2409.

     தவநேய மாகும்நின் தாள்நேய
          மின்றித் தடமுலையார்
     அவநேய மேற்கொண் டலைகின்ற
          பேதைக் கருள்புரிவாய்
     நவநேய மாகி மனவாக்
          கிறந்த நடுஒளியாம்
     சிவனே வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புதுமையமைந்த ஞானப் பொருளாய் மன மொழிகளின் எல்லையைக் கடந்து உள்ளக் காட்சியின் நடுவே தோன்றும் ஒளியுருவாகிய சிவபெருமானே, புள்ளிருக்கு வேளூர் வயித்தியநாதனே, தேவர் சிகாமணியே, மிக்க பெரும் நேசமாகிய நின்னுடைய திருவடிக்கண் அன்பின்றி, பருத்த முலைகளையுடைய மங்கையர்பால் வீணாண ஆசைகொண்டு அலைந்தொழுகும் அறிவில்லாதவனாகிய எனக்கு அருள் செய்வாயாக. எ.று.

     முன்னைத் தவத்தால் விளைவதாகலின், மெய்யுண்ர்வை “நவநேயம்” எனக் குறிக்கின்றார். ஞானத்தாற் பெறப்படும் மெய்யுணர்வு ஞேயமெனப்படும்; ஞேயம், நேயமென்றாயிற்று. அஃது உரையுணர்வு கடந்ததாகலின், மன வாக்கு இறந்தது எனவும், ஞானக்கண் கொண்டு நடுவாகிய சிந்தையிற் காண்பார்க்கு ஞானவொளியாய்க் காட்சிப் படுதலால், “நடுவொளியாம் சிவன்” எனவும் எடுத்துரைக்கின்றார். “உத்தமர்க்கு ஞானச்சுடராய் நடுவே உதிப்பன” (ஐயாறு) என நாவுக்கரசர் நவில்வதறிக. மிகுதிப் பொருளதாகிய தவவென்னும் உரிச்சொல் ஈண்டு, பெருமை குறித்தது. சிவனுடைய திருவடியன்பு திருவடிப் பெருஞானமாதலால், அதனைத் “தவநேயமாகும் நின் தாள் நேயம்” என்று எடுத்துரைக்கின்றார். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” (ஞான. புரா.) எனச் சேக்கிழார் கூறுவது காண்க. தட முலை - பருத்த முலை. மங்கையர் நேசம் ஞானவின்பம் நல்காமல் நோய் தருதலால், அதனை “அவநேயம்” என வுரைக்கின்றார். நேசம், நேயமெனவும் வழங்கும். பேதைக்கு அருளலென்பது, பேதைமை போக்கி ஞானவானாக்குவது.

     இதனால், மகளிற்பாற் செய்கின்ற நேசத்துக் கேதுவாகிய பேதைமையைப் போக்கி திருவடிக்கன்பு செய்யும் ஞானவானாக்குக என வேண்டியவாறாம்.

     (7)