228

      228. பெண்ணின்பத்துக்கு அறிவைப் பறிகொடுத்து எளியராகியோர் பலரை வள்ளலார் காண்கின்றார். மகளிர் உறுப்பு நலன்களைப் புகழ்ந்துரைமின் என்று விரும்பியொருவர் கேட்டால், கேட்டு முடிப்பதற்குள் பாவலர் கவி பாடத் தொடங்குகிறார்கள்; மகளிர் மார்புகளை விதந்து கல்லென்றும் வல்லென்றும் சொல்லெடுத்துக் கொடுத்தால் பெருமழையால் இழும் என இழிதரும் அருவிபோலக் கவிகளைப் பொழிகின்றனர். அவர் மனம் அப் பொருட்கண் ஒருமையுற்று ஊன்றி நின்று உருகுவதை நோக்குகின்றார். மனத்தை மாற்றி இறைவன் திருவடிக்கண் “ஒன்றியிருந்து நினைமின், ஊனமில்லை”யென்றால், அவர்கள், அதற்கு ஒருப்படுகின்றார்கள் இல்லை; வருந்துகிறார்கள். அவர்கள் செயலைத் தம்மேல் ஏற்றி வள்ளலார் சிவன்பால் முறையிடுகின்றார் :

2398.

     கல்லென்று வல்லென்று மின்னார்
          புளகக் கனதனத்தைச்
     சொல்லென்று சொலுமுன் சொல்லுமந்
          தோநின் துணையடிக்கண்
     நில்லென்று பல்ல நிகழ்த்தினும்
          என்மனம் நிற்பதன்றோ
     அல்லென்று வெல்களங் கொண்டோயென்
          செய்வ தறிந்திலனே.

உரை:

     இருளெனக் கறுக்க நஞ்சுண்டு அதன் கொல்லுந் தன்மையை வென்ற கழுத்தையுடைய பெருமானே, காமுகர் போந்து மகளிர் மார்புகளைக் கல் என்றும், சூதாடு கருவி போல்வதன்றும் சொல்லெடுத்துத் தந்து பாடுமின் என்று சொன்னால், அவர் சொல்லி முடிக்குமுன்னே, கவி பல பாடி முடிக்கின்றது கவிஞர் மனம்; அந்தோ, அம் மனத்தை நின் திருவடிக்கண் நிலைத்து நில் என்று பல வேறு வகையிற் சொல்லி வற்புறுத்தினும் நிற்கின்றிலது; இதற்குச் செய்வது ஒன்றும் அறிகிலேன் எ.று.

     கல் - கற்குன்று. வல் - சூதாடுகருவி. மின்னார் - மின்போல் சிறுத்து நுடங்கும் இடையையுடைய இளமகளிர். கனதனம் - பருத்தமார்பு. சொல்லும் - கவி புனைந்து சொல்லும். பலவற்றைப் பல முறையும் பல வேறு வகையிற் சொல்லி வற்புறுத்தினாலும் என்ற கருத்துப்பட “பல்ல நிகழ்த்தினும்” என உரைக்கின்றார். அல் - இருள். ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்வது பற்றி “வெல்களம்” என்று பாராட்டுகின்றார். சிவன் நஞ்சுண்டு கண்ட வெற்றியை, “பாரோடும் விண்ணவர்கள் பரந்தோடப் புரந்தரனார் பதிவிட்டோடத், தேரோடும் கதிரோட மதியோட விதியோடத் திருமால் மேனி காரோடத் தொடர்ந்தோடும் கடல் விடத்தைப் பரமன் உண்டு” காத்தான் என்று திரிக்கூடராசப்பக் கவிராயர் பாடுவது காண்க. நின் திருவடி ஞானம் எய்தினாலன்றி உய்தியில்லை என்பது குறிப்பாராய், “என் செய்வதறிந்திலேனே” என்று உரைக்கின்றார்.

     (228)