2405.

     கல்லேன் மனக்கருங் கல்லேன்
          சிறிதும் கருத்தறியாப்
     பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன்
          இரக்கம் பொறைசிறிதும்
     இல்லேன் எனினும்நின் பால்அன்றி
          மற்றை இடத்தில்சற்றும்
     செல்லேன் வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனாகிய தேவர் சிகாமணியே, கற்பதற்குரிய நூல்களைக் கல்லாதவனாயும், கல் போன்ற மனமுடையனாயும், உயர்ந்த கருத்குக்களின் நலங்களைச் சிறிதும் அறியாத பொல்லாதவனாயும், பொய்யையே விரும்புகின்ற புல்லறிவாளனாயும், பொறுமை சிறிதும் இல்லாதவனாயு முள்ளேன் என்றாலும், நின்னிடத்தன்றி வேறே எவரிடத்தும் ஒரு பயன் நினைந்து செல்வது இல்லாதவன்; ஆதலால் எனக்கு அருளை நல்குக. எ.று.

     கற்பவர் கற்றற்குரியன எனச் சான்றோர் வகுத்த நன்னூல்களை யான் கற்கவில்லை யென்பார், “கல்லேன்” என வுரைக்கின்றார். இயற்கை யாகவுள்ள அறிவு, செயற்கையாகப் பெறும் கல்வியறிவால் செம்மையெய்துவதுபற்றி, அதனைப் பெறாமையைக் “கல்லேன்” என்று குறிக்கிறார். உலகிற் பிறந்தவர் பொறி புலன்களாற் பெறும் அறிவு இயற்கையாகும். இயற்கையாலும் செயற்கையாலும் உளதாகும் அறிவும் உயிருணர்வாகிய உண்மையறிவும் அமைந்தவரையே அறிவர் என வுலகோர் பாராட்டுவர் என அறிக. கல்வியறிவுடையோர்க்கு எவ்வுயிர்க்கும் இரங்கும் இனிய பண்பு இயல்பாக வுண்டாகும்; யான் அது பெறாமையால் கல்போல் வலிய மனமுடையவனாயினேன் என்பார், “மனக்கருங்கல்லேன்” என வுரைக்கின்றார். கருங்கல் - வன்மையான கல்; கரிய நிறம் கொண்டிருப்பதால் வன்கல்லைக் கருங்கல் என்கின்றார். உயர்ந்த நூற் கருத்துக்களையும், மக்களின் உள்ளக் குறிப்புகளையும் உணர்ந்தொழுகுவது உண்மையறிவின் பயனாதலால், அஃது இல்லையெனின் தீது புரிந்து குற்றப்படும் நிலைமையுண்டாதலால், “சிறிதும் கருத்தறியாப் பொல்லேன்” எனப் புகல்கின்றார். பொல்லேன் - பொல்லாத குற்றங்கைச் செய்கிறவன். இக் குறைபாட்டால் மெய்ம்மைத் தன்மையை நோக்காமல் பொய்ந்நினைவையும் சொல்லையும் செயலையும் உடையனாய் அப்பொய்யையே விரும்புகிறவனாயினேன் என்றற்குப் “பொய் வாஞ்சித்த புல்லேன்” என்று புகல்கின்றார். வாஞ்சித்தல் - விரும்புதல்; அன்பு செய்தலுமாம். புல்லன் - சிற்றறிவுடையவன். எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையனாதலும், யாதானும் ஒரு காரணத்தாலோ அறியாமையாலோ ஒருவர் தமக்கு மிக்கது செய்வாராயின் அவர்மேல் வெறுப்போ வெகுளியோ கொள்ளாமற் பொறுப்பதும் பொறையாகும். இவ்விரண்டும் என்னிடம் சிறிதும் இல்லை என்று சொல்லுகிறவர், “இரக்கம் பொறை சிறிதும் இல்லேன்” என்றும், இத்தனை குறைகளை யுடையவனாயினும், தேவர் சிகாமணியாகிய உன்னிடத்தன்றி வேறே எவரிடத்தும் விரும்பிச் செல்லுதல் இல்லாதவன்; ஆதலால், இது கருதியேனும் எனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டலுற்று, “எனினும் நின்பாலன்றி மற்றையிடத்தில் சற்றும் செல்லேன்” என வுரைக்கின்றார். 'அருள் செய்க' என்பது குறிப்பெச்சம்.

     இதனால் பல குறை யுடையேனாயினும் நின்னையன்றிப் பிறரை நாடிப் போகேன் என விளம்பியவாறாம்.

     (3)