2408.

     மருவார் குழலியார் மையல்
          கடல்விழும் வஞ்சநெஞ்சால்
     வெருவா உயங்கும் அடியேன்
          பிணியை விலக்குண்டாய்
     உருவாய் அருவும் ஒளியும்
          வெளியும்என் றோதநின்ற
     திருவார் வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     உருவும் அருமாகியவன், ஒளியும் வெளியுமாகியவன் என்று உணர்ந்து ஓத நிற்கும் திருவுடைய புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனே, தேவர்களின் சிகாமணியே, மணம் கமழும் கூந்தலையுடைய மகளிரது காம மயக்கமாகிய கடலில் வீழ்ந்தழுந்தும் வஞ்சம் பொருந்திய நெஞ்சினால் அச்சம் உற்று வருந்துகின்ற அடியேனுக்கு உண்டாகும் நோயைப் போக்கியருள்வாயாக. எ.று.

     சிவபரம்பொருளை உருவென்றும், அருவென்றும், அருவுருவென்றும் சான்றோர் கூறுவதுண்மையின், “உருவாய் அருவும்” என்று கூறுகிறார். “உருவும் அருவும் உருவோடருவும் மருவு பரசிவன்” (திருமந். 1763) என்று திருமூலர் உரைப்பர். ஒளியும் அது பரவும் வெளியும் எல்லாம் பரசிவம் என்றும் பெரியோர் குறிப்பதால், “ஒளியும் வெளியுமென்றோத நின்ற வவிந்திய நாதன்” என விளம்புகிறார். திரு - அருட்செல்வம். மரு - நறுமணம். உருவில்லாத உயிர்க்கு உருவாகும் உடலளிக்கும் பெண்மை நலமும், அதற்குரிய பணிபுரிதற்கு இன்றியமையாத காமமும், மகளிரின் கண்ணிலும் முகத்திலும் வெளிப்பட்டு ஆடவர் அறிவை மயக்குதலால், “மருவார் குழலியர் மையல்” எனவும், நுகருந்தோறும் புத்தின்பம் பயந்து முடிவின்றிப் பிறங்குவதால் “மையற் கடல்“ எனவும் இயம்புகிறார். காம மயக்கம் நெஞ்சை முதற்கண் பற்றி அறிவை இயக்குவது கொண்டு, மயக்கத்துக்கு இடந்தந்து இரையாவதுபற்றி, “வஞ்ச நெஞ்சம்” எனவும் இசைக்கின்றார். வஞ்சிக்கப்படுவதால் “வஞ்ச நெஞ்ச”மாயிற் றென்பதுமுண்டு. காம நுகர்ச்சியின் சிறுமையும் நோய் செய்யும் தன்மையும் அறியும் அறிஞர் அதற்கு அஞ்சுவதனால், “வெருவாவுயங்கு மடியேன்” என விளம்புகிறார். வெருவுதல் - அஞ்சுதல். உய்ங்குதல் -வருந்துதல். காம இச்சையாற் பிணிப்புண்டு வருந்தும் குற்றம் தமக்கு எய்தாவாறு காத்தல் வேண்டும் என்பாராய், “பிணியை விலக்கு கண்டாய்” என வேண்டுகிறார். கண்டாய்; முன்னிலை யசை.

     இதனால், காம நோய்க்கு இரையாகாமற் காத்தருள்க என முறையிட்டவாறாம்.

     (6)