2410.

     ஐவாய் அரவில் துயில்கின்ற
          மாலும் அயனும்தங்கள்
     கைவாய் பதைத்துப் பணிகேட்க
          மேவும்முக் கண்அரசே
     பொய்வாய் விடாஇப் புலையேன்
          பிழையைப் பொறுத்தருள் நீ
     செய்வாய் வயித்திய நாதா
          அமரர் சிகாமணியே.

உரை:

     புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனாகிய தெய்வ சிகாமணியே, ஐந்துதலை நாகத்தில் அறிதுயில் கொள்கின்ற திருமாலும் பிரமதேவனும் நினது திருமுன்னே கையால் வாயைப் பொத்திக் கொண்டு கட்டளையை எதிர்நோக்கி நிற்க வீற்றிருக்கும் மூன்று கண்களையுடைய அருளரசே, பொய் பேசுவதைக் கைவிடுதல் இல்லாத புலையனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்து என்னை ஆண்டருள்க. எ.று.

     தலைக்கொரு வாயாக ஐந்து வாய் கொண்டதனால் “ஐவாய் அரவு” என்று கூறுகின்றார். அரவின்மேற் கிடந்துறங்கினும் உலகனைத்திலும் நிகழ்வதை இனிதறியும் சிறப்புப்பற்றி, திருமாலின் உறக்கத்தை “அறி துயில்” என்பது வழக்காயிற்று. உலகங்களைக் காப்பது திருமாலுக்கும், படைப்பது பிரமனுக்கும் தொழிலாயினும், அவற்றை முறையாகச் செய்விப்பவன் சிவனாதலால், செய்பணி வேண்டி அவ்விருவரும் நிற்கும் திறத்தை, “கைவாய் புதைத்துப் பணி கேட்க மேவும் முக்கண் அரசே” என மொழிகின்றார். “அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான், அரனாய் அழிப்பவனும் தானே, பரனாய் தேவர் அறியாத தோற்றத்தான்” (ஞான வுலா) எனச் சேரமான் பெருமாள் தெரியவுரைப்பது காண்க. இடையறாது பொய்யே பேசும் கீழ்மைபற்றி “பொய்வாய் விடா இப்புலையேன்” என்று புகல்கின்றார். புலையன் - கீழ்மகன். எனது பொய்ம்மைக் குற்றத்தைப் போக்கி மெய்யனாக்கி அருள்க என்பாராய், “நீ பிழையைப் பொறுத்தருள் செய்வாய்” என்று வேண்டுகிறார்.

     இதனால் பொய் கூறும் எனது தன்மையை மாற்றி மெய்யே யுரைப்பவனாக்குதல் வேண்டு மென்றாராம்.

     (8)