருந்தே
     இலையென வோஎனுந் தேவே
          அறிந்தும் இரங்கிலையே.

உரை:

     அம்பலத்தில் நின்று திகழ்ந்தோங்கும் இறைவனே, எய்தும் மனநோய்க்கு மாமருந்தாகுபவனே, பெருமைக்கு அளவில்லவன் எனப்படும் பெருமானே, இழிந்த எண்ணங்களால் கீழ்மைப்பட்ட நெஞ்சினையுடைய யான் கூறும் துன்பமாகிய போகங்களை நோக்கின், புராணங்கள் கூறும் குலமலைகள் எட்டும் நிகராகா; பரந்த இந்நில வெல்லையும் ஓர் அளவாகாது; மேலே தோன்றும் வானவெளியும் ஒப்பாகாது; நிலம் சூழ்ந்த கடலேழும் சம்மாகுமோ எனின் ஆகாது காண். எ.று.

     தாழ்ந்த எண்ணங்களாய்ச் சிறுகிய பார்வையுடைய நெஞ்சம் உடைமைப் புலப்பட “புளையளவேயெனும் நெஞ்சகனேன்” என மொழிகின்றார். கூவலாமைக்கும் குரைகடலாமைக்கும் உள்ள மனவேறுபாடு போல உயர்ந்தோர் மனவிரிவின்றிச் சிறுதொழில் புரியும் புலையன் மனநிலையுடையேன் என்பது கருத்து. துன்பமும் இன்பமும் போல நுகரப் படும் போகவகையாதலால் துயர்ப் போகம் என்று குறிக்கின்றார். சிறியேனுடைய மனச்சிறுமைக்கேற்ப எய்திவரும் துன்பம், அதன் கண்ணுக்கே மலைகளிலும் பெரியவாய், கடலேழினும் ஆழமாய், நிலத்தினும் அகன்றவாய், வானினும் உயர்ந்தனவாய் இருக்குமாயின், உயர்ந்தோருடைய பெரிய மனத்தின் விரிந்த பார்வைக்கு இத்துன்பங்கள் அளவின்றிப் பெருகித் தோன்றும் என்பது விளங்க, இவ்வாறு கூறுகின்றார். கூறுமிடத்து துன்பத்தின் பெருமை அளவிறந்து தோன்றும் எனக் கூறக் கருதவும், அளவின் எல்லை கடந்து விளங்குபவன் இறைவன் என்ற நினைவு எழுகிறது. துன்பமும் அவன்போல அளவிறந்தது என்றல், பரம்பொருளோடு ஒப்ப நிறுத்தம் குற்றமாதல் தெளிந்து “வானளவோ அலையளவோ” என மொழிகின்றார். அலை - அலைகளையுடைய கடல். இக் கடல்கள் ஏழு எனப் புராணிகர் புகல்வர். அளவை வகை அனைத்தையும் கடந்தவன் என்பதனால் “இலை அளவோ எனும் தேவே” எனச் செப்புகின்றார். மணிவாசகனார், “அளவறுப்பதற் கரியவன்” எனவுரைப்பது காண்க. மன்று - திருக்கூத்தாடும் அம்பலம். உயர் பொருள் யாவும் விரைந்து ஆடுங்கால் சிறுத்துத் தோன்றுவது உலகியலிற் காணப்படும்; ஆனால் பரமன் அம்பலத்துள் நின்று ஆடுங்கால் மேன்மேலும் ஓங்கி உயர்ந்து தோன்றும் மாண்பினன் என்றற்கு “மன்றுள் நின்று ஓங்கும் அருமருந்தே” எனப் புகழ்ந்து பாராட்டுகின்றார். ஆடரங்குகளில் ஆடுங்கால் கூத்தருடைய முதுமையும் உயரமும் குன்றி இளையரும் சிறியருமாய்த் தோன்றுவதை நினைவு கூர்க. அரங்கிலாடும் கூத்தரது கூத்துக் காண்பார்க்குப் பொருட்கேடும் நோயும் செய்வது போலாது இறைவனது அருட்கூத்து காணும் ஞானக் கண்ணுடையார்க்கு ஆக்கமும் பேரின்பமும் தருதலின் “அருமருந்தே” என அறிவுறுத்துகிறார்.

     புலையனவாய் நிற்கும் நெஞ்சால் வருந்துன்பம் உலகியல் அளவைக்கு இறந்ததாயினும், எத்தகைய அளவைக்கும் அகப்படாத அருமருந்தாகிய நீ போக்கியருள்க என்பது இத் திருப்பாட்டின் பயன்.

     (227)