2413. அறத்தாயை ஓர்புடை கொண்டோர்
புடைமண் அளந்தமுகில்
நிறந்தாயை வைத்துல கெல்லாம்
நடத்தும் நிருத்தஅண்டப்
புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு
மெய்யருள் போதந்தந்த
திறத்தாய் வயித்திய நாதா
அமரர் சிகாமணியே.
உரை: புள்ளிருக்கு வேளூர் வயித்திய நாதனாகிய தேவர் சிகாமணியே, அறம் வளர்க்கும் தாயாகிய உமையம்மையை ஒரு புடையும், மண்ணுலகை யளந்த நீல மேகத்தின் நிறத்தையுடைய திருமாலாகிய தேவியை ஒரு பக்கமும் கொண்டு, உலகனைத்தும் இனிது இயங்கச் செய்யும் கூத்தப் பெருமானே, அண்டமனைத்துக்கும் அப்பாலாகியும் என்னுடைய துன்பத்தைப் போக்கி மெய்ம்மையான திருவருள் ஞானத்தை வழங்கிய கூறுபாடு உடையனாயினாய்; உன்னை மறவேன். எ.று.
கச்சி மாநகரில் காமக்கோட்டத்திருந்து உமாதேவி அறம் முப்பத்திரண்டும் வளர்த்தாள் என்னும் வரலாறுபற்றி, அவளை இங்கே “அறத்தாய்” என்று சிறப்பிக்கின்றார், அறத்தாய் - அறம் வளர்க்கும் தாய். “நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த நாரிரும் பொழிற் கச்சி மூதூர்க் காமக்கோட்டமுண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வதென்னே” (ஓணகாந்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. ஒருபால் திருமாலைத் தேவியாக வுடையவர் என்பராதலால், “ஓர்புடைமண்ணளந்த முகில் நிறத் தாயை வைத்து” என இயம்புகின்றார். “அரியலால் தேவியில்லை” (ஐயாறு) என நாவுக்கரசர் உரைப்பது காண்க. உலகுயிர் இனிது உய்யும் பொருட்டு இறைவன் அம்பலத்தில் ஆடுகின்றான் என்ற திருப்பாசுரக் கருத்தைக் கொண்டு, “உலகெல்லாம் நடத்தும் நிருத்த” என்றும் கூறுகின்றார். அண்டங்களைனைத்தும் அப்பாலாய் உள்ளான் எனச் சான்றோர் கூறுதலால், “அண்டப் புறத்தாய்” என்கின்றார். “அண்டத் தண்டத்தின் அப்புறத்தாடும் அமுதன்” (நாட்டுத்) என்று நம்பியாரூரர் கூறுவர். அருட்போதம் - அருள் ஞானம். அண்டத்துக்கு அப்பாலனாயினும் இப்பால் எம்பால் எளியனாய் வந்து ஞானமருளும் திறமும் அப்பெருமானுக்கு உண்டென்பார், “என் துன்பம் துடைத்தாண்டு மெய்யருட் போதம் தந்த திறத்தாய்” எனத் தெரிவிக்கின்றார். “என்னிற் கருணை வான்றேன் கலக்க, அருளொடு பராவமு தாக்கினன்” (அண்டப்) என மாணிக்கவாசகர் உரைப்பதறிக.
இதனால் அண்டத்துக்கப்பால் அரியனாகியும் இப்பால் எமக்கு ஞானவின்பம் நல்கினான் எனச் சிவனது திருவருள் நலம் தெரிய வுரைத்தவாறாம். (11)
|