2411. புல்வாயின் முன்னர்ப் புலிப்போத்
தெனஎன்முன் போந்துநின்ற
கல்வாய் மனத்தாரைக் கண்டஞ்சி
னேனைக் கடைக்கணிப்பாய்
அல்வாய் மணிமிடற் றாரமு
தேஅருள் ஆன்றபெரும்
செல்வா வயித்திய நாதா
அமரர் சிகாமணியே.
உரை: புள்ளிருக்கு வேளூர் வயித்தியநாதப் பெருமானே, தேவர்களின் சிகாமணியே, இருண்ட நிறமுடைய மணிபோன்ற கழுத்தையுடைய பெறற்கரும் அமுதமாகியவனே, திருவருள் நிறைந்த பெரிய செல்வனே, மானின்முன் போந்து நிற்கும் ஆண்புலி போன்ற கல் மனமுடையவரைக் கண்டு அஞ்சுகின்ற என்பால் அருட்பார்வை செலுத்தி ஆட்கொள்வாயாக. எ.று.
“அண்ணலார் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதி” (பிரம) என ஞானசம்பந்தர் முதலியோர் ஓதுவதால், “அருளான்ற பெருஞ் செல்வா” எனப் போற்றுகின்றார். அல்வாய் மணி - இருளின் நிறம் கொண்ட நீல மணி. பொன்னிற மேனியில் நஞ்சுண்டு கறுத்த திருக்கழுத்து மணி நிறமும் ஒளியும் கொண்டு திகழ்வது மிக்க அழகு செய்வது பற்றி, அதனை விதந்து கூறுகிறார். சிவனது அருள் பெற்றோர் சிவானந்தச் செல்வராய்ப் பிறவாப் பெருவாழ்விற் பிறங்குதல்பற்றி, “ஆரமுதே” எனப் புகழ்கின்றார். புல்வாய் - மான். புலிப்போத்து - புலியின் ஆண். நேர் பட்டாரை இரக்கமின்றித் துன்புறுத்தும் கொடிய மக்களைக் “கல்வாய் மனத்தர்” எனவும், அவர்கள் தீயினும் அஞ்சப்படுவது பற்றி, “அஞ்சினேன்” எனவும் இயம்புகின்றார். கடைக்கணித்தல் - கண்ணாற் பார்த்து அருள் செய்தல்.
இதனால் கன் மனமுடைய வஞ்சகரிடைப் படாமற் காத்தருள வேண்டியவாறாம். (9)
|