2406.

     ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய்
          தாய்நின் அடிக்கன்பின்றி
     வேர்ப்பார் தமக்கும் விருந்தளித்
          தாய்வெள்ளி வெற்பெடுத்த
     கார்ப்பாள னுக்கும் கருணைசெய்
          தாய்கடை யேன்துயரும்
     தீர்ப்பாய் வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புள்ளிருக்கு வேளூர் வயித்தியநாதப் பெருமானே, தேவர்கட்குச் சிகாமணி யானவனே, ஆரவாரம் பொருந்திய கடலிற் பிறந்த விடத்தை உண்டருளினாய்; உன் திருவடிக்கன்பின்றி வெகுண்டு வேறுபடுவோர்க்கும் புது நலம் அளித்தாய்; வெள்ளி மலையை எடுத்த கரிய நிறத்தவனாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தாய்; ஆதலால் கீழ்ப்பட்டவனாகிய எனக்கும் அருள்கொண்டு யான் படும் துன்பத்தைப் போக்கியருள்க. எ.று.

     ஆர்ப்பு - ஆரவாரம்; பெருமுழக்கமுமாம்; அமரர் அமுதுண்ணும் பொருட்டுக் கடல் நஞ்சினைச் சிவன் உண்டருளிய செய்தியைக் குறித்துரைக்கின்றா ராதலால், “கடல் நஞ்சு அமுது செய்தாய்” எனவுரைக்கின்றார். வேர்ப்பார், தக்கன், திரிபுரத்தசுரர் தலைவர்களான விரத்தன், பரமயோகன், குணபரன் எனப் புராணங்கள் கூறுகின்றன. விரத்தன் முதலிய மூவரை உபதேசகாண்டம் என்ற நூல் கூறுகிறது. வெகுண்டு நின்ற திரிபுரத்தசுரர் அருள் செய்யப் பெற்றதை, “ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை யுன்னிய மூவர் நின் சரணம் புக்கு மற்றவர் பொன்னுலக்காளப் புகழினால் அருள் ஈந்தமை யறிந்து, மிக்க நின் கழலே தொழுதரற்றி, வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் அக்கணிந்த எம்மானுனை யடைந்தேன்” (ஆவடு) என நம்பியாரூரர் கூறுவர். இதுபற்றியே, “நின் அடிக்கு அன்பின்றி வேர்ப்பாளர் தமக்கும் விருந்தளித்தாய்” என்று கூறுகின்றார். வேர்ப்பாளர் - வேர்ப்பவர்; வேர்த்தல் - சினமுற்றுப் பகைத்தல். “பொள்ளென ஆங்கே புறம் வேரார்” (குறள்) என்பது காண்க. மனத்திற் பகை கொண்டு சொல்லிலும் செயலிலும் காட்டுபவரை “வேர்ப்பாளர்” எனவும், தம்மை வெறுப்பாரைத் தாம் வெறாது அருளுவது புதுமையாதலால், சிவன் அவர்கட்கு அருள் புரிந்த செயலை “விருந்தளித்தாய்” எனவும் விளம்புகிறார். விருந்து - புதுமை. வெள்ளிமலையை எடுத்த இராவணனைக் “கார்ப்பாளன்” என்று கூறுகிறார். கார்ப்பாளன் - கரிய நிறம் கொண்டவன்; கார்ப்பு - ஈண்டுக் கருமை நிறத்தைக் குறிக்கிறது. இராவணன் என்ற சொல்லே இரவிருளின் நிறைமுடையவன் என்று பொருள்படுவது காண்க. இராவணனுக்கு முக்கோடி வாழ்நாளும் இவர்கட்கெல்லாம் அருள் புரிந்த நீ, இவர்கள் எல்லார்க்கும் கடையவனாயினும் என்க்கு அருள வேண்டும் என்பாராய், “கடையேன் துயரும் தீர்ப்பாய்” என வேண்டுகின்றார்.

     இதனால், திரிபுரத் தசுரர், இராவணன் முதலிய பலர்க்கும் கடையானவனாயினும் என் துயர் தீர்த்து அருள வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (4)