231
231. தமது இதயக் கருத்து இதுவென எடுத்துரையாவிடினும் தானே அறிந்த நிறைவு செய்யும் தக்கோன்
சிவபெருமான் என உரைத்த வள்ளற்பெருமான் தமது உள்ளத்தில் இருக்கும் விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்.
திருவெற்றியூரை யடைந்து அங்கே கோயில் கொள்ளும் சிவபிரானை நாளும் பணித்தேத்த வேண்டும் என்றோர்
வேட்கை அவரை வருத்துகிறது. அதனைப் பாடிக் காட்டுகின்றார்.
2401. மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை
யேநின் மலரடிக்குத்
துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில்
சேர்ந்துநின் தூயஒற்றிப்
பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி
உள்ளம் பரவசமாக்
கசிக்கண்ணி வாழும் படிஅரு
ளாயென் கருத்திதுவே.
உரை: பிறைத் திங்கள் தலைமலையாகச் சூடும் சடையையுடைய பெருந்தகைப் பெருமானே, நின் மலர் போலும் திருவடிகளில் துதிபாடும் சொல்மாலை சூட்டும் மெய்யடியார்களோடு சேர்ந்து, நினக்குரிய தூய திருவொற்றி நகரையடைந்து நின்னைப் பணிந்து ஏத்தி மனம் பரவசமாகப் பெற்று, அதுவாயிலாகச் சிவகதிக்கு உரியனாம் வாழ்வு பெறுதல் வேண்டும் என்பது என் கருத்து; இதனை அடியேனுக்கு அருளுக. எ.று
கண்ணி - தலையிற் சூடும் மாலை; பிறைத் திங்கள் அதுபோலிருப்பது பற்றி, “மதிக் கண்ணி வேணிப் பெருந்தகையே” எனப் புகழ்கின்றார். துதிக்கண்ணி - துதிப்பாட்டுக்களாகிய சொல்மாலை. மெய்த்தொண்டர்; திருநாவுக்கரசர். ஞானசம்பந்தர், சுந்தரர், மணிவாசகப் பெருமான், பட்டினத்தடிகள் முதலியோரை மெய்த்தொண்டர் எனப் பாராட்டுகின்றார். அப்பெருமக்கள் இனத்தில் தாமும் சேர்ந்து பாடற்கு விரும்பும் வேட்கையை “ஒற்றிப்பதிக்கு அண்ணி நின்னைப் பணிந்து ஏத்தி வாழும் படி அருளாய்” என உரைக்கின்றார். அண்ணி - அடைந்து; அது தூய நகரம் என்றும், அதனை அடைந்து பணிந்தேத்தல் நலம் என்பதும் விளங்க, “தூய ஒற்றிப் பதிக் கண்ணி” என்றும், பணிந்து ஏத்துங்கால் உள்ளத்தே இன்பம் சுரந்து மகிழ்வித்தலின் பரவசம் ஆகிறது என்றும், அந்நிலை சிவகதிப் பேற்றுக்குரிய நினைவு தந்து அதனையே எண்ணி வாழும் நல்வாழ்வாதலின், “கதிக் கண்ணி வாழும்படி” என்றும் கூறுகின்றார், என் கருத்து இதுவே என்பது வன்புறை.
இதனால் வள்ளற்பெருமான் ஒற்றிப் பதிக்கண் இருந்து சிவபிரானைப் பாடிப் பணிந்து இன்புறுதலின் எத்துணை ஆர்வமுடையவராயிருக்கின்றார் என்பது தெளிவாகிறது. (231)
|