2412. ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய்
தாய்என்னை அன்பர்கள்பால்
சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும்
தீர்த்துத் திருஅருட்கண்
பார்த்தாய் பரம குருவாகி
என்னுள் பரிந்தமர்ந்த
தீர்த்தா வயித்திய நாதா
அமரர் சிகாமணியே.
உரை: உயர்ந்த குரு முதல்வனாய் தோன்றி உள்ளத்தில் அன்புடன் எழுந்தருளும் தீர்த்தனே, புள்ளிருக்கு வேளூர்த்தலைவனாய்த் தேவர்கள் சிகாமணியாய்த் திகழ்பவனே, முழங்குகின்ற நிறைந்த கடலிடத் தெழுந்த நஞ்சினை யுண்டருளியவனே, எளிய என்னை நினக்குரிய மெய்யன்பர்கள் கூட்டத்தில் சேர்ந்து என் துன்பங்கள் அனைத்தையும் போக்கித் திருவருள் ஞானக்கண்ணால் பார்த்தருளினாய்; என்னே நின் அருளிருந்தவாறு! எ.று.
பரமகுரு - உயரந்ததாகிய சிவஞானத்தை அறிவுறுத்தும் ஞானாசிரியன் - ஞானமுணர்த்தும் ஆசிரியனை மாணவன் தன் மனத்தின்கண் வைத்து வழிபடும் மரபு விளங்க, “குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த தீர்த்தா” எனப் பரவுகின்றார். தீர்த்தன் - துன்பத்துக் கேதுவாகிய வினைத் தொடர்பை நீக்கினவன்; இது தீர்த்தா என விளியேற்றது. “பூந்துருத்திந் நகர்த் தீர்த்தன் சேவடிக் கீழ் தாம் இருப்பதே” எனவும், “தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே” (ஐயாறு) எனவும் நாவுக்கரசர் ஓதுவது காண்க. “பிறிவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்” (திருவெம்பா) என்பர் மணிவாசகப் பெருமான். எப்போதும் அலைகளின் முழக்கம் நிறைந்திருக்கும் இயல்புபற்றிக் கடலை, “ஆர்த்தார் கடல்” என உரைக்கின்றார். அடியார் கூட்டம் அல்லலின்றிச் சிவஞானச் சூழலிலேயே இருப்பதுபற்றி, “என்னை அன்பர்கள்பால் சேர்த்தாய்” என மகிழ்கின்றார். “விடையூரும் எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லை” (சிராப்பள்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அன்பர் கூட்டத்தைச் சேர்ந்தமையால் “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என நினைவு தோன்றி மகிழ்விப்பது விளங்க, “துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருவருட்கண் பார்த்தாய்” என்று சொல்லுகின்றார். துன்பம் தீராவழிச் சிந்தைதிருவருள் ஞானத்தில் தோயாதாதலால், துன்பம் தீர்த்து அருணோக்கம் நல்கினாய் என நவில்கின்றாரென அறிக.
இதனால் துன்பம் துடைத்துத் திருவருள் நாட்டம் நல்கினமை நவின்றவாறாம். (10)
|