2407.

     நானே னக்குப் பணிசெயல்
          வேண்டும்நின் நாள்மலர்த்தாள்
     தானே எனக்குத் துணைசெயல்
          வேண்டும்தயா நிதியே
     கோனே கரும்பின் சுவையேசெம்
          பாலொடு கூட்டுநறும்
     தேனே வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புள்ளிருக்கு வேளூர் வயித்தியநாதப் பெருமானே, தேவர்கள் சிகாமணியே, சிவக்கக் காய்ந்த பாலொடு கூட்டிக் கலந்த தேனே, கரும்பினிடத்துப் பெறும் இனிமைச் சுவையே, தலைவனே, அருட் செல்வமே, உனக்குரிய திருப்பணிகளை நானே செய்தல் வேண்டும்; எனக்குப் புதிது மலர்ந்த பூப்போன்ற உன் திருவடிகளே துணைபுரிய வேண்டும். எ.று.

     சிவக்கக் காய்ந்த பாலின் உயர்வு தோன்ற “செம்பாலொடு” எனச் சிறப்பிக்கின்றார். “ஒரு வினையொடுச் சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பியம். கரும்பினது சாற்றில் கலந்து நிற்பது இனிய சுவையாதலால் “கரும்பின் சுவையே” எனவுரைக்கின்றார். சுவையுடைய பொருள்கள் பலவற்றிற் காணப்படும் சுவைப் பண்புகளில் கரும்பின் சுவைப் பண்பு மிக்கதென்பது விளங்க, “கரும்பு இன்சுவை” எனப்பட்டதெனினும் அமையும். நீதியே வடிவாய தலைவன் என்றற்குக் “கோனே” எனவும், திருவருட் செல்வனென்றற்குத் “தயாநிதி” எனவும் உரைக்கின்றார். செய்பணியின் பயன் செய்வாரை யடைவது முறையாதலால் “நானே நினைக்கும் பணி செயல் வேண்டும்” என்றும், நின்னேவல்வழி நிற்போரினும் நீயே வந்து துணை புரிவது மிக்க நலம் தருவதோடு, எனக்கு மேன்மையும் தருவதென்ற கருத்தால், “நின் நாண் மலர்த்தாளே எனக்குத் துணை செயல் வேண்டும்” என்றும் விண்ணப்பிக்கின்றார். அன்றலர்ந்த பூ - நாண்மலர் எனப்படும்; காலை மலர்ந்து வண்டு மூசாத பூ என்றும் சொல்லப்படும்.

     இதனால் நானே நினக்குரிய பணியைச் செய்யவும், நீ தானே வந்து துணை செய்யவும் ஆகிய வரம் தருக என வேண்டியவாறாம்.

     (5)